

ஆதியில் தாய்வழிச் சமூகம்தான் இருந்தது. தந்தைமை கண்டுகொள்ளப்பட்ட பின்புதான், தந்தைவழிச் சமூகமாக மாறினோம். இந்த மாற்றம் ஒரே நாளில் நிகழ்ந்துவிடவில்லை. சமூக, உளவியல் காரணங்களைத் தாண்டி மதம் சார்ந்த காரணங்களும் இந்த மாற்றத்தில் முக்கியப் பங்கு வகித்திருக்கின்றன.
ஆண்-பெண் உறவையே பாவமாகக் கருதிய மதங்கள் அதற்கான பழியைப் பெண்களின் மீது சுமத்தின. இயற்கை உணர்வுகளுக்கு வடிகாலாகவும் சட்டபூர்வமான குழந்தைகளுக்கான வாய்ப்பாகவும் மட்டுமே அவை திருமணங்களை அனுமதித்தன. திருமணமும் அதையொட்டிய ஒழுக்க நெறிகளும், பெண்கள்மீது மட்டுமே கட்டுப்பாடுகளை விதித்தன. மனித குல வரலாற்றின் தொடக்கத்தில் பெண்களே மையமாக இருந்தது, காலப்போக்கில் அவர்கள் இரண்டாம் பாலினமாகக் கீழிறக்கப்பட்டது, நவீன காலப் புரட்சிகளின் விளைவாக அவர்கள் தமது உரிமைகளை மீட்டெடுத்தது ஆகிவற்றைக் குறித்து உலகப் புகழ்பெற்ற சிந்தனையாளர் பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் எழுதிய நூல் ‘திருமணமும் ஒழுக்கநெறிகளும்’ (Marriage and Morals).
பெரியாரோடு ஒப்பீடு
தமிழில் வெளியான பெரியாரின் ‘பெண் ஏன் அடிமையானாள்?’ என்கிற தலைப்பிலான கட்டுரைத் தொகுப்பு நூல் பரவலான கவனத்தைப் பெற்றது. இந்நூல், பிரெடெரிக் எங்கெல்ஸ் எழுதிய ‘குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்’ நூலோடும் பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் எழுதிய ‘திருமணமும் ஒழுக்கநெறிகளும்’ நூலோடும் பொதுவாக ஒப்பிடப்படுவதுண்டு. எங்கெல்ஸின் நூல் ஏற்கெனவே தமிழில் பல பதிப்புகள் கண்ட நிலையில், ரஸ்ஸலின் ‘திருமணமும் ஒழுக்கநெறிகளும்’ தமிழில் தற்போது மொழிபெயர்ப்பாகியிருப்பது அவரது 150வது பிறந்தநாள் ஆண்டைச் சிறப்பிக்கும்வகையில் அமைந்துள்ளது.
ஆண்-பெண் காதல் உறவு குழந்தைகளின் சட்டபூர்வத் தன்மையைத் தக்கவைப்பதற்காகச் சிதைக்கப்பட்டது என்று கூறும் பெர்ட்ரண்ட் ரஸல், காதல் மட்டுமன்றி பெண்கள் மனித நாகரிகத்துக்கு அளிக்கவல்ல பங்களிப்புகளும் அதே காரணத்துக்காகக் தடைசெய்யப்பட்டன என இந்நூலில் தெரிவித்துள்ளார். மத நோக்கில் காதல் பாவமாகக் கருதப்பட்டுப் பெண்கள் நரகக் கதவின் அடையாளமாகவும் மனிதத் தீமைகளின் தாயாகவும் சித்தரிக்கப்பட்டுவந்த நிலையில், ‘பாவம்’ என்கிற கருத்தின் சிதைவே தற்காலப் பெண்களின் சுதந்திரத்தை மீட்டெடுத்துள்ளது என்பதும் அவரது குறிப்பிடத்தக்க பார்வை. சொத்து, பரம்பரை உரிமை பெறுவதில் சட்டங்கள் பெண்களுக்கு எதிராக இருந்த நிலை மாறியதில், பிரஞ்சுப் புரட்சிக்கு முக்கியமான பங்கு உண்டு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இருவருக்கும் பொதுவில் வைப்போம்
