

பாட்மிண்டன் விளையாட்டில் தாமஸ் கோப்பையைக் கைப்பற்றிய இந்தியாவின் 73 கால வரலாற்று வெற்றியை நாடே கொண்டாட, பாட்மிண்டன் விளையாட்டில் தனக்கெனத் தனி இடத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார் தமிழகத்தைச் சேர்ந்த ஜெர்லின் அனிகா. மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்பிலான பல்வேறு திட்டங்களைத் தொடங்கிவைக்க மே 26 அன்று சென்னைக்கு வந்த பிரதமர் மோடி, “தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்குகிறார்கள். அண்மையில் நடைபெற்ற செவித்திறன் குறைந்தோருக்கான ஒலிம்பிக் போட்டியில் இந்தியா வென்ற 16 பதக்கங்களில் ஆறு பதக்கங்களைத் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் வென்றிருக்கிறார்கள்” எனக் குறிப்பிட்டார். அதில் மூன்று பதக்கங்களுக்குச் சொந்தக் காரர் ஜெர்லின் அனிகா. மூன்றும் தங்கப் பதக்கங்கள்!
மதுரையைச் சேர்ந்த ஜெர்லின் அனிகா ப்ளஸ் டூ மாணவி. காது கேளாத, பேச முடியாத தன் மகளுக்குப் பிற குழந்தைகளைப் போன்ற இயல்பான குழந்தைப் பருவத்தை அமைத்துத் தந்தார் ஜெர்லினின் தந்தை ஜெயரட்சகன். தான் விளையாடச் செல்லும் இடங்களுக்கு மகளையும் அழைத்துச் செல் வார். அப்போது தன் மகளுக்கு இருக்கும் குறை பற்றி பயிற்சியாளர் சரவணனிடம் சொல்ல, ஜெர்லினுக்குப் பயிற்சியளிக்க சரவணன் ஒப்புக்கொண்டார். எட்டு வயது முதல் பாட்மிண்டன் விளையாட்டில் பயிற்சி பெற்றுவருகிறார் ஜெர்லின். ஆரம்பத்தில் மற்ற குழந்தைகளுக்குப் பயிற்சி அளிப்பது போலத்தான் ஜெர்லினுக்கும் சரவணன் பயிற்சியளித்தார். பின்னர் ஜெர்லினுடன் பேசுவதற்கான வழிகளை சரவணனும் கற்றுக்கொண்டார். இப்படித் தொடங்கியது தான் ஜெர்லினின் பாட்மிண்டன் பயணம்.
அயல் மண்ணில் வெற்றி
ஒலிம்பிக், பாரா ஒலிம்பிக் போட்டிகள் பரவலாக அறியப்பட்ட அளவுக்கு செவித்திறன் குறைந்தோருக்கான ஒலிம்பிக் போட்டிகள் குறித்துப் பலருக்கும் தெரிவதில்லை. 2017ஆம் ஆண்டு மதுரை மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் சொல்லும்வரை ஜெயரட்சகனும் இது குறித்து அறிந்திருக்கவில்லை. தகவல் அறிந்ததுமே அந்த ஆண்டு துருக்கியில் நடைபெற்ற போட்டியில் 13 வயது ஜெர்லினைப் பங்கேற்கச் செய்தார். முதல் போட்டி என்பதாலோ என்னவோ அந்த முறை ஐந்தாம் இடத்தைத்தான் ஜெர்லினால் பிடிக்க முடிந்தது.
துருக்கிப் பயணம் ஜெர்லினுக்கு அடுத்தடுத்த வெற்றியைத் தேடித் தந்தது. 2018இல் மலேசியாவில் நடைபெற்ற ஆசிய பசிபிக் பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இரு வெள்ளி, ஒரு வெண்கலம் ஆகிய பதக்கங்களை வென்றார். அடுத்த ஆண்டு சீனாவில் நடைபெற்ற உலக செவித்திறன் குறைபாடுள்ளோருக்கான பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் ஒரு தங்கம், இரு வெள்ளி ஆகிய பதக்கங்களை வென்றார்.
வெற்றியில் மகிழாத மனம்
நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த ஜெய ரட்சகனால் தன் மகளுக்குச் சத்தான உணவையும் விளையாட்டுக் கருவிகளையும் வாங்கித் தர முடியவில்லை. ஆனால், ஜெர்லினின் தொடர்ச்சியான வெற்றி அவருக்கு உதவி கிடைக்க வழிசெய்தது. எச்.சி.எல்., நிறுவனத்தின் ‘ஸ்போர்ட்ஸ் ஃபார் சேஞ்ச்’ திட்டத்தின் மூலம் ஜெர்லினுக்கு 2019இல் நிதிநல்கை கிடைத்தது. நிதி நல்கையோடு பயணச் செலவுக்கும் அந் நிறுவனம் உதவ, ஜெர்லினின் விளையாட்டுப் பயணம் சிக்க லின்றித் தொடர்ந்தது. கோவிட் பெருந் தொற்றால் அறிவிக்கப்பட்ட ஊரடங்கின் போது வீட்டிலிருந்தபடியே ஜெர்லின் பயிற்சிபெற்றார்.
பிரேசிலில் மூன்று தங்கப் பதக்கங்களை வென்ற ஜெர்லினைப் பலரும் பாராட்ட, ஜெர்லினோ தான் தவறவிட்ட ஒரு தங்கப் பதக்கம் குறித்த வருத்தத்தில் இருந்தார். 2023இல் பிரேசிலில் நடைபெறவிருக்கும் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெல்வதைத் தன் அடுத்த இலக்காகக் கொண்டு படிப்புக்கு நடுவே பயிற்சியெடுத்து வருகிறார் 18 வயது ஜெர்லின் அனிகா.
- க்ருஷ்ணி