

எரிமேலியிருந்து காஞ்சிரப்பள்ளி செல்லும் வழியில் குறுவாமொழி என்கிற இடத்தில் ஆர்யா என்கிற பெயரில் ஓர் உணவு விடுதி இருக்கிறது. சாதாரண சாலையோர உணவு விடுதிதான் அது. ஆனால், இன்று அது பிரபலமாகிவிட்டது. அந்த உணவு விடுதியின் சிறப்பு உணவு, பரோட்டா. அந்தப் பரோட்டாவும் சாதாரண பரோட்டா அல்ல. அனஸ்வரா என்கிற இளம் வழக்கறிஞர் சுழற்றி அடிக்கும் பரோட்டோ.
அனஸ்வரா பரோட்டா செய்யும் வீடியோ சில மாதங்களுக்கு முன்பு சமூக ஊடகங்களில் வைரல் ஆனது. பதிவிடப்பட்ட ஒரு மணி நேரத்துக்குள் 10 லட்சம் பார்வைகளைக் கண்டது. பிறகு ஒரு கோடி ஆனது. ஒரே வீடியோவில் அவருக்குக் கேரளத்தில் நட்சத்திரங்களைப் போன்ற அந்தஸ்தும் கிடைத்துவிட்டது. செய்தி நிறுவனங்கள் அந்தச் சாலையோரக் கடைக்குப் படையெடுத்தன. செய்திகளில் நிறைந்தார் அனஸ்வரா. பிரபல மலையாள நடிகர் சுரேஷ் கோபியுடன் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் விருந்தினராகக் கலந்துகொண்டார்.
அனஸ்வரா 13 வயதிலிருந்து பரோட்டா அடித்துவருகிறார். அப்பா இல்லாத நிலையில் அம்மாவுக்குத் துணையாக உணவு விடுதியில் வேலையைத் தொடங்கினார். பிறகு அம்மாவைப் போல் பரோட்டா அடிக்கப் பழகிவிட்டார். ஒரு மணி நேரத்தில் 100 பரோட்டா வரை அவரால் அடிக்க முடியுமாம். இங்கு பரோட்டா அடித்துக்கொண்டே தொடுபுழையில் உள்ள அல் அசர் சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று தேறியுள்ளார் அனஸ்வரா.
பொதுவாகப் பெண்கள் பரோட்டா அடிப்பது மிகக் குறைவுதான். தொடக்கத்தில் இவர் பரோட்டா அடிப்பதைப் பலரும் ஆச்சரியமாகப் பார்த்துள்ளனர். குறுவாமொழியில் இவர் ‘பரோட்டா’ என்கிற பெயராலேயே அறியப்பட்டுள்ளார். முதலில் ‘பரோட்டா’ என்று யாராவது அழைத்தால் கோபப்பட்டவர், பிறகு அந்த அடையாளத்தைப் பெருமையாகக் கருதத் தொடங்கிவிட்டார். இப்போது கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும் பதிவுசெய்துவிட்டார். ஆனாலும் ‘பரோட்டா அடிக்கும்’ பணியையும் தொடர்வேன் என்கிறார் அனஸ்வரா.