

உலகம் முழுவதும் நடைபெறும் ஆள்கடத்தலில் பெண்களும் குழந்தைகளும்தாம் அதிகம். இவர்களில் பெரும்பாலானோர் பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதற்காகக் கடத்தப்படுகிறவர்கள். வெளிநாடுகளுக்குக் கடத்தப்படுவதைவிட உள்நாட்டில் மாநிலங்களுக்கு இடையே 90 சதவீதத்தினர் கடத்தப்படுகிறார்கள். வீட்டு வேலை செய்வதற்காகவும் பாலியல் தொழில் உள்ளிட்ட பிற காரணங்களுக்காகவும் கடத்தப்படுகிற பெண்களையும் குழந்தைகளையும் மீட்கும் பணியைச் செய்துவருகிறார் சுனிதா கிருஷ்ணன். சுனிதாவின் வாழ்க்கையில் நடந்த துயரம்தான் இப்படியொரு பாதையை அவர் தேர்ந்தெடுக்கக் காரணம்.
பள்ளிச் சிறுமிக்கு நேரக் கூடாத துயரம் அது. மழலை மாறாத வயதிலேயே வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டார் சுனிதா கிருஷ்ணன். தனக்கு நேர்ந்த கொடுமையைத் தடுக்கும் வலிமை அப்போது அவருக்கு இல்லை. ஆனால், இனி எந்தவொரு குழந்தைக்கும் அப்படியான கொடுமை நேரக் கூடாது என்கிற உறுதியைத் தன் மனத்தில் ஏற்றார். போகப் பொருளாகப் பெண்கள் விற்பனை செய்யப்படுவதைத் தடுக்கும் நோக்கத்துடன் ‘பிரஜ்வலா’ என்கிற அமைப்பை உருவாக்கினார்.
பாலியல் விடுதிகளில் கட்டாயமாகத் தங்கவைக்கப்பட்டுள்ள பெண்களையும் பாலியல் கடத்தலுக்கு உள்ளாகும் குழந்தைகளையும் மீட்பதோடு அவர்கள் கல்வி கற்கவும் மறுவாழ்வைத் தொடரவும் ‘பிரஜ்வலா’ அமைப்பு உதவிவருகிறது.
அந்த ஒரு நாள்
கேரளத்தைப் பூர்விகமாகக் கொண்ட ராஜு கிருஷ்ணன் – நளினி தம்பதிக்கு 1972-ல் பெங்களூருவில் பிறந்தார் சுனிதா கிருஷ்ணன். சிறு வயதிலேயே சமூக சேவையில் ஆர்வம் கொண்ட அவர், ஒடுக்கப்பட்டவர்களின் குழந்தைகளுக்குப் பகுதி நேரமாகப் பாடம் எடுப்பது, மனநலம் குன்றிய குழந்தைகளுக்கு நடனம் கற்றுத் தருவது என அந்த வயதுக்கே உரிய சிறு சிறு பணிகளில் ஈடுபட்டுவந்தார். பெண்களுக்குக் கல்வியறிவு குறித்த விழிப்புணர்வு முகாம் நடத்துவதற்காக அருகில் இருந்த கிராமம் ஒன்றுக்குச் சென்றார். சுனிதாவுக்கு அப்போது 15 வயது. தங்கள் கிராமத்தைச் சேர்ந்த பெண்களிடம் தேவையில்லாத கருத்துகளை சுனிதா பரப்புவதாக நினைத்த சிலர் அவரை எதிர்த்தனர். எட்டுப் பேர் கொண்ட குழு அவரைப் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கியது.
“அன்று நடந்த மோசமான நிகழ்வு என் மனத்தில் நிலைக்கவில்லை. ஆனால், அதன் விளைவாக என்னுள் கனன்ற கோபம் இப்போதும் நினைவிருக்கிறது” என்று சொல்லும் சுனிதா கிருஷ்ணன், அந்தக் கொடூரச் சம்பவத்துக்குப் பிறகு இரண்டு ஆண்டுகள் தனிமையில் கழித்தார்.
சமூகப் புறக்கணிப்பு
உடலாலும் மனத்தாலும் நலிந்திருந்த வேதனையைவிடத் தன்னை இந்தச் சமூகம் எதிர்கொண்டதுதான் மிகுந்த வலியைத் தந்தது என்கிறார் சுனிதா.
