‘இதை வீட்டிலேயே செஞ்சி கொடுங்கம்மா...’ | சமையலால் ஜெயித்த ஜெயந்தி

‘இதை வீட்டிலேயே செஞ்சி கொடுங்கம்மா...’ | சமையலால் ஜெயித்த ஜெயந்தி
Updated on
2 min read

நாம் குயிலைத் தேடுவதில்லை, அதன் இனிமையான குரலே போதுமானதாக இருக்கிறது. ‘அம்மா சமையல் வீடியோஸ்’ யூடியூப் சேனலை நடத்திவரும் ஜெயந்தியும் குயிலைப் போலத்தான். தன் அக்கறையான குரலால் மட்டுமே பார்வையாளர்களைத் தக்கவைக்கிறார். “ரெண்டு வெங்காயம், ரெண்டு தக்காளி போதும்மா. அம்மா ரெண்டு பச்சை மிளகாய் சேர்த்திருக்கேன். உங்களுக்குக் காரத்துக்கு ஏத்த மாதிரி சேர்த்துக்கங்கம்மா” என்று அவர் செய்முறையை விவரித்தபடியே சமைக்கும்போது, அடுக்களையில் நம் பக்கத்தில் இருந்து பேசுகிற உணர்வு ஏற்படுகிறது. இதுதான் ‘அம்மா சமையல் வீடியோஸ்’ சேனல் வெற்றியின் ரகசியம்!
சென்னையைச் சேர்ந்த ஜெயந்தி, இல்லத்தரசி. 25 ஆண்டுக் கால சமையல் அனுபவத்தில் பல்வேறு வகையான உணவு வகைகளைச் சமைத்திருக்கிறார். குறிப்பாகத் தமிழ்நாட்டில் புழக்கத்தில் இருக்கும் பெரும்பாலான உணவு வகைகள் இவருக்கு அத்துப்படி. சைவம், அசைவம் இரண்டிலுமே பிரமாதப்படுத்துகிறார். இளம் தலைமுறையினர் பலரும் அடிப்படை சமையல் தெரியாமல் தவிப்பதைப் பார்த்தவர், அதற்குத் தீர்வுதரும் நோக்கத்தில் இந்த சேனலைத் தொடங்கியிருக்கிறார்.

ஏற்கெனவே, ‘அம்மா சமையல்’ என்கிற பெயரில் மீனாட்சி என்பவர் யூடியூப் சேனலை நடத்திவந்தாலும் ஜெயந்தியின் சேனலுக்கு ரசிகர்கள் ஏராளம். ஒரே பெயரில் ஒரே மாதிரியான உள்ளடக்கத்தில் மற்றொரு அலைவரிசையைத் தொடங்கி நடத்த அசாத்திய துணிச்சல் தேவைதான். தன் சமையல் திறனை மட்டுமே நம்பி, துணிவுடன் களத்தில் இறங்கிய ஜெயந்தி, அதற்குப் பரிசாக 28 லட்சத்துக்கு அதிகமான சந்தாதாரர்களைப் பெற்றிருக்கிறார்.

சகலகலா சமையல்
ஸ்மார்ட் போன் வைத்திருக்கிறவர்கள் எல்லாம் சமையல் வீடியோக்களைப் பதிவிடுகிற போட்டி நிறைந்த சூழலில் நான்கே ஆண்டுகளில் இவ்வளவு அதிகமான சந்தாதாரர்களைப் பெற்றிருப்பது சாதனைதான். எளிமையும் தெளிவும் நிறைந்த செயல்முறை விளக்கமும் கச்சிதமாக எடிட் செய்யப்படும் வீடியோக்களும்தாம் இந்த வெற்றியைச் சாத்தியப்படுத்தியுள்ளன. சேனல் தொடங்கிய புதிதில் கேமரா சரியில்லை, குரலும் செய்முறையும் தெளிவாக இல்லை. ஆனால், அடுத்தடுத்த வீடியோக்களில் அவற்றைச் சரிசெய்து பார்வையாளர்களை இவர் தக்கவைத்துக்கொண்டார்.
சிற்றுண்டி, மாலை நேர நொறுவை, சூப், ஐஸ்கிரீம், ஹோட்டல் சுவையில் வீட்டுச் சமையல், சாட் வகைகள், பண்டிகைப் பலகாரங்கள், சமையல் குறிப்புகள் என்று பெரும்பான்மை மக்கள் விரும்பக்கூடிய சகலவிதமான உணவையும் சமைத்துக்காட்டிவருகிறார். சிக்கன் பிரியாணி செய்முறையை இரண்டு கோடிக்கு அதிகமானோர் பார்த்துள்ளனர் என்றால் இன்னொரு பக்கம் மோர்க்குழம்பு செய்முறையை ஒரு கோடியே 50 லட்சம் பேர் பார்த்திருக்கிறார்கள். இவரது எளிமையான முட்டை சமையலுக்கு ரசிகர்கள் ஏராளம்.


எளிமையின் வழியில்
இந்த அவரச யுகத்தில் எதுவுமே உடனுக்குடன் நடந்துவிட வேண்டும் என்று எதிர்பார்க்கும் மக்களின் மனநிலையைப் புரிந்துவைத்திருக்கிறார் ஜெயந்தி அம்மா. அதனால்தான், எதையும் நீட்டி முழக்காமல் வெட்டு ஒன்னு, துண்டு ரெண்டு என்கிற மாதிரி கன கச்சிதமாக முடித்துவிடுகிறார். எந்தச் சமையல் வீடியோவாக இருந்தாலும் அதிகபட்சம் ஐந்து நிமிடத்துக்குள் முடிந்துவிடுகிறது. 600க்கும் மேற்பட்ட வீடியோக்களில் ஒன்றிரண்டு மட்டுமே ஆறு நிமிடங்களைக் கடந்திருக்கின்றன. இதுவரை நாம் கேட்டிராத காம்பினேஷன்களிலும் சிலவற்றைச் சமைத்துக் காட்டுகிறார் ஜெயந்தி. உதாரணத்துக்கு வெண்டைக்காயுடன் முட்டையைச் சேர்த்து இவர் செய்த காலை உணவைச் சொல்லலாம். கண்கவர் சமையலறையும் அழகழகான பாத்திரங்களுமாகப் பார்வையாளர்களை ஏங்க வைக்கிற சமையல் யூடியூபர்களுக்கு மத்தியில் நடுத்தரக் குடும்பத்தில் புழங்குகிற மாதிரியான பாத்திரங்களை வைத்துத்தான் ஜெயந்தி சமைக்கிறார். அதைத் தவிர வீடியோவில் வேறெதுவும் தெரிவதில்லை. இந்த எளிமையும் இவரது வெற்றிக்குக் காரணம்!

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in