

‘பெண்ணுறுப்பு சிதைப்பு’ (Female Genital Mutilation) என்னும் கொடூரமான வழக்கத்தை எதிர்த்துப் போராடிவரும் ஜஹா துக்குரேஹ் என்ற போராளி (வயது 26), டைம்ஸ் பத்திரிகையின் ‘உலகின் செல்வாக்கு மிக்கவர்கள்’ பட்டியலில் சமீபத்தில் இடம்பிடித்திருக்கிறார். இது போன்ற போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கும் பெண்ணுறுப்பு சிதைக்கப்பட்டவர்களுக்கும் இது மிகுந்த உத்வேகத்தை அளிக்கும் செய்தி.
தற்போது அமெரிக்காவின் அட்லாண்டா மாகாணத்தில் வசித்துவரும் ஜஹா, காம்பியா நாட்டைச் சேர்ந்தவர். பிறந்து ஒரு வாரத்திலேயே அவர்களின் குல வழக்கப்படி (மற்றும் பல நாடுகளின் வழக்கப்படி) அவரது பெண்ணுறுப்பு சிதைக்கப்பட்டது. 15 வயதில் வலுக்கட்டாயமாகத் திருமணம் செய்துவைக்கப்பட்டு அமெரிக்கா அனுப்பப்பட்டார் ஜஹா. அவருடைய கணவரின் வயது நாற்பதுக்கும் மேல். உறுப்பு சிதைப்பின்போது சிறு இடைவெளி மட்டும் விடப்பட்டு பிறப்புறுப்பு தைக்கப்பட்டிருந்ததால் சிறுநீர் கழிக்கக்கூட மிகவும் சிரமப்பட வேண்டிய நிலை ஜஹாவுக்கு. அந்த வேதனையுடன் திருமண வாழ்வின் கொடுமையான வலியையும் அனுபவித்தார்.
தீராத கல்வித் தேடல்
15 வயதில் திருமணம் ஆனபோது, படிக்க வேண்டுமென்று ஆசைப்பட்ட அவருக்கு எல்லாமே முடிந்துபோய்விட்டதோ என்று திக்பிரமை ஏற்பட்டது. ஆனாலும் அவர் விடுவதாயில்லை. “ஒவ்வொரு பள்ளிக்கும் சென்றேன். என்னைச் சேர்த்துக்கொள்ளுங்கள் என்று அவர்களிடம் கெஞ்சினேன். என்னுடன் எனது பெற்றோர் இல்லை என்பதைக் காரணம் காட்டி என்னைச் சேர்த்துக்கொள்ள மறுத்துவிட்டார்கள். கடைசியாக ஒரு பள்ளியில், எனக்கு யாருமே இல்லை என்று சொன்னேன். பள்ளி முதல்வர் அலுவககத்திலேயே உட்கார்ந்து, அழுது தீர்த்தேன். இறுதியாக அவர்கள் என்னைச் சேர்த்துக்கொண்டார்கள்.
சில நாட்களிலேயே வகுப்பில் சேர்ந்தேன். அது எனக்கு எவ்வளவு சந்தோஷத்தைக் கொடுத்தது என்பது உங்களால் கற்பனை செய்தே பார்க்க முடியாது. வகுப்பில் உட்கார்ந்துகொண்டு கல்வி கற்கப்போகிறோம் என்பது குறித்து மிகுந்த பரவசம் கொண்டேன்” என்கிறார் ஜஹா.
பின்தங்கிய நாடுகளைச் சேர்ந்த பெண்கள் கல்விக்காக ஏன் இந்த அளவுக்கு ஏங்குகிறார்கள் என்பதை வளர்ச்சியடைந்த நாட்டினரால் புரிந்துகொள்வது சிரமம். பிறந்து ஒரு வாரத்தில், மரபைக் காரணம் காட்டிப் பிறப்புறுப்பு சிதைக்கப்பட்டு, 15 வயதில் திருமணம் செய்துவைக்கப்பட்டு, 24 வயதுக்குள் மூன்று குழந்தைகளைப் பெற்று, கணவனிடமிருந்து பிரிந்து வாழும் ஜஹா போன்றவர்களால் பெண் கல்வியின் அவசியத்தை மிகுந்த ஆழமாகப் புரிந்துகொள்ள முடியும்.