“என்னை வல்லுறவு செய்த எட்டுப் பேரை யாரும் எந்தக் கேள்வியும் கேட்கவில்லை. ஆனால், நீ ஏன் அங்குச் சென்றாய், பெற்றோர் உனக்கு ஏன் இவ்வளவு சுதந்திரம் தந்தனர் என்று இந்தச் சமூகம் என்னிடம்தான் கேட்டது. அச்சுறுத்தலும் மனரீதியான தாக்குதலும் கொலையைவிடக் கொடுமையானவை. பாலியல் வல்லுறவுக்கு ஆளான பெண்ணின் வலியையையும் அச்சத்தையும் தனிமையையும் உங்களால் புரிந்துகொள்ள முடியாது. வாழ்வின் ஒவ்வொரு நொடியும் இந்த அச்சத்துடனும் வலியுடனும் வாழ்வது நொடிக்கொரு தரம் இறப்பதைப் போன்றது” என்கிறார் சுனிதா. அதன் பிறகு அவரைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளைக் கவனிக்க ஆரம்பித்தார் அவர். “எனக்கு நடந்த வேதனை ஒரு நாள் நிகழ்வுதான். ஆனால், என்னைச் சுற்றிப் பல பெண்கள் இதுபோன்ற கொடுமையை ஒவ்வொரு நாளும் அனுபவித்துவருகிறார்கள் என்பது புரிந்தது” என்று கசந்த புன்னகையோடு சொல்கிறார் சுனிதா.
புதிய பாதை
அதன் பிறகு சுனிதாவின் பாதையும் பயணமும் விசாலமடைந்தன. வலுக்கட்டாயமாகப் பாலியல் தொழிலுக்குள் தள்ளப்படும் பெண்கள் குறித்து அறிந்துகொண்டார். கல்லூரியில் படித்த சமூகவியல் பாடம் சுனிதாவின் பார்வையை மேம்படுத்த, தான் பயணிக்க வேண்டிய பாதை எதுவென அவருக்குப் புரிந்தது. இந்தியாவில் லட்சக்கணக்கான பெண்கள் பாலியல் கடத்தலுக்கு ஆளாகிறார்கள். பதினாறு வயதுக்குக் குறைந்த குறிப்பாக நான்கு, ஐந்து வயதுக்குள் இருக்கும் பெண் குழந்தைகள் அதிக எண்ணிக்கையில் கடத்தப்படுகிறார்கள்; விற்பனை செய்யப்படுகிறார்கள். ஆனால், அவர்கள் அனைவரும் தத்தெடுப்பு, வீட்டு வேலை, குழந்தைப் பராமரிப்பு எனப் பல்வேறு பொய்களின் பேரில் கடத்தப்பட்டு விற்கப்படுகிறார்கள். ஆண்கள் அனுபவித்துத் தூக்கி எறியும் பொருளாகப் பெண்கள் சித்தரிக்கப்படுவதுதான் இவற்றுக்கெல்லாம் மூல காரணம் என்பது சுனிதாவுக்குப் புரிந்தது. பெங்களூருவில் 1996-ல் நடந்த ‘மிஸ் வேர்ல்டு’ அழகிப் போட்டியை எதிர்த்துப் போராட்டம் நடத்தினார். அதற்காகக் கைது செய்யப்பட்டார்.
மாற்றத்தைத் தேடி
அதன் பிறகுதான் அமைப்பாகச் செயல்பட வேண்டியதன் அவசியம் அவருக்குப் புரிந்தது. பெற்றோரின் ஆதரவும் இல்லாத நிலையில் பெங்களூருவில் உள்ள வீட்டைவிட்டு வெளியேறி ஹைதராபாத் வந்தார். தன் சிந்தனையோடு இசைந்துபோன அருட்பணியாளர் ஜோஸ் வெட்டிகாட்டில் என்பவருடன் இணைந்து ‘பிரஜ்வலா’ அமைப்பைத் தொடங்கினார். “அப்போது எங்கள் கையில் சல்லிக்காசுகூட இல்லை. மன உறுதியும் நம்பிக்கையும் மட்டுமே இந்த அமைப்பைத் தொடங்கும் துணிவைத் தந்தன” என்று சொல்லும் சுனிதா, சமூகத்தின் மரத்துப்போன மனநிலையைச் சாடுகிறார்.
“பாலியல் தொழிலுக்காகக் குழந்தைகளும் பெண்களும் கடத்தப்படுவது குறித்து ஏ.சி. அரங்கங்களில் உட்கார்ந்து விவாதிப்போம். அவர்கள் மறுவாழ்வுக்காக எவ்வளவோ பேசுவோம். ஆனால், அப்படிப் பாதிக்கப்பட்டவர்களை மட்டும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். நம் வீடுகளில் வேலை செய்ய அவர்களை அனுமதிக்க மாட்டோம். நம் குழந்தைகள் படிக்கிற பள்ளிகளில் அவர்களின் குழந்தைகள் படிப்பதை விரும்ப மாட்டோம். இந்தப் புறக்கணிப்புதான் அவர்களை இன்னும் அதே நிலையில் வைத்திருக்கிறது” என்று நிதர்சனத்தைச் சொல்கிறார்.
