

அலுவலகத்திலும் வீட்டிலும் எப்போதும் புராஜெக்ட் குறித்த திட்டமிடல்கள், அதைச் சரியான ஆட்களைக் கொண்டு குறித்த நேரத்துக்குள் முடிப்பதற்காக 24 மணி நேரமும் தன்னுடைய அலுவலகப் பணிகள் குறித்தே சிந்தித்துக் கொண்டிருப்பவன் கார்த்திக். அவனுடைய மனைவி ஜனனியும் பிரபலமான நிறுவனத்தில் முக்கியமான பணியில் இருப்பவர். இவர்களின் குழந்தை ஆர்த்தி.
குழந்தையின் பள்ளி விழா, தங்களது திருமண நாள் இப்படி எல்லாவற்றையும் மறந்துவிட்டு, தவிர்த்து விட்டு, வேலை... வேலை... என்று இயந்திரத்தனமாக ஓடிக் கொண்டிருக்கிறான் கார்த்திக்.
வீட்டு வேலைகளிலும் வீட்டைப் பராமரிப்பதிலும் கார்த்திக் கொஞ்சம் பொறுப்பெடுத்துக் கொள்ள வேண்டும் என்னும் ஜனனியின் எதிர்பார்ப்பு நிறைவேறவே இல்லை. திருமணமாகி ஐந்து ஆண்டுகள் ஆகியும் வீட்டுப் பணிகளைச் சேர்ந்து செய்வதற்கு கார்த்திக் தயாராக இல்லை. வீட்டு வேலைகள், அலுவலகப் பணிகள், குழந்தையின் கல்வி, பள்ளியில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்குச் செல்வது என எல்லாவற்றிலும் ஜனனியே கவனம் செலுத்த வேண்டிய கட்டாயம் தொடர்கிறது. ஒரு கட்டத்தில் ஜனனி தன்னுடைய பணியை பெங்களூருவிலிருந்து சென்னைக்கு மாற்றிக் கொள்கிறாள். அத்துடன் கார்த்திக் உடனான மணவாழ்க்கையை முறித்துக்கொள்வதற்கும் தயாராகிறாள். இதற்காகத் தன்னுடைய பிறந்த வீட்டிற்கு வருகிறாள். மனைவி, குழந்தை இல்லாமல் கார்த்திக்கின் நிலை என்னவாகிறது? என்பதுதான் நாடகத்தின் கதை.
மூன்று தலைமுறையைச் சேர்ந்த பெண்களின் வாழ்க்கை முறை, கல்வி, பொறுப்புகள் போன்றவற்றை உள்ளீடாகக் கொண்டு நேர்த்தியாக நாடகத்தை எழுதி இயக்கியிருக்கிறார் தாரிணி கோமல். ஒவ்வொரு கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தையும் மிகவும் அருமையாக வெளிக்கொணர்ந்திருக்கிறார். கொள்ளுப்பாட்டி, ஜனனியின் தங்கை ஹரிணி, குழந்தை ஆர்த்தி என ஒவ்வொருவரும் போட்டிபோட்டுக் கொண்டு நடித்துள்ளனர்.
ஒட்டுமொத்த குடும்பத்தோடு நாடகத்தையும் தாங்கிப் பிடித்திருக்கிறார் கொள்ளுப்பாட்டியாக நடித்திருக்கும் உஷா ரவிச்சந்திரன். ஹரிணியின் நண்பர் அர்ஜுன் பெண்ணின் சக்தியை உணர்ந்தவராக, அதை ஹரிணிக்கு உணர்த்துபவராகச் சித்தரிக்கப்பட்டிருப்பது சிறப்பு. மாறாக, ஜனனியின் பிரச்சினையைத் தீர்க்க எந்தவிதமான முயற்சியும் அவரது பெற்றோர் எடுக்கவில்லை. அவர்கள் உண்டு அவர்கள் வேலை உண்டு என இருக்கிறார்கள். ஆண், பெண் இருவரும் பணிக்குப் போகும் தலைமுறையின் சறுக்கல் இது.
நாடகக் காட்சிகளை அரங்கத்தில் பத்மா ஸ்டேஜ் கண்ணனின் கலை யதார்த்தமாகக் கொண்டுவந்திருந்தது. மயிலை பாபுவின் ஒளிச் சேவையும் குஹப்ரச்சாதின் ஒலிச் சேவையும் நாடகத்தோடு ரசிகர்கள் ஒன்றுவதற்குத் துணைபுரிந்தன.
கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸின் கோடை நாடக விழாவில் கோமல் தியேட்டர்ஸின் இந்த நாடகம், சிறந்த கதை, இயக்கம் உள்ளிட்ட 10 பிரிவுகளில் சிறந்த நாடகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.
இந்த நாடகத்தைப் பார்க்கும் பெற்றோர் தங்களின் ஆண், பெண் குழந்தைகள் இருவருக்கும் வீட்டுப் பணிகளை பகிர்ந்துகொண்டு செய்வற்குப் பழக்கினால் அதுவே இந்த நாடகத்தின் உண்மையான வெற்றியாக அமையும்.