புலிட்சர் 2022: விமர்சனத்துக்குக் கிடைத்த விருது

புலிட்சர் 2022: விமர்சனத்துக்குக் கிடைத்த விருது
Updated on
3 min read

லகம் எவ்வளவு முன்னேறினாலும் ஒடுக்கப்படுகிறவர்களின் நிலையில் பெரிய அளவில் மாற்றமில்லை. மே 14, சனிக்கிழமையன்று அமெரிக்க இளைஞர் ஒருவர் நிறவெறி காரணமாகப் பத்து பேரைச் சுட்டுக்கொன்றதுடன் அதைச் சமூக வலைத்தளத்தில் நேரலையாக ஒளிபரப்பியது சமீபத்திய சான்று. இந்தப் பின்னணியில் இருந்து பார்க்கும்போது ஆப்ரிக்க அமெரிக்கப் பேராசிரியர் சலமீஷா டில்லட்டுக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் 2022ஆம் ஆண்டுக்கான புலிட்சர் விருது அர்த்தமுள்ளதாக இருக்கிறது.

ஆங்கிலப் பேராசிரியரான சலமீஷா, விமர்சகருக்கான புலிட்சர் விருதுக்குத் தேர்வுசெய்யப்பட்டுள்ளார். ‘தி நியூயார்க் டைம்ஸ்’ நாளிதழில் இவர் எழுதிய விமர்சனக் கட்டுரைகளுக்காக இந்த விருது வழங்கப்படுகிறது. நிறவெறியும் கறுப்பினத்தவர்கள் மீதான ஒடுக்குமுறையும் கலைவடிவங்களில் எப்படி வெளிப்படுகின்றன என்பதைத் தொடர்ந்து கவனப்படுத்திவருகிறார் சலமீஷா. சமூகப் பார்வையும் ஆழமான புரிதலும் கொண்ட அப்படியான கட்டுரைகள்தாம் இவர் புலிட்சர் விருது பெற காரணம்.

எழுத்தாளர், கல்வியாளர், சமூகச் செயற்பாட்டாளர் என்று சலமீஷாவுக்குப் பல்வேறு அடையாளங்கள் உண்டு. அமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ள நுவார்க் நகரில் வசிக்கும் சலமீஷா, தனக்குக் கலைத் துறை மீது ஆர்வம் ஏற்படக் காரணம் தன் அக்காதான் என்று நேர்காணல் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். ஆங்கிலத் துறையில் முனைவர் பட்டம் பெற்றிருக்கும் இவர், ஹென்றி ரட்ஜர்ஸ் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். கலை, பாலினம், நிறவெறி போன்றவை குறித்து ‘தி நியூயார்க் டைம்ஸ்’ நாளிதழில் 2015 முதல் எழுதிவருகிறார். நிறவெறி, அடிமைத்தனம் குறித்துப் புத்தகங்கள் எழுதியுள்ளார்.

குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறையை ஒழிக்கும் நோக்குடன் தன் அக்காவுடன் இணைந்து 2003-ல் ‘எ லாங் வாக் ஹோம்’ (A Long Walk Home) என்கிற கலை அமைப்பை நிறுவினார். கறுப்பினச் சிறுமிகள் - இளைஞர்களையும் அவர்களின் குடும்பங்களையும் முன்னேற்றுவதற்காக ‘பிளாக் கேர்ள் ஃப்ரீடம் ஃபண்ட்’ என்கிற அமைப்பைத் தொடங்கிப் பத்து ஆண்டுகளாக நடத்திவருகிறார்.

