

சர்வதேசச் செவிலியர் தினத்தையொட்டி, இந்த ஆண்டு ‘உலகின் சிறந்த செவிலியர்’ விருது, கென்யாவைச் சேர்ந்த அன்னா கேபால் டுபாவுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இந்த விருது மூலம் சுமார் 2 கோடி ரூபாய் பரிசாக அளிக்கப்பட்டிருக்கிறது!
கென்யக் கிராமம் ஒன்றில் 19 குழந்தைகளில் ஒருவராகப் பிறந்து, ஆரம்பப் பள்ளிக்கு மேல் படித்த ஒரே குழந்தை அன்னா கேபால்தான். 31 வயது அன்னா தொற்று நோயியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்கிறார்.
"எனக்குக் கல்வியின் மீது அளவற்ற மரியாதை உண்டு. நான் கல்வியின் சுவையை அனுபவித்த பிறகு, அதை மற்றவர்களும் பெற வேண்டும் என்று நினைத்தேன். அதற்காகவே எங்கள் கிராமத்தில் பள்ளி ஒன்றை நடத்திவருகிறேன். அதில் காலையில் குழந்தைகளும் மாலையில் பெற்றோரும் கல்வி பயில்கின்றனர். கென்யா முழுவதுமுள்ள பள்ளிகளுக்கு இந்தப் பரிசுத் தொகையைச் செலவிட இருக்கிறேன்” என்கிறார் அன்னா