போராட்டமே மாற்றத்துக்கான கருவி
கல்வி பெற ஆரம்பித்ததோடு நிற்கவில்லை ஜஹா. ‘பெண்ணுறுப்புச் சிதைப்பு’ என்னும் கொடிய பழக்கத்துக்கு எதிராகப் போராட ஆரம்பித்தார். ‘பெண்ணுறுப்புச் சிதைப்பு’க்கு எதிரான விழிப்புணர்வு கல்வி பற்றி பள்ளிக் கல்வியில் இடம்பெற வேண்டும் என்று ஃபஹ்மா மொஹ்மது என்ற இங்கிலாந்துச் சிறுமி, ‘தி கார்டியன்’ இதழின் துணையுடன் தீவிரப் பிரச்சாரம் மேற் கொண்டதைப் பற்றிக் கேள்விப்பட்டார் ஜஹா. change.org மூலமாக அவரும் ஒரு பிரச்சாரத்தை மேற்கொண்டார். இவர் பிரச்சாரத்தின் மையப் பொருள் என்ன தெரியுமா? அமெரிக்காவில் நடைமுறையில் இருக்கும் ‘பெண்ணுறுப்புச் சிதைப்பு’ பற்றி அரசாங்கம் கண்டறிய வேண்டும் என்பதுதான். அமெரிக்கா மாதிரி வளர்ந்த நாடுகளிலும் இந்தப் பழக்கம் இருக்கிறதா என்று பலர் ஆச்சரியப்படலாம். வெளியே தெரியாமல், ஆனால் பரவலாக இருக்கிறது என்கிறார் ஜஹா.
எது கலாச்சாரம்?
ஆப்பிரிக்க நாடுகள் போன்றவற்றிலிருந்து வரும் மக்கள் தங்கள் கலாச்சாரம், பழக்கவழக்கம், மொழி என்று எல்லாவற்றையும் அமெரிக்காவுக்குக் கொண்டுவருகிறார்கள். பெண் குழந்தைகள் பிறந்தால் தங்கள் நாட்டுக்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு ‘பெண்ணுறுப்புச் சிதைப்பு’ சடங்கு நடத்திவிட்டு அமெரிக்கா திரும்புவார்கள். பல முறை பெற்றோர்களுக்குத் தெரியாமலும் குழந்தைகளுக்கு அந்தச் சடங்கு நடத்தப்படுவதும் உண்டு. இதைப் பற்றிப் பேச ஆரம்பித்தால் ‘இது எங்கள் கலாச்சாரம், வெளியாட்கள் யாரும் இதில் தலையிட வேண்டாம்’ என்று ஆப்பிரிக்க-அமெரிக்கர்கள் சொல்லிவிடுகிறார்கள்.
“இது கலாச்சாரம் சார்ந்த பிரச்சினைதான். நானும் இதே கலாச்சாரத்தைச் சார்ந்தவள்தான். நானே சொல்கிறேன். இதனால் எங்களுக்கு எந்த நன்மையும் இல்லை. இது மோசமான அத்துமீறலே” என்கிறார் ஜஹா.
Change.org மூலம் ஜஹா மேற்கொண்ட பிரச்சாரத்தில் ‘பெண்ணுறுப்புச் சிதைப்பு’க்கு எதிராக 2,20,000 பேர் கையெழுத்திட்டது அவரது பிரச்சாரத்துக்குக் கிடைத்த பெரும் வெற்றி. இதன் விளைவாக ‘பெண்ணுறுப்புச் சிதைப்பு’ பிரச்சினைக்குத் தீர்வு காண ‘தேசிய செயல்திட்டம்’ உருவாக்கப்பட்டது.
உலகின் பெரும்பாலான பெண்கள் தங்கள் மீது இழைக்கப்படும் கொடுமைகளைச் சகித்துக்கொண்டு அவற்றோடே வாழ்க்கை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். வெகு சிலர்தான் தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமை இனி யாருக்கும் இழைக்கப்படக் கூடாது என்ற சங்கல்பத்துடன் போராட ஆரம்பிக் கிறார்கள். அவர்களது போராட்டம்தான் கோடிக் கணக்கான பெண்களின் வாழ்க்கையில் வெளிச்சத்தைப் பாய்ச்சிக்கொண்டிருக்கிறது. ஜஹா துக்குரேஹும் அப்படிப்பட்ட ஒருத்தர்தான். அதனால்தான், ஜெர்மனியின் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கெல், மியான்மரின் ஆங் சான் சூயி போன்றோரோடு ‘டைம்ஸ்’ இதழின் பட்டியலில் ஜஹாவும் இடம்பிடித்திருக்கிறார்.