மலரச் செய்யும் மறுவாழ்வு
பாலியல் கடத்தலில் இருந்து மீட்கப்பட்டவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்காக ஹைதராபாத்தில் 15-க்கும் மேற்பட்ட பள்ளிகளை ‘பிரஜ்வலா’ அமைப்பு நடத்திவருகிறது. பாலியல் தொழில், பாலியல் கடத்தல் போன்றவற்றுக்கு எதிராக சுனிதா களப்பணியாற்றுவதால் பல்வேறு வகையான மிரட்டல்களையும் சந்தித்துவருகிறார். ஒரு தாக்குதலின்போது பலமாக அடிபட்டதில் அவரது ஒரு காது கேட்கும் திறனை இழந்துவிட்டது. மீட்புப் பணியின்போது தன் சக பணியாளர் ஒருவரைப் பலிகொடுக்க நேர்ந்தது குறித்தும் சுனிதா வருத்தத்துடன் பகிர்கிறார்.
இதுபோன்ற இன்னல்களை எல்லாம் எதிர்கொண்டு 24 ஆயிரத்துக்கும் அதிகமான குழந்தைகளையும் பெண்களையும் தன் அமைப்பின் மூலம் மீட்டிருக்கிறார். இப்படி மீட்பதுடன் தங்களது அமைப்பின் கடமை முடிந்துவிட்டதாக அவர் நினைக்கவில்லை. அவர்களைப் பராமரிப்பதோடு மனநல ஆலோசனை பெறுவதற்கான ஏற்பாடுகளையும் செய்துதருகிறார். அவர்கள் கல்வி கற்கவும் கைத்தொழில் பழகவும் வழிவகை செய்துதருகிறார். பயிற்சி முடித்த பெண்களைத் தகுதியான நிறுவனங்களில் பணிக்கு அமர்த்துகிறார்.
பாலியல் தொழிலில் இருந்து மீட்கப்பட்ட பெண் ஒருவரை வெல்டிங் வேலையில் சேர்த்துவிட்டது குறித்து இப்படிச் சொல்கிறார்: “ஏன் வெல்டிங் வேலை? மற்ற வேலைகளில் சேர்க்கலாமே எனத் தோன்றலாம். ஆனால், இந்த வேலைதான் சரி என்று எனக்குத் தோன்றுகிறது. பெரும் போராட்டத்தில் இருந்து மீண்டு வந்த, துடிப்புடன் இருக்கிற பெண்ணுக்கு இப்படியான சவால் நிறைந்த வேலைதான் பொருத்தமானது”.
பிஞ்சுகளுக்கு நேரும் கொடுமை
பாலியல் தொழிலில் இருந்து மீட்கப்பட்ட பெண்களை அவர்களின் குடும்பங்களுடன் சேர்த்துவைக்கும் பணியையும் ‘பிரஜ்வலா’ செய்துவருகிறது. ஆனால், பலரை ஏற்றுக்கொள்ள குடும்பங்கள் மறுக்கின்றன என்று சொல்லும் சுனிதா, சமூகத்தின் இந்தப் போலியான கவுரவத்தையும் அணுகுமுறையையும் கேள்வி கேட்கிறார். சிலர் திருமணம் செய்துகொண்டு குடும்பத்தோடு மகிழ்ச்சியாக வாழ்வது நம்பிக்கையை அதிகரிப்பதாகக் குறிப்பிடுகிறார்.
தன் செயல்பாடுகள் குறித்து சுனிதா பேசியிருக்கும் காணொளியில் ப்ரணிதா, ஷாஹீன், அஞ்சலி என்கிற மூன்று குழந்தைகளைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். ப்ரணிதாவின் அம்மா, பாலியல் தொழிலாளி. எச்.ஐ.வி. தொற்றுக்கு ஆளான அவர், தன் வாழ்வின் இறுதி நிலையில் பாலியல் தொழிலில் ஈடுபட முடியாமல் தன் நான்கு வயது மகளை விற்றுவிடுகிறார்.
