

சிகை அலங்காரம், ஒப்பனை போன்ற கலைகளில் இருபதாண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர் இலங்கேஸ்வரி முருகன். சென்னை, அண்ணாநகரில் பெண்கள், குழந்தைகளுக்கான ஃப்ரீஸிங் பியூட்டி பார்லரை நடத்திவரும் இவரது பெயர் பல சாதனைப் புத்தகங்களில் இடம்பெற்றுள்ளது.
இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ், தமிழ்நாடு புக் ஆஃப் ரெக்கார்ட் (200 அடி ஜடை பின்னியதற்காக), மல்டிபிள் ரெக்கார்ட் ஹோல்டர் (கண்களைக் கட்டிக்கொண்டு 50 பேருக்கு சிகையலங்காரம் செய்ததற்காக) போன்றவற்றில் இடம்பெற்றிருக்கிறார். புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ‘பால்ட் இஸ் பியூட்டிஃபுல்’ நிகழ்ச்சியை நடத்தியதுடன் ஃபேஷன் டிசைனிங், திரைத்துறையிலும் சிகையலங்கார ஒப்பனைக் கலைஞராகப் பணிபுரிகிறார் இலங்கேஸ்வரி.
“மேனியில் வண்ணம் பூசுவது (Body painting) என்பது வேறு, மேனியில் ஓவியம் வரைவது (Body Art) என்பது வேறு. மேனியில் ஓவியம் வரைவது அரிதான நிகழ்வாகவே இருக்கிறது. இந்தத் துறையில் விரல் விட்டு எண்ணக்கூடிய கலைஞர்களே இருக்கும் நிலையில், அது குறித்த விழிப்புணர்வை உண்டாக்கும் நோக்கத்துடன் ஒரு நிகழ்வை நடத்தினேன். மேனியில் வரையப்படும் ஓவியம் தனியாகத் தெரியாமல் மேனியோடு இரண்டறக் கலக்கும் வகையில் வரைய வேண்டும் என்று நினைத்தேன். இந்தப் பாணியிலான ஓவியங்கள் வெளிநாடுகளில் மட்டுமே பரவலாக வரையப்படுகின்றன. முதலில் இதற்கு மாடலாக வந்தவர் ஸ்ருதி பெரியசாமி. இவரது மேனியில் நான் வரைந்த ஓவியங்களைப் பலரும் பாடி ஆர்ட் என்று நம்பவில்லை. நகைகள் போன்றவற்றை மிகவும் நுட்பமாக வரைந்திருந்தேன்.
அடுத்து, உருமறை பாணியில் மேனியில் ஓவியம் வரைந்தேன். பின்னணியில் இருக்கும் டிசைனை மேனியில் வரைவதன் மூலம், பின்னணியோடு ஓவியமும் ஒன்றானதுபோல் தோன்றும். இதுவும் பலரைக் கவர்ந்தது.
பொதுவாகவே தாய்ப்பாசம் என்பது பெண்களை மையப்படுத்தியே இருக்கும். திருநங்கைகளும் தாய்மை உணர்வுக்கு உரியவர்கள்தாம் என்பதை விளக்கும் வகையில் ஒரு மேனி ஓவியம் தீட்டினேன். இதற்கு மாடலாகத் திருநங்கை வைஷ்ணவி இருந்தார். இதில் குழந்தையின் சருமத்தைக் கொண்டு வருவதற்கு நான் தூரிகையைப் பயன்படுத்தாமல் என் விரல்களைக் கொண்டே வரைந்தேன்” என்கிறார் இலங்கேஸ்வரி. எதை மையப்படுத்திப் பேசுகிறோம் என்பதைப் பொறுத்தே ஒரு கலை வடிவம் கொண்டாடப்படுகிறது. அந்தப் பட்டியலில் இலங்கேஸ்வரி தீட்டுகிற மேனி ஓவியங்களையும் சேர்த்துக்கொள்ளலாம்.