‘கொல்லும்’ சடங்கு

2021-ல் சலமீஷா எழுதிய ஆறு கட்டுரைகள் புலிட்சர் தேர்வுக்குழுவினரால் தேர்வுசெய்யப்பட்டது. அவற்றில் ஜார்ஜ் ஃபிளாயிட் குறித்து எழுதிய கட்டுரை முக்கியமானது. அமெரிக்கக் காவல் அதிகாரி ஒருவரால் கழுத்தில் மிதிக்கப்பட்டு மூச்சுத் திணறி இறந்தார் கறுப்பினத்தவரான ஜார்ஜ் பிளாயிட். அந்தக் காட்சிப் பதிவான வீடியோவைத் தன்னால் பார்க்க முடியாது என்று சலமீஷா மறுத்துவிட்டார். ‘அந்த வீடியோவைப் பார்க்கக் கூடாது என்பதை எவ்வித முன்தீர்மானத்துடனும் நான் சொல்லவில்லை. இது எனது மேம்பட்ட மறுப்பு. கறுப்பினத்தவரைப் பொதுவெளியில் கொல்வது என்னும் அமெரிக்காவின் மிகப் பழமையான சடங்கைக் காணும் பார்வையாளராக இருப்பதில் எனக்கு விருப்பமில்லை’ என்று தன் கட்டுரையில் அவர் குறிப்பிட்டுள்ளார். 30 ஆண்டுகளுக்கு முன்பு தான் பள்ளி மாணவியாக இருந்தபோது நான்கு வெள்ளையினக் காவல் அதிகாரிகளால் ரோட்னி கிங் என்பவர் அடித்துக் கொல்லப்பட்ட வீடியோவைப் பார்க்க நேர்ந்தது குறித்துக் குறிப்பிட்டிருக்கும் சலமீஷா, அந்த வழக்கின் தீர்ப்பு சிறுமியான தன்னை அதிர்ச்சியடையச் செய்ததாக எழுதியுள்ளார். ‘ஒரு குழந்தை கற்றுக்கொண்ட மிகக் கொடுமையான பாடம் அது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

வழக்கில் தொடர்புடைய காவல் அதிகாரிகள் நால்வரும் விடுவிக்கப்பட்டது பள்ளி மாணவியான சலமீஷாவை உலுக்கியது. உலகமே தெள்ளத் தெளிவாகக் கண்ட காட்சி, வெள்ளையினத்தவரின் கண்களுக்கு மட்டும் எப்படி வேறு கோணத்தில் தெரிகிறது என்று யோசித்தவர், ‘இந்த நாட்டில் கறுப்பினத்தவராக வாழ்வது என்பது எப்போதும் மரணத்துக்குத் தங்களை ஒப்புக்கொடுப்பதைப் போன்றது’ என்று தான் புரிந்துகொண்டதாகக் குறிப்பிடுகிறார்.

அவர்களின் உடல் என் உடல்

ஜார்ஜ் ஃபிளாயிட் கொல்லப்பட்டதை 17 வயது டார்னெல்லா ஃபிரேசியர் துணிச்சலோடு படம் பிடித்திருந்தாலும் தன்னால் அதைப் பார்க்க முடியவில்லை என்று சொல்லும் சலமீஷா, அந்தப் படுகொலையின் தொடர்ச்சியாக உலகம் முழுவதும் உயிர்பெற்ற ‘பிளாக் லைவ்ஸ் மேட்டர்’ இயக்கத்தில் தானும் பங்கெடுத்ததாகக் குறிப்பிடுகிறார். ‘கரோனா பொதுமுடக்கத்தால் வீட்டுக்குள் அடைபட்டிருந்த நான் வீட்டைவிட்டு வெளியே வந்து அந்தப் பேரணியில் பங்கேற்றேன். இறந்தவரின் உடல்கள் என் உடல் என்கிற புரிதலோடுதான் ‘பிளாக் லைவ்ஸ் மேட்டர்’ என்று முழக்கமிட்டேன்’ என்று குறிப்பிடுகிறார் சலமீஷா. பொதுச் சமூகம், கறுப்பினத்தவரை எப்போதும் குறைவாக நடத்துவதில் மாற்றத்தை ஏற்படுத்தவும், கறுப்பினத்தவர் வாழ்வில் ஒளிகூட்டவும் தன் எழுத்து ஏதோவொரு வகையில் உதவ வேண்டும் என்பதற்காகத் தொடர்ந்து எழுதிவருகிறார் இவர். மக்களை எளிதில் சென்றடையும் கலைவடிவங்களில் முன்னெடுக்கப்பட்டுவரும் மாற்றங்கள் குறித்து கவனப்படுத்தும் சலமீஷா, அவற்றில் மலிந்திருக்கும் நிறவெறியையும் பிற்போக்குத்தனத்தையும் சுட்டிக்காட்டத் தவறுவதில்லை. “கலை, கலாச்சாரம் இரண்டும் நாம் எந்த அளவுக்கு முன்னேறியிருக்கிறோம் என்பதைப் பறைசாற்றும் காரணிகள். அவை குறித்துக் கவனப்படுத்த நான் எப்போதும் விரும்புகிறேன்” என்று புலிட்சர் விருது அறிவிப்புக்குப் பிறகு கூறியிருக்கிறார் சலமீஷா டில்லட்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in