விஸ்மயாக்களின் மரணங்களுக்கு யார் பொறுப்பு?

விஸ்மயாக்களின் மரணங்களுக்கு யார் பொறுப்பு?
Updated on
3 min read

கடந்த ஆண்டு கரோனாக் காலத்தில் கேரளத்தில் கொல்லம் அருகே விஸ்மயா என்னும் 22 வயதுப் பெண் வரதட்சிணைக் கொடுமையால் தற்கொலை செய்துகொண்டார். கேரளத்தை மட்டுமல்லாமல் தமிழகத்தையும் உலக்கியது இந்தச் சம்பவம். இது நடந்து 11 மாதம் இரு நாள்கள் ஆன நிலையில் விஸ்மயாவின் கணவர் இந்த வழக்கில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு அவருக்குப் பத்து ஆண்டுகள் சிறைத் தண்டனையை அறிவித்துள்ளது கொல்லம் கூடுதல் அமர்வு நீதிமன்றம்.

சமூகத்தில் பல நிலைகளில் இந்தத் தீர்ப்பு வரவேற்கப்பட்டுள்ளது. வரதட்சிணை கொடுமைக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பு எனப் பலரும் கருத்துத் தெரிவித்துவருகிறார்கள். ஆனால், மிகப் பழமையான இந்த வழக்கத்தை இந்த ஒரே ஒரு தண்டணை மூலம் அடியோடு துடைத்தழிக்க முடியுமா என்பது விடை காணாக் கேள்விதான்.

வரதட்சிணை எனும் கொடுமை

தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தின் அறிக்கையின்படி இந்தியாவில் 2020இல் 6,966 மரணங்கள் வரதட்சிணைக் கொடுமையால் நிகழ்ந்துள்ளன. வரதட்சிணை மரணங்களாகப் பதிவுசெய்யப்படாதவை இன்னும் கூடுதலாக இருக்கக்கூடும். வரதட்சிணை தடுப்புச் சட்டத்தின்படி (1961) 2020இல் 10,366 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. வரதட்சிணை சட்ட விரோதமானது என அறிவிக்கப்பட்டு அதற்கான தடுப்புச் சட்டம் இயற்றப்பட்டு 60 ஆண்டுகள் பூர்த்தியாகிவிட்டன. ஆனால், இன்றும் வரதட்சிணை முறை, இந்தியாவில் பரவலாகப் பின்பற்றப்படுகிறது. இதன் மூலம் பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் ஒரு சாதாரண நடைமுறையாகவே பார்க்கப்படுகின்றன. “வாழ்க்கை என்றால் அப்படித்தாம்மா இருக்கும்” என்ற தேய்வழக்குச் சொற்றொடரை இதனுடன் இணைத்துப் பார்க்கலாம். அதனால்தான் இம்மாதிரியான பிரச்சினைகள், காவல் நிலையம் செல்வது அரிதான நிகழ்வாக இருக்கிறது. வழக்காகப் பதிவுசெய்யப்படுவது அதனினும் அரிது. மரணம் நடக்கும்பட்சத்தில்தான் வழக்குகள் பதிவுசெய்யப்படுகின்றன. வரதட்சிணையால் ஏற்படும் தற்கொலைகள் வரதட்சிணை மரணங்களாகப் பதிவுசெய்யப்படுவதும் குறைவுதான்.

தொடர்கதையாகும் மரணங்கள்

விஸ்மயா வழக்கு விசாரணையில் தீர்ப்புக்காக நடந்த வாதப் பிரதிவாதத்தில் விஸ்மயாவின் கணவர் தரப்பு வழக்கறிஞர் சொன்ன ஒரு வாக்கியம்: ‘சூரியனுக்குக் கீழ் இது முதல் வரதட்சிணை மரணம் அல்ல’. இது பெரும் சர்ச்சை ஆனது. ஆனால், உண்மையில் விஸ்மயா தொடக்கம் அல்ல. அவருக்கும் முன்பும் பலர் இறந்திருக்கிறார்கள். பின்பும் இறக்கக்கூடும். அப்படியானால் இதற்குத் தீர்வுதான் என்ன?

விஸ்மயா வழக்கையே உதாரணமாக எடுத்துக்கொண்டால், அவரது எதிர்காலத்தின் மீது அவருடைய பெற்றோர் கொண்டிருந்த அக்கறையும் கேள்விக்கு உள்ளாகிறது. பெண் குழந்தைகளை, வளர்ப்பதே கட்டிக்கொடுப் பதற்குத்தான் என்கிற பொது மனநிலைதான் பரவலாக இருக்கிறது. திருமணம் அவர்களது வாழ்க்கையின் ஒரு பகுதி. ஆனால், திருமணத்துக்காகவே அவர்களை வளர்ப்பது எப்படி சரியாகும்? முறையான கல்வி, சமூகத்தில் தனித்தியங்கும் திறன் போன்றவற்றைக் கொடுக்க வேண்டியது பெற்றோரின் பொறுப்பு. ஆனால், பெண் குழந்தைகளை அச்சத்தின் காரணமாக நாம் பொது வாழ்க்கைக்குப் பழக்கப்படுத்துவதே இல்லை.