அறிமுகம், முடிவுரை உள்பட மொத்தம் 21 அத்தியாயங்கள் கொண்ட இந்நூல் முழுவதுமே திருமணம் என்கிற சமூக அமைப்பும் அதையொட்டி கற்பிக்கப்பட்ட ஒழுக்கநெறிகளும் எவ்வாறு பெண்களின் உரிமைகளுக்குத் தடைக்கற்களாக ஆகிவிட்டன என்பதை வரலாறு, இனவரைவியல், மரபியல், உளவியல் என்று பல்வேறு துறைகளின் வழிநின்று விரிவாக விளக்குகிறது. என்றாலும், பெண் விடுதலை குறித்த ஏழாவது அத்தியாயம் தனிச்சிறப்பு மிக்கது. பிரஞ்சுப் புரட்சியையே பெண்ணுரிமைப் போராட்டத்தின் தொடக்கமாகக் கருதுகிறார் ரஸ்ஸல். பிரபல சிந்தனையாளரான ஜான் ஸ்டூவர்ட் மில் எழுதிய ‘பெண்ணடிமைத்தனம்’ நூல் பெண்ணுரிமை குறித்த விவாதங்களைத் தொடங்கிவைத்தது. அவரிடம் பயின்றவர்கள்தாம் ரஸ்ஸலின் பெற்றோர். ரஸ்ஸலின் தாயார், பெண்கள் வாக்குரிமைக்காகப் போராடிய முன்னோடிகளில் ஒருவர்.
மக்களாட்சி கொள்கையே பெண்களின் கோரிக்கைகளுக்குத் தீர்வுகளை அளிப்பதற்கு வாய்ப்பானது என்று குறிப்பிடுகிறார் ரஸ்ஸல். மேலும், பெற்றோர், கணவர், குழந்தைகள் என்று பெண்கள் ஆண்களைச் சார்ந்திருக்காமல் தங்கள் வாழ்க்கைக்குத் தேவையானதைத் தாமே உழைத்துப் பெற்றுக்கொள்ள ஆரம்பித்ததும் அவர்களது உரிமைப் போராட்டத்தில் முக்கியமான திருப்புமுனை. இத்தகு சூழல் அமைவதற்குப் போர்களே காரணமாயின. போர்க்காலத்தில் ஆண்களின் பணிகளைப் பெண்களும் செய்யும் சூழல் உருவானது.
பெண் எப்படி அடிமையானாள் என்பது மட்டுமின்றி, அந்த அடிமைத்தளையிலிருந்து அவள் எப்படி மீண்டாள் என்பதையும் ஆய்வுக்கு உட்படுத்தியிருக்கும் நூல் இது. அவள் மீது பிணையப்பட்ட அடிமைத்தளை என்பது அவள் மனத்தில் விதைக்கப்பட்ட ஒழுக்கங்கள்தாம். ஆனால், அந்த ஒழுக்கங்கள் இருபாலருக்கும் பொதுவானதாக இருந்திருந்தால் மனித சமுதாயம் வாழ்க்கைமுறையில் இன்னும் பல உயரங்களை எட்டியிருக்க முடியும். ஆனால், ஆண்களைத் தவிர்த்து பெண்களுக்கு மட்டுமே அவை விதிக்கப்பட்டு பெண்ணடிமைத்தனத்துக்கு வித்திட்டது. ‘கற்பு நிலையென்று சொல்ல வந்தார். இரு கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்’ என்ற பாரதியின் வரிகள்தாம் பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் நூலின் அடிநாதம். 1929இல் வெளிவந்த இந்நூல், நூற்றாண்டை நெருங்கும் வேளையிலும் அதன் பொருத்தப்பாட்டையும் தேவையையும் இழந்துவிடவில்லை.
திருமணமும் ஒழுக்கநெறிகளும்
பெர்ட்ரண்ட் ரஸ்ஸல்
தமிழில்: முனைவர் சி.ஸ்ரீராம்
வெளியீடு: காவ்யஸ்ரீ பப்ளிஷர்ஸ், கோவை.
விலை: ரூ.350
தொடர்புக்கு: 82487 45334