தகவல் அறிந்து அந்தக் குழந்தையை மீட்கச் செல்வதற்குள் பலரால் அவள் சீரழிக்கப்பட்டிருந்ததாக சுனிதா சொல்கிறார். “ஷாஹீனை நாங்கள் ரயில் தண்டவாளத்தில் கண்டெடுத்தோம். எத்தனை பேரால் என்று குறிப்பிட்டுச் சொல்லமுடியாத வகையில் அவர் வல்லுறவுக்கு ஆளாகப்பட்டிருந்தாள். எந்த அளவுக்கு என்றால், அவள் உடலிலிருந்து வெளியே வந்துவிட்ட குடலை மீண்டும் உள்ளே வைக்க 37 தையல்கள் தேவைப்படும் அளவுக்கு அவள் சிதைக்கப்பட்டிருந்தாள். தன் தந்தையாலேயே போர்னோகிராஃபிக்காக விற்கப்பட்டவள் அஞ்சலி. இவர்கள் மூவரும் நான்கு, ஐந்து, மூன்று வயதுக் குழந்தைகள்” என்று வேதனையோடு சொல்கிறார் சுனிதா.
மௌனமும் குற்றமே
குழந்தைகளும் பெண்களும் பண்டங்களாக விற்கப்படுவதை வன்மையாகக் கண்டிக்கும் சுனிதா கிருஷ்ணன், பொதுமக்களின் மரத்துப்போன மனநிலை தன்னைச் சோர்வுறச் செய்வதாகச் சொல்கிறார். “பாலியல் கடத்தலுக்கு ஆளாகி, மீட்கப்பட்ட ஒவ்வொரு குழந்தையும் தவறாமல் சில விஷயங்களைச் சொல்வார்கள். சிகரெட்டால் சூடுவைக்கப்பட்டிருப்பார்கள் அல்லது அவர்களின் பிறப்புறுப்பில் மிளகாய்ப்பொடி தூவப்பட்டதாகச் சொல்வார்கள். மனிதர்களின் வக்கிரம் இவர்களைப் போன்ற குழந்தைகளைக்கூட விட்டுவைப்பதில்லை. இப்படிச் செய்தவர்கள் எல்லாம் நம் வீட்டிலோ நம் வீட்டுக்குப் பக்கத்திலோ வசிக்கிறவர்களாகவோ, நமக்குத் தெரிந்தவர்களாகவோ இருக்கலாம். ஆனால், நமக்கு அதைப் பற்றியெல்லாம் எந்தக் கவலையும் இல்லாமல்தான் கடந்து செல்கிறோம்” என்கிறார் சுனிதா.
தொடரும் பயணம்
ஆண்களின் மீதான வெறுப்பு எல்லை கடந்துவிடாமல் இருக்கத் தன் கணவர் பெரிதும் உதவுவதாகக் குறிப்பிடுகிறார். “மூன்று, நான்கு வயது குழந்தைகள் சிதைக்கப்படுவதைப் பார்க்கும்போது, ஆண் இனத்தின் மீது வெறுப்பு ஏற்படுவது இயல்புதான். உன் கோபத்தை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், உன்னைச் சுற்றி உன் அப்பாவைப் போல, சகோதரனைப் போல நல்ல ஆண்களும் இருக்கத்தானே செய்கிறார்கள் என்று அடிக்கடி சொல்வார். அந்த வார்த்தைகள்தாம் என்னை ஆண் வெறுப்பில் இருந்து காப்பாற்றிவருகின்றன” என்று புன்னகைக்கிறார்.
பாலியல் குற்றத்தில் ஈடுபடுகிறவர்களை அம்பலப்படுத்தும் நோக்கில் இவர் தொடங்கிய ‘ஷேம் த ரேப்பிஸ்ட்’ பிரச்சாரத்துக்குப் பல்வேறு தரப்பினரிடம் இருந்து ஆதரவும் எதிர்ப்பும் கிடைத்தன. இருந்தாலும் தன் கொள்கையில் உறுதியுடன் இருந்து பாலியல் குற்றவாளிகளை அம்பலப்படுத்துவதோடு, அவர்களுக்குச் சட்ட ரீதியான தண்டனை வாங்கித் தருவதிலும் முனைப்புடன் செயல்பட்டுவருகிறார். சுனிதாவின் சேவையைப் பாராட்டி மத்திய அரசு அவருக்கு 2016இல் பத்மஸ்ரீ விருது வழங்கிக் கவுரவித்தது. “அங்கீகாரமோ, எதிர்ப்போ எதுவும் என் பணிகளுக்கு முற்றுப்புள்ளியோ முட்டுக்கட்டையோ போட முடியாது” என்று சொல்லும் சுனிதா கிருஷ்ணன், தன் செயல்பாட்டுப் பரப்பை விரிவாக்கிக்கொண்டே செல்கிறார்.