கைகொடுக்கும் கல்வி

விஸ்மயா, கல்லூரி இறுதி ஆண்டு படித்தபோதே அவருக்குத் திருமணம் நடத்த முடிவெடுக்கப்பட்டது. அவருக்கு அதில் விருப்பம் இருக்கவில்லை என அவருடைய தந்தை சொல்லியிருக்கிறார். படித்து முடிக்கத்தான் அவர் விரும்பியிருக்கிறார். இருபுறமும் நிராகரிக்கப்படும்போது அந்தக் கல்வி அவருக்கு ஒரு கரையாக இருந்திருக்கலாம். வேலைவாய்ப்பு என்கிற புதிய வாசல் திறக்கப்பட்டிருக்கலாம். கணவரின் வன்முறையை எதிர்கொண்ட காலகட்டத்தில் தன் தோழியருடன் பேசியபோது படிப்பை முடிக்காமல் திருமணம் செய்துகொள்ளாதீர்கள் எனச் சொல்லியிருக்கிறார் விஸ்மயா.

இரண்டாவது விஷயம், கணவர் வீட்டில் அனுபவித்த பிரச்சினைகளைத் தன்னுடைய தந்தையிடம் உடைந்த குரலில் சொல்லி அழுதிருக்கிறார். “நான் இந்த வீட்டில் இருந்தால், இல்லாமல் போய்விடுவேன்” எனச் சொல்லியிருக்கிறார். ஆனால், ஒரு சராசரி தகப்பனான அவருடைய தந்தை, “வாழ்க்கை அப்படிப்பட்டதுதான் மகளே” என மகளுக்குச் சமாதானம் சொல்லியிருக்கிறார். இது நடந்த சில நாட்களில் அந்த மகள் இல்லாமல் போய்விட்டார்.

கைவிட்டுவிடும் பெற்றோர்

விஸ்மயாக்களின் இறப்புகளில் கணவன், அவருடைய குடும்பத்தாருடன் இந்தப் பிரச்சினைகளில் பெண்வீட்டாருக்கும் பங்குண்டு. குழந்தைகள் எப்போதும் நம் குழந்தைகள்தாம். திருமணம் என்னும் சடங்கு, நடந்து முடிந்ததும் சட்டென அந்தக் குழந்தையை வேற்று ஆளாகப் பார்க்கும் நிலைக்குப் பெரும்பாலான பெற்றோர் வந்துவிடு கிறார்கள். அதையே அந்தப் பெண்ணிடமும் அறிவுறுத்துவார்கள். கணவனை மீறி அவளிடம் பேச, அழைத்துவர, பிரச்சினைகளில் ஈடுபட பெண்வீட்டார் துணிவது குறைவுதான். பெண் குழந்தைகள், காதல் திருமணம் செய்துவிட்டால், நிலைமை இன்னும் மோசம். அம்மாதிரியான காதல் திருமணங்களில் தோல்வி அடையும் பெண்களின் நிலை மிகப் பரிதாபமானது. எப்படி இருந்தாலும் அவர் தங்கள் மகள்தான் என்கிற உணர்வு பெற்றோருக்கு வருவதில்லை. இதனால், பெண்கள் நிர்கதியாகிறார்கள். ஆண்களுக்கு இம்மாதிரியான சமூகரீதியிலான பிரச்சினைகள் மிகக் குறைவு.

பெண்கள் விமானத்தை இயக்குகிறார்கள். இமயமலையில் ஏறுகிறார்கள். இன்னும் பல வேலைகளைச் செய்கிறார்கள். என்ன சொன்னாலும் உண்மையில் அவர்களுக்கு வீட்டுக்கு வெளியே ஓர் இடமும் இல்லை என்பதுதான் நிதர்சனம். போக்கற்றவர்களாகவே அவர்களைச் சமூகம் வைத்திருக்கிறது. விஸ்மயாவுக்குக் கணவன் வீட்டில் இருக்க முடியவில்லை. தான் பிறந்து இதுவரைக்கும் வளர்ந்த தன் பிரியத்துக்கு உரிய தந்தையும் தாயும் இருக்கும் வீட்டுக்குத் திரும்பவும் வாய்ப்பில்லை. இந்த இரு இடங்களுக்கு அப்பாற்பட்டுத் தனியாகச் சென்று பிழைக்க இந்தச் சமூகத்தில் வழியும் இல்லை. பிரச்சி னையை எதிர்கொண்டு மீள்வதற்கு வாய்ப்பும் வழங்கப்படுவதில்லை. இந்த நிலையில்தான் இவற்றிலிருந்து தப்பித்துக் கொள்ள தற்கொலையைத் தேர்ந்தெடுக்கிறார்கள் விஸ்மயாக்கள். இந்த மரணங்களை கணவரான ஆண்களோடு தந்தையான ஆண்களும் படிப்பினையாகக் கொள்ள வேண்டும். அதுவே நம் சமூகத்துக்கு இன்றைக்கு அவசியமாகிறது.

கட்டுரையாளர், தொடர்புக்கு: jeyakumar.r@hindutamil.co.in

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in