

தற்போது 57 வயதாகும் பேச்சியம்மாள், தூத்துக்குடி மாவட்டம் 'எப்போதும் வென்றான்' அருகே உள்ள காட்டுநாயக்கன்பட்டி எனும் கிராமத்தில் வசித்துவருகிறார். 20 வயதில் அவருக்குத் திருமணம் நடந்தது. ஆனால், அந்தத் திருமண வாழ்வு 15 நாட்கள்கூட நிலைக்கவில்லை. மாரடைப்பால் ஏற்பட்ட கணவரது மரணம், அவருடைய திருமண வாழ்க்கைக்கு முடிவுரை எழுதிவிட்டது.
பேச்சியம்மாளின் வயது, எதிர்கால நலன் ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு அவரை மீண்டும் திருமணம் செய்துகொள்ளுமாறு குடும்பத்தினர் வற்புறுத்தி உள்ளனர். அந்த யோசனையை பேச்சியம்மாள் உறுதியாக மறுத்துவிட்டார். இந்நிலையில் 15 நாள் மணவாழ்வில் அவர் கர்ப்பமானது தெரியவந்தது. கணவரின் நினைவாக, மகிழ்ச்சியுடன் கருவைச் சுமந்த அவர் ஓரு பெண் குழந்தையையும் பெற்றெடுத்தார்.
குழந்தை வளர்ப்பு எளிதல்ல
குழந்தையை வளர்த்தெடுப்பது அவ்வளவு உவகையளிக்கும் செயல் அல்ல. அதுவே ஆணாதிக்கச் சித்தாந்தம் வேரூன்றி இருக்கும் நம்முடைய சமூக அமைப்பில் தனியொரு பெண்ணாகக் குழந்தையை வளர்ப்பது என்பது மிகவும் கடினமானது. கணவரின் அரவணைப்போ பொருளாதாரப் பாதுகாப்போ இல்லாத சூழலில், தன்னுடைய குழந்தையை வளர்ப்பதற்காக அவர் வேலைக்குச் சென்றார்.
வாழ்வை மாற்றிய முடிவு
வேலைக்குச் செல்லும் இடத்தில் ஏற்பட்ட அச்சுறுத்தல்கள் அவரைப் பின்னுக்கு இழுத்தன. ஆனால், வேலைக்குச் செல்லாவிட்டால் உணவில்லை என்கிற நிலையில், தன்னுடைய பாதுகாப்பையும், குழந்தையின் ஆரோக்கியத்தையும் உறுதிசெய்வதற்காக, அவர் ஆணாக வாழ முடிவுசெய்தார். இதற்காகத் தான் வசித்த ஊரைவிட்டுப் பேச்சியம்மாள் வெளியேறினார். திருச்செந்தூர் கோவிலுக்குச் சென்று மொட்டை அடித்துக் கொண்ட பேச்சியம்மாள், ஆண்களைப் போன்று சட்டை லுங்கி, வேஷ்டி அணியத் தொடங்கினார். தன்னுடைய பெயரை முத்து என மாற்றிக்கொண்டார். புதிய வசிப்பிடத்தில், விரைவிலேயே முத்து என்பது அவருடைய பெயராகவும், ஆண் என்பது அவருடைய அடையாளமாகவும் நிலைத்துவிட்டது.
இந்தப் புதிய பெயரில், ஆண் என்கிற அடையாளத்தில் பல ஊர்களுக்குச் சென்று பல வேலைகளைப் பார்க்கத் தொடங்கினார். டீக்கடை முதல் பரோட்டோ கடை வரை அனைத்து இடங்களிலும் முத்து என்கிற பெயரில் அவர் வேலை செய்தார். அரசாங்கத்தின் 100 நாள் வேலைத் திட்டத்திலும் முத்து என்கிற பெயரில் பங்கேற்றார். ஆண்களுக்கு நிகராக பெயிண்ட் அடிக்கும் வேலைக்குக் கூட அவர் சென்றுள்ளார். சென்னையில் இருக்கும் டீக்கடைகளில் கூட வேலை பார்த்துள்ளார்.
மகளின் மேன்மைக்காகவே தன்னுடைய அடையாளத்தை மாற்றிக் கடுமையாக உழைத்தார் பேச்சியம்மாள். இன்று அந்த முயற்சியில் அவர் வெற்றியும் அடைந்துவிட்டார். சமீபத்தில் தன்னுடைய மகளுக்கு நல்லமுறையில் திருமணம் செய்துவைத்துவிட்டார்.
காத்திருக்கும் பேச்சியம்மாள்
30 ஆண்டுகளுக்கு மேலாக ஆணாக வலம் வந்த பேச்சியம்மாளுக்கு, தற்போது அதற்கான தேவை இல்லை என்றே சொல்ல வேண்டும். முக்கியமாக, வயது முதிர்வு காரணமாக, அவரால் முன்புபோலக் கடினமான பணிகளைச் செய்ய முடியவில்லை. எனவே, பெண்களுக்கு வழங்கும் அரசு சார்பிலான உதவிகளைப் பெறுவது தனக்கு இனி உதவும் என்று நம்புகிறார். ஆனால், ரேஷன் கார்டு, ஆதார் அட்டை ஆகியவற்றில் அவர் பெயர் முத்து என்றே இருப்பதால், அரசாங்கத்தின் பயன்களை அவர் பெற முடியாது. இந்தச் சூழலில்தான், தன்னுடைய உண்மையான அடையாளத்தை அவர் உலகுக்கு அறிவித்து இருக்கிறார்.
அரசாங்கம் அவர் நிலையைக் கருத்தில்கொண்டு விதவை நிதி உதவி, முதியோர் ஓய்வூதியத்தொகை போன்றவற்றை வழங்க முன்வர வேண்டும் என்பது அவருடைய எதிர்பார்ப்பாக உள்ளது. அந்த எதிர்பார்ப்பு விரைவில் நிறைவேறும் என நம்பிக்கையுடன் பேச்சியம்மாள் காத்திருக்கிறார்.