

பூலோக சொர்க்கம், ஊழலே இல்லாத நாடு, உலகத்திலேயே சுத்தமான காற்று வீசும் நாடு, வடதுருவத்திற்கு அருகில் அமைந்துள்ள நாடு... இப்படி ஏகப்பட்ட சிறப்பம்சங்களைப் பற்றி கேள்விப்பட்டதிலிருந்து பின்லாந்து போக வேண்டும் என்று ஆசையாக இருந்தது. என் இந்த ஆசை நிறைவேறும் வாய்ப்பும் கிடைத்தது!
விமானம் மூலம் பின்லாந்து தலைநகரான ஹெல்சிங்கி சென்றடைந்தோம். மறுநாள் அந்த நகரைச் சுற்றிப் பார்த்தோம். பார்லிமென்ட் கட்டிடம், செனட் ஸ்குயர், உச்பென்சஸ்கி சர்ச், ராக் சர்ச், சிபெலஸ் நினைவிடம் என்று பல இடங்களைப் பார்த்தோம். ராக் சர்ச்சில் தமிழில் எழுதப்பட்ட வசனங்கள் அடங்கிய கைப்பிரதிகளைப் பார்த்தபோது அடைந்த மகிழ்ச்சியை வார்த்தைகளால் வடிக்க இயலாது.
மாலை அங்கிருந்து ரயிலில் ஏறி இரவு முழுவதும் பயணித்து மறுநாள் காலை வடபகுதியில் உள்ள ரோவேய்னமி என்ற இடத்தை அடைந்தோம். மிகவும் இனிமையான பயணம் அது. இரு பக்கமும் பனி நிறைந்த இயற்கைக் காட்சிகள். ரோவேய்னமியில் முதல் நாள் அருகிலுள்ள ரேணுவா என்ற வனவிலங்குப் பூங்காவுக்குச் சென்றோம். துருவக் கரடி, பிரவுன் கரடி, ஓநாய், ஆர்க்டிக் நரி, விதவிதமான ஆந்தைகள், பருந்துகள் என்று பலவகையான விலங்குகளைப் பனிக் குவியலுக்கிடையில் கண்டுகளித்தோம்.
அடுத்த நாள் ஹஸ்கி வகை நாய்கள் மற்றும் ஒரு வகை கலைமான்களால் இழுக்கப்படும் ஸ்லெட்ஜ் வண்டியில் அமர்ந்து பனிக் குவியல் மேல் பயணித்தது வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது.
மறுநாள் கெமி என்ற இடத்துக்குச் சென்று அங்கிருந்து பனிக்கட்டிகளை உடைத்துச் செல்லும் கப்பலில் உறைந்த கடலில் சென்ற அனுபவம் இந்த ஜென்மத்துக்குப் போதும். அந்தக் கப்பலில் குடித்த சூப்பின் சுவை இன்னும்கூட நாவில் இனிக்கிறது! நடுக்கடலில் கப்பல் நிறுத்தப்பட்டது. ஐஸ் கட்டிகளுக்கிடையில் நீந்தி மகிழும் வகையில் அதற்குரிய ஆடையைக் கொடுத்தார்கள். எங்கள் மகள், நான், என் கணவர் மற்றும் பேரன்கள் அனைவரும் அந்தக் கடலில் நீந்தி மகிழ்ந்தோம்.
அடுத்த நாள் சாண்டாகிளாஸ் கிராமத்துக்குச் சென்று கிறிஸ்துமஸ் தாத்தாவுடன் போட்டோ எடுத்துக்கொண்டோம். அன்று மாலை ஐஸ் ஹோட்டலுக்குச் சென்று சுற்றிப் பார்த்துவிட்டு, இரவு முழுவதும் கண்ணாடியால் அமைக்கப்பட்ட இக்ளூ ஹோட்டலில் தங்கினோம். சென்னை திரும்பிய பிறகும் பனியின் குளிர்ச்சி நினைவில் தங்கியிருக்கிறது.
- கிருஷ்ணமலா முருகன், சென்னை.
உங்கள் அனுபவம் என்ன? வாசகிகளே, நீங்களும் உங்கள் சுற்றுலா அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ளலாம். பார்த்த இடங்கள், படித்த பாடங்கள், பட்ட அவஸ்தைகள், மகிழ்ந்த தருணங்கள், சுவைத்த உணவு வகைகள்... இப்படி நினைத்துப் பார்க்க எத்தனையோ அனுபவங்கள் ஏற்பட்டிருக்கும் அல்லவா? அவற்றை, சுற்றுலாவில் நீங்கள் எடுத்துக்கொண்ட ஒளிப்படத்துடன் பகிர்ந்து கொள்ளுங்கள். மகிழ்வோம், அறிவோம்! |