

அமெரிக்க நடிகர்களும் முன்னாள் தம்பதியுமான ஆம்பர் - ஜானி டெப் தொடர்பான வழக்கு, வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சமூகம் தன் பெண் வெறுப்பை வெளிப்படுத்தத் தவறுவதில்லை என்பதை உணர்த்தியுள்ளது.
தான் குடும்ப வன்முறைக்கு ஆளாக்கப்பட்டதாக இங்கிலாந்து, அமெரிக்க இதழ்களில் எழுதினார் ஹாலிவுட் நடிகை ஆம்பர். அவற்றில் எந்த இடத்திலும் தன் முன்னாள் கணவர் ஜானி டெப்பின் பெயரை அவர் குறிப்பிடவில்லை. ஆனால், மனைவியை அடிக்கும் நபராகத் தன்னைத் தவறாகச் சித்தரித்ததாகக் கூறி பிரிட்டன் இதழான ‘தி சன்’ மீது ஜானி டெப் வழக்குத் தொடுத்தார். 2020இல் வழங்கப்பட்ட அந்த வழக்கின் தீர்ப்பு ஜானி டெப்புக்குப் பாதகமாக முடிந்தது.
‘குடும்ப வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட நடிகை’ என்று அமெரிக்க இதழான ‘தி வாஷிங்டன் போஸ்ட்’டில் தன்னைப் பற்றி 2018இல் ஆம்பர் எழுதினார். ஆம்பரின் இந்தச் செயலால் தன் நற்பெயருக்குக் களங்கம் விளைந்துவிட்டதாகவும் பட வாய்ப்புகள் மறுக்கப்படுவதாகவும் ஜானி டெப் அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். இந்த வழக்கை, பரபரப்பான திரைப்படம் போலவே ஊடகங்கள் காட்சிப்படுத்தின.
பொதுமக்களில் பெரும்பாலானோர் ஜானி டெப்புக்கு ஆதரவாகச் சமூக வலைத்தளங்களில் கருத்துப் பகிர்ந்தனர். ஆரம்பம் முதலே ஆம்பர் தவறானவராகவும் உண்மையைத் திரித்துப் பேசுபவராகவும் சித்தரிக்கப்பட்டார். ஆம்பரை மோசமாகச் சித்தரித்த வீடியோக்கள் வைரலாகின. ‘ஸ்டாண்ட்வித்ஜானிடெப்’ என்கிற ஹேஷ்டேகுடன் வெளியிடப்பட்ட வீடியோ 1,900 கோடிக்கு அதிகமான முறை பார்க்கப்பட்டது.
மே 1 அன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. நடிகர்கள் இருவருமே பாதிக்கப்பட்டிருந்தாலும் ஜானி டெப்புக்குத்தான் சேதாரம் அதிகம் என்கிற வகையில் தீர்ப்பு அமைந்தது. ஆம்பர் தன் முன்னாள் கணவர் ஜானி டெப்புக்கு 100 லட்சம் டாலர் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று வழங்கப்பட்ட தீர்ப்பைப் பெரும்பாலானோர் கொண்டாடினர். ‘குடும்ப வன்முறை வழக்கில் சாதகமான தீர்ப்பு பெற்ற முதல் ஆளுமை’ என்றும் சிலர் சமூக வலைதளங்களில் ஜானி டெப்பைக் கொண்டாடினர். கொண்டாடியவர்களில் பெண்களும் அடக்கம் என்பதுதான் வேதனை.
இந்த வழக்கில் ஜானி டெப் தன் முன்னாள் மனைவியை அடித்தாரா என்பதைவிட ஆம்பர் பொய் சொல்பவரா என்பதுதான் அதிகமாக விவாதிக்கப்பட்டு வழக்குத் திசை மாற்றப்பட்டதாக ஆம்பரின் வழக்கறிஞர் ஊடகங்களில் தெரிவித்துள்ளார். தீர்ப்புக்குப் பிறகு, ‘என்னிடம் மலையளவுக்கு ஆதாரம் இருந்தும் அவரது செல்வாக்கு, அதிகாரம் போன்றவற்றின் முன்னால் அது எடுபடவில்லை’ என்று ஆம்பர் அறிக்கை வெளியிட ஜானி டெப்போ, ‘என் வாழ்க்கையின் புதிய அத்தியாயம் இனிதான் தொடங்கவிருக்கிறது’ என்று அறிக்கை வெளியிட்டுள்ளார். நீதி என்று நாம் நம்புகிற விஷயம் ஆணுக்குச் சலுகையையும் பெண்ணுக்கு அநீதியையும் சில நேரம் கையளித்துவிடுகிறது.
குடும்ப வன்முறை, பாலியல் துன்புறுத்தல் போன்ற வழக்குகளில் போதுமான ஆதாரங்களோ சாட்சிகளோ இல்லாதபோது, பாதிக்கப்பட்ட பெண்கள் சொல்வதைக் குறைந்தபட்சம் காதுகொடுத்து கேட்க வேண்டும். அப்படியில்லாமல் பாதிக்கப்பட்டவரையே குற்றவாளியாக்க முயலும்போது, தட்டுத் தடுமாறி வெளிவரும் சிறுசிறு குரல்கள்கூட மொத்தமாக நசுக்கப்பட்டுவிடும் என்பதைத்தான் இந்த வழக்கும் உணர்த்துகிறது. ஆம்பருக்கு எதிராக அமைந்த இந்தத் தீர்ப்பு நீதி கேட்டு நிமிரும் பெண்களுக்கு அவநம்பிக்கையைத் தருவதாகவும் இருக்கிறது. வழக்கின் தீர்ப்பைவிட அதைக் கொண்டாடித் தீர்க்கும் ஆணாதிக்க மனநிலை மிகவும் ஆபத்தானது.
- ப்ரதிமா