மகளுக்காகத் தந்தையுமானவர்!

மகளுக்காகத் தந்தையுமானவர்!
Updated on
3 min read

பேச்சியம்மாள் என்பது அவருக்குப் பெற்றோர் வைத்த பெயர். தன் மானத்தைக் காக்க தனக்குத் தானே அவர் சூட்டிக்கொண்ட பெயர் ‘முத்து’.

தூத்துக்குடி மாவட்டம், செக்காரக்குடி அருகே சொக்கலிங்க புரம் கிராமத்தைச் சேர்ந்த சிவன்பிள்ளை - லெட்சுமி தம்பதிக்கு 6 மகள்கள், 2 மகன்கள். இவர்களில், நான்காவது மகள் பேச்சியம்மாள். இவருக்கு 20 வயதில் லாரி ஓட்டுநர் சிவாவுடன் திருமணம் நடைபெற்றது. திருமணக் கோலம் கலையும் முன்னரே, அதாவது 15 நாட்களிலேயே கணவர் மாரடைப்பால் உயிரிழந்தார். வாழ்க்கையை இருள் சூழ்ந்த நிலையில் தவித்த பேச்சியம்மாளுக்கு அடுத்த ஒரு மாதத்தில் தான் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. என்ன செய்வதென்று தெரியாமல் குழப்பத்தில் தவித்தவருக்குக் குடும்பத்தினர் ஆறுதலாக இருந்தனர். பேச்சியம்மாளுக்குப் பெண் குழந்தை பிறந்தது. மகளுக்குத் தன் பாட்டி சண்முகசுந்தரியின் பெயரையே வைத்தார்.

முத்து ஆன பேச்சியம்மாள்

எவ்வளவு நாட்களுக்கு அடுத்த வரைச் சார்ந்து இருப்பது என நினைத்த பேச்சியம்மாள் குழந்தைக்கு ஆறு மாதமானதும் தூத்துக்குடி மடத்தூர் பகுதியில் கரி மூட்டம் போடும் வேலைக் குச் சென்றார். ஒருநாள் வேலைக்குச் சென்றபோது, ஒருவரது அவதூறான பேச்சுக்கு ஆளாக நேரிட்டது. அப்போது அங்கிருந்த நல்ல மனதுக்காரர் ஒருவர் பேச்சியம்மாளைக் காப்பாற்றினார். அன்று நடந்த சம்பவம் அவரது மனத்தில் வட்டமிட்டபடி இருந்தது.

வேலை முடித்து வெளியே வந்த பேச்சியம்மாள், நேராக திருச்செந்தூருக்குச் சென்று மொட்டையடித்தார். ஆண்களைப் போல் கைலி, பனியன், சட்டையை அணிந்துகொண்டார். அப்போது ஒருவர், “ஏப்பா... உம்பேரன்ன?” எனக் கேட்க, “ஏ பேரு முத்து” எனச் சற்றும் யோசிக்காமல் தனக்குத் தானே பெயர் சூட்டிக்கொண்டார்.

ஆண்களைப் போல சட்டை அணிந்தால் மட்டும் போதுமா, ஆண்களைப் போல் பழக்க வழக்கமும் வேண்டும் அல்லவா? அதனால் பிடிக்காவிட்டாலும் பரவாயில்லை எனப் பீடி பிடிக்கக் கற்றுக்கொண்டார். “கடையில் நாலு பேருக்கு முன்னால் பீடி குடித்தால் யாருக்கும் சந்தேகம் வராதுல” என்கிறார் பேச்சியம்மாள்.

பேச்சியம்மாள் (எ) முத்து (நடுவில் இருப்பவர்)
பேச்சியம்மாள் (எ) முத்து (நடுவில் இருப்பவர்)

ஓயாத பயணம்

அங்கு தொடங்கிய பயணம் சென்னை வரை நீண்டது சுவாரசியமான கதை. “எனக்குக் குழந்தை பிறந்தப்போ 21 வயசு. ஆண்களின் தவறான பார்வையில் நான் படக் கூடாது. கரி மூட்ட வேலைக்குப் போகும்போது ஒரு டிரைவரு என்னை அவதூறா பேசியதுமே திருச்செந்தூருல போய் மொட்டை போட்டு, சேலையைக் கடலில் வீசிவிட்டு ஆம்பள போல கைலி, சட்டையை மாட்டிக்கிட்டு நடக்க ஆரம்பிச்சேன். ஆறு மாசம் ஓடியிருக்கும். என்னிடம் பிரச்சினை பண்ணின டிரைவரு லாரிய ஓட்டிட்டு வந்தாரு. அவரிடம் நான் லிஃப்ட் கேட்க, ‘ஏப்பா நடந்து போக வேண்டியதுதானே’ என்றார். அப்போதுதான் நான் பாஸாகிவிட்டேன் எனச் சந்தோஷப்பட்டேன். இந்த கெட்-அப்தான் என் வாழ்வின் கடைசிவரை என முடிவெடுத்துவிட்டேன். என் மகள் சண்முகசுந்தரியை மூத்த அக்காவின் பாதுகாப்பில் விட்டேன்.

