

கோவை மாவட்டத் திருநங்கைகள் நலச் சங்கத்தின் செயலாளர் வீணா யாழினி. திருநங்கையாக மாறி 18 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. திருநங்கைகைளைத் தினந்தோறும் பொதுச் சமூகத்துடன் இணைக்கும் நோக்கத்துடன் பொள்ளாச்சியில் ‘டிரான்ஸ் கிச்சன்' என்னும் பெயரில் உணவகம் நடத்தி வருகிறார்.
இதற்கு முன்பு திருநங்கைகள் இணைந்து ‘கோவை டிரான்ஸ் கிச்சன்’ என்னும் பெயரில் கோவையில் உணவகம் தொடங்கினார்கள்.
“முன்பெல்லாம் திருநங்கைகள் திருமண வீடுகளிலும் வீட்டு விசேஷங்களிலும் பெரிய அளவில் சமைத்துப் பரிமாறிய அனுபவம் மிக்கவர்கள். எங்களது உணவின் சுவையைப் பாராட்டி வாழ்த்திச் செல்வார்கள். ஆனால், அவர்கள் நடத்தும் தொழில் நிறுவனங்களுக்கும் கடைகளுக்கும் திருநங்கைகள் சென்று யாசகம் கேட்கும்போது திட்டி விரட்டுவார்கள். இந்தச் சமூகம் எங்களுடைய திறமைகளை ஏற்றுக் கொண்டு பாராட்டுகிறது. ஆனால், இப்படி யாசகம் கேட்பதை ஏற்கவில்லை என்பது புரிந்தது” என்கிறார் ஸ்ரீவீணா யாழினி.
அதனால் தங்களுக்குப் பாராட்டு பெற்றுத் தந்த சமையலையே ஆதாரமாக வைத்துத் தொழில் தொடங்க அவர்கள் முடிவெடுத்துள்ளனர். தங்கள் சங்கத்துக்குத் தலைவராக இருந்த சங்கீதா தலைமையில் ‘கோவை டிரான்ஸ் கிச்சன்' என்னும் பெயரில் உணவகம் தொடங்கினர். குடும்பத்தில் உள்ளவர்களுக்குச் சமைப்பதுபோல் பார்த்துப் பார்த்துச் சமைத்தனர். அக்கறையோடு கைப்பக்குவமும் சேர்ந்துகொள்ள இவர்கள் தயாரித்த உணவு தனிச் சுவையோடு இருந்தது. சாப்பிட்டவர்கள் அனைவரும் பாராட்டிச் சென்றனர். ‘கோவை டிரான்ஸ் கிச்ச'னுக்குப் பொதுமக்களிடம் சிறப்பான வரவேற்பு கிடைத்தது. ஆனால், அந்த மகிழ்ச்சி நெடுநாள் நீடிக்கவில்லை. கரோனா பொதுமுடக்கமும் வேறு சில காரணங்களுமாக வியாபாரத்தைப் பாதிக்க, உணவகத்தைத் தொடர்ந்து நடத்த முடியவில்லை. தற்போது பொள்ளாச்சியில் உணவகம் தொடங்கியுள்ளனர்.
“சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்ட திருநங்கைகளிடம் மார்கெட்டிங், மேக்கப் போடுதல், நாட்டுப்புறப் பாடல் பாடுவது உள்ளிட்ட பல்வேறு திறமைகள் உள்ளன. அவற்றைத் திருநங்கைகள் நல வாரியம் கண்டறிந்து வெளிக்கொண்டு வந்தால் அவர்களைப் பொருளாதாரரீதியாக மேம்படுத்த முடியும். பொள்ளாச்சியில் மட்டும் 80க்கும் மேற்பட்ட திருநங்கைகள் வசிக்கின்றனர். அவர்களுக்குச் சொந்த வீடு கிடையாது. அரசு இலவச இடம் கொடுத்தது. ஆனால், மத்திய, மாநில அரசுகளின் வீடு கட்டும் திட்டத்தில் வீடு கட்ட அணுகினால், ‘அஸ்திவாரம் போடுங்கள், பிறகு கடன் தருகிறோம்’ என்கிறார்கள். அஸ்திவாரம் போட ரூ.3 லட்சம் செலவாகிறது. அவ்வளவு பணத்துக்குத் திருநங்கைகள் எங்கு செல்வார்கள்?
திருநங்கைகளுக்கு உளவியல் ரீதியாக உதவுவது அவர்களிடம் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாது. அவர்களைப் பொருளாதார ரீதியாக உயர்த்துவதுதான் இப்போது அவசியமானது. திருநங்கைகள் என்றாலே பாலியல் தொழிலில் ஈடுபடுவர்கள் என்ற பொதுச்சமூகத்தின் எண்ணம் மாற வேண்டும். திருநங்கைகளுக்கு நல்ல வழிகாட்டுதலும் படிப்பு இருந்தால் அவர்களுக்குச் சமூகத்தில் மதிப்பு கிடைக்கிறது. எங்களின் பாலினத்தைக் காரணம் காட்டி எங்களை ஒதுக்குவது வேதனையை அளிக்கிறது. திருநங்கைகளிடம் சாதி, மத வேறுபாடு கிடையாது என்பதால் திருநங்கைகளை நினைத்துப் பெருமையாக உள்ளது. பொருளாதார ரீதியான மாற்றமே எங்கள் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும்” எனத் தங்கள் நிலையை ஸ்ரீ வீணா பகிர்ந்துகொண்டார்.