

சந்தோஷி மாதா, தாமரை, அமுதசுரபி, ஸ்ரீமாதா, வான்மழை, செம்பருத்தி, கன்னிப்பூக்கள், பாசப் பறவைகள், சீசா, ஐந்து இதழ்கள் இவையெல்லாம் இனி மேல் தொலைக்காட்சிகளில் வரவிருக்கும் மெகா தொடர்களின் தலைப்புகளோ, திரைப்படங்களின் பெயர்களோ கிடையாது. திருநங்கைகள் தங்களுக்குள் ஐந்து பேர், பத்து பேராக இணைந்து உருவாக்கிய சுயஉதவிக் குழுக்களின் பெயர்கள்தாம் இவை.
பூ கட்டுதல், உணவகம், மீன் அங்காடி, அழகுக் கலை, அரிசி வியாபாரம், புடவை விற்பனை எனப் பல தொழில்களை இந்தக் குழுக்களைச் சேர்ந்த திருநங்கைகள் செய்துவருகின்றனர். இந்தப் பத்து குழுக்களை ஒன்றிணைத்து, `வடசென்னை திருநங்கைகள் சுய உதவிக் குழுக்களின் கூட்டமைப்பு' செயல்படுகிறது. இதன் மூன்றாவது ஆண்டு தொடக்க விழா அண்மையில் லயோலா கல்லூரியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவனால் தொடங்கி வைக்கப்பட்டது.
இந்தியாவிலேயே திருநங்கை சமூகத்துக்கான நல வாரியத்தை முதன் முதலாக செயல்படுத்திக் காட்டியவர் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி. அவரின் வழியில் தற்போதைய அரசும் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது என்பதைக் கோடிட்டுக் காட்டினார் அமைச்சர் கீதா ஜீவன்.
"2012-ல் நாங்கள் சுய உதவிக் குழுக்கள் ஆரம்பிக்கும்போது பல தடைகளை எதிர் கொண்டாம். எங்களுடைய மக்களிடம் அரசின் நலத் திட்டங்களைப் புரியவைப்பதற்கே நாங்கள் படாத பாடு படவேண்டியிருந்தது. பொதுச் சமூகத்தின் கேலி, கிண்டல், எதிர்ப்பு எல்லாவற்றையும் நாங்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இந்தப் பத்து ஆண்டுகளில் எங்களை நம்பிச் சுழல் நிதியாக லட்சக்கணக்கான ரூபாய்களைக் கொடுப்பதற்கு வங்கிகள் தயாராக இருக்கின்றன என்பதிலிருந்தே எங்களுடைய உழைப்பின் மேன்மையையும் நம்பகத்தன்மையையும் புரிந்துகொள்ள முடியும். தனிநபராக ஒரு விஷயத்துக்குப் போராடுவதைவிட, சுய உதவிக் குழுவின் மூலமாக நம்முடைய கோரிக்கைகளை, தேவைகளை எளிதாக நிறைவேற்றிக் கொள்ள முடியும்" என்றார் வடசென்னை திருநங்கைகள் சுய உதவிக் குழுக்களின் கூட்டமைப்பின் தலைவர் சங்கரி அம்மாள்.
அமைச்சர் கீதா ஜீவன் பேசும்போது, "சமூகத்தில் திருநங்கைகளையும் சமமாகப் பார்க்கும் வாய்ப்பை அரசு உருவாக்கி அவர்களின் வாழ்வாதாரத்துக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் தேவையான நிதி ஆதாரங்களைப் பெறுவதற்கு உதவிவருகிறது. இதற்காக உருவாக்கப்பட்ட திருநங்கை வாரியத்தில் ஏறக்குறைய 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பதிவுசெய்திருக்கின்றனர். இதுதவிர குழுவில் செயல்படாத திருநங்கைகளுக்கும் அரசு தனிநபர் உதவிகளைச் செய்துவருகிறது" என்றார்.