

பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறையைத் தடுப்பதற்காக மத்திய அரசும் மாநில அரசும் பல்வேறு சட்டங்களையும் திட்டங்களையும் ஏற்படுத்தியுள்ளன. ஆனால், அவற்றுள் பல திட்டங்கள் குறித்துப் பலருக்கும் தெரிவதில்லை. போதிய விழிப்புணர்வு இல்லாததாலேயே வன்முறையைச் சகித்துக் கொண்டு வாழும் பெண்களும் உண்டு. ஆம்புலன்ஸ், காவல் துறை போன்றவற்றுக்கு இணையாக அவசர உதவிக்காகப் பெண்கள் எந்நேரமும் அழைக்கும் வகையில் பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் அறிமுகப்படுத்தப்பட்ட 181 என்கிற உதவி எண் குறித்துப் பலரும் அறிந்திருக்கவில்லை.
இந்த மகளிர் உதவி எண் தமிழ்நாட்டிலும் நடைமுறையில் உள்ளது. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் இது செயல்படுத்தப்படுகிறது. வீடு, பணியிடம், பொதுவெளி என்று எந்த இடத்தில் பிரச்சினையை எதிர்கொண்டாலும் பெண்கள் இந்த இலவச உதவி எண்ணுக்கு அழைக்கலாம். 24 மணிநேரமும் இந்தச் சேவை உண்டு. குடும்ப வன்முறையை எதிர்கொள்கிற பெண்கள் மட்டுமல்ல; வன்முறைக்கான மிரட்டலை எதிர்கொள்கிறவர்கள், அவசர உதவி தேவைப்படுகிறவர்கள், துயரத்தில் இருக்கிற பெண்கள் - குழந்தைகள் என அனைத்துவிதமான பிரச்சினைகளை எதிர்கொள்கிறவர்களும் இந்த மகளிர் உதவி எண்ணைத் தொடர்புகொள்ளலாம்.
அழைக்கிறவர்களின் ரகசியம் காக்கப்படும் என்பதால் எவ்விதத் தயக்கமும் தேவையில்லை. நாம் எதிர்கொள்கிற பிரச்சினைக்குத் தகுந்த வழிகாட்டுதல் கிடைக்கும். உதாரணத்துக்குக் குடும்ப வன்முறை தொடர்பான பிரச்சினை குறித்துச் சொன்னால், அதிலிருந்து மீள யாரைச் சந்திக்க வேண்டும், அதற்கான வழிமுறைகள் என்னென்ன என்பன குறித்து விளக்கமாகச் சொல்வார்கள். காவல் துறை, உள்ளூரில் இருக்கும் சமூக சேவை மையத்தின் தொடர்பு எண் போன்றவற்றையும் தந்து உதவுவார்கள். சட்ட உதவி தேவைப்படுவோருக்குச் சட்ட உதவி மையங்கள் குறித்துச் சொல்வார்கள். ஒரே இடத்தில் பெண்கள் தீர்வுகாண வகைசெய்யும் ‘ஒன் ஸ்டாப் சென்டர்’ அருகில் இருந்தால் அவற்றைப் பற்றிய தகவலும் கிடைக்கும். தொடர்புகொள்ள வேண்டியவரைப் பற்றிய தகவலுடன் பெண்கள் - குழந்தைளுக்கான நலத் திட்டங்கள், வன்முறையிலிருந்து காக்கும் சட்டங்கள் போன்றவை குறித்த தகவலையும் 181 மகளிர் உதவி எண் மூலம் பெறலாம்.
சிறப்பு உதவி
காது கேளாதோரும் பேச முடியாதோரும் 181 உதவி எண்ணைத் தொடர்புகொள்ளும் வகையில் நேரலையில் பேசும் முறையையும் அறிமுகப்படுத்தியுள்ளனர். இதற்கென சைகை மொழியில் பயிற்சி பெற்ற பிரத்தியேக ஆலோசகர்கள் 24 மணி நேரமும் பணியில் இருக்கிறார்கள். இந்தப் பிரத்தியேகச் சேவையைப் பெற விரும்புகிறவர்கள் தங்கள் பெயர், வீடியோ அழைப்பு வசதி கொண்ட மொபைல் எண்ணைப் பதிவுசெய்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தொடர்புகொண்டு பேசுவார்கள்.