

பத்மா, நய்னா ஆகிய பெண்கள் இருவரின் வாழ்க்கை நிகழ்வுகளே மாலா மகேஷ் எழுத்தில் வெளியாகி இருக்கும் ‘பத்மா’ நாவலின் மையம். 1900இல் கேரளத்தில் வாழ்ந்தவர் பத்மா. சமகாலத்தில் மும்பையில் வாழ்பவர் நய்னா. இந்தப் பெண்கள், அழகாலும் அறிவாலும் வளத்தாலும் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள். அன்பான கணவர், பாசமான மாமியார், செல்லுமிடம் எல்லாம் கிடைக்கும் அன்பு, மரியாதை என அவர்களின் வாழ்க்கை, துயரத்தின் சுவடின்றி இன்பத்தில் நீந்திச் செல்கிறது. இந்தச் சூழலில் குழந்தையின்மைப் பிரச்சினையை அவர்கள் எதிர்கொள்ள நேரிடுகிறது. கணவர், குடும்பம், உறவு உள்ளிட்ட அனைத்து மகிழ்ச்சியும் அதனால் அவர்களிடமிருந்து பறிக்கப்படுகிறது; உரிமைகள் கேள்விக்குள்ளாகின்றன.
இரு வேறு காலகட்டம். இரு வேறு பெண்கள். இருப்பினும் அந்த இரு பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் ஒன்றாகவே இருக்கின்றன. அந்தப் பிரச்சினைகள் அவர்களுக்கு அளிக்கும் வேதனை ஒரே மாதிரியானது. காலமும் சூழலும் மாறினாலும் பெண்ணியம் குறித்த விழிப்புணர்வு மேம்பட்டாலும், இந்தச் சமூகம் பெண்களைக் கையாளும் விதம் எவ்விதத்திலும் மேம்படவில்லை. இந்த அவல உண்மையை இந்த நாவல் காத்திரமாகப் பதிவுசெய்திருக்கிறது. முதல் பக்கத்திலிருந்தே பெண்களின் உணர்வுகள், உண்மைக்கு நெருக்கமான வகையில் நம்முள் கடத்தப்படுகின்றன. சரளமான நடையில் எழுதப்பட்டிருக்கும் இந்த நாவல், நம் சமூகத்தின் இரட்டை முகமூடியை அம்பலப்படுத்தி இருக்கிறது. இந்தப் புத்தகத்தின் வெளியீடு, வரும் சனிக்கிழமை (28, மே) சென்னை தேனாம்பேட்டை ஹயாத் ரிஜென்சியில் நடக்கவிருக்கிறது.