ஒரு பெண் மூலமாக எனக்கு சென்னை செல்லும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அவர்களிடம் நான் உண்மையைச் சொல்லிவிட்டேன். அவங்க பெருந்தன்மையோடு ஏத்துக் கிட்டாங்க. அந்தப் பெண் கர்ப்பமாக இருந்ததால், அவருக்கு உதவியாக இருந்து வீட்டு வேலைகளை முடித்துக் கொடுப்பேன். மீதமுள்ள நேரத்தில் அருகே உள்ள பாய் கடையில் பரோட்டா மாஸ்டராக வேலைக்குச் சேர்ந்தேன். அவங்க யாருக்கும் நான் பெண் என்று தெரியாது. அடுத்து டீக்கடையில் மாஸ்டர், கட்டிட வேலை, பெயின்ட் அடிக்கிற வேலை என நிறைய வேலை செய்தேன். ‘இங்கே எப்போதும் வென்றான் ஊரில் சோலைச்சாமி கோயில் திருவிழாவில் தேங்காய்க் கடையில் வேலை பார்த்தேன். இப்படியே 35 வருஷத்துக்கு மேல ஓடிருச்சு. என் மானத்தைக் காப்பாத்திய இந்த ஆண் உடையுடன்தான் என்னோட கடைசி நாள் வரை இருப்பேன். நான் இறக்கும்போது இந்த உடைதான் என் உடலில் இருக்க வேண்டும் என எனது பேரனிடம் கூறியுள்ளேன்” என்கிறார் முத்து மாஸ்டர்.

அரசு உதவ வேண்டும்

தற்போது ‘எப்போதும்வென்றான்’ அருகே காட்டுநாயக்கன்பட்டி கிராமத்தில் தனது மகள் வீட்டுக்கு அருகே வாடகை வீட்டில் குடியிருந்து வரும் முத்து மாஸ்டர், கிடைத்த வேலைகளைச் செய்துவருகிறார். அறியாத வயதில் கணவர் இறந்ததால், அப்போது இறப்புச் சான்றிதழ் வாங்கவில்லை. அதனால் கணவரை இழந்தவர்களுக்கான உதவித் தொகை கிடைக்கவும் வழியில்லை.

ஆதார் அட்டை பதிவுசெய்ய சென்ற இடத்தில், ‘பெண் என்றால் சேலை கட்டி வர வேண்டும்’ எனக் கூறியுள்ளனர். அதற்கு மறுப்பு தெரிவித்த ‘முத்து’ தன்னை ஆண் எனக் கூறி, பதிவுசெய்து அட்டையும் பெற்றுவிட்டார். அதை வைத்துக் குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றைப் பெற்றுவிட்டார்.

காட்டுநாயக்கன்பட்டி கிராமத்திலும் முதலில் அவரைப் பெண் என்று யாருக்கும் தெரியாது. “என் மகளுக்காகத் தந்தை வேடம் ஏற்றேன். இன்றுவரை அதுவே என் வாழ்க்கையாகிவிட்டது. 57 வயதாகிவிட்டதால் அரசின் ஏதாவது ஒரு உதவி கிடைத்தால் நன்றாக இருக்கும். முன்புபோல் கடுமையான வேலைகளைச் செய்ய முடிவில்லை” என்று அரசுக்குக் கோரிக்கை வைக்கிறார் முத்து மாஸ்டர் என்கிற பேச்சியம்மாள்.

பேச்சியம்மாள் முப்பது ஆண்டு களுக்கும் மேலாக ஆண் வேடமிட்டு வாழ்ந்துவருவதைப் பெருமிதத்துடன் பலரும் சிலாகிக்கிறார்கள். இந்த ஆணாதிக்கச் சமூகத்தில் ஒரு பெண் தன் குழந்தையோடு தனித்து வாழ வேண்டுமானால் தன் அடையாளத்தை மறைத்துத்தான் வாழ வேண்டியுள்ளது என்பது சமூக அவலம். சமூகத்தின் மீதும் தன்னைச் சுற்றியுள்ள ஆண்களின் மீதும் நம்பிக்கை வைக்க முடியாத சூழலில்தான் அப்படியொரு முடிவை பேச்சியம்மாள் எடுத்திருக்கிறார். நம்மோடு வசிக்கும் பெண், ‘பெண்' என்கிற அடையாளத்தோடு வாழக்கூட அனுமதிக்காத நிலைக்கு நாம் ஒவ்வொருவரும் பொறுப்பேற்க வேண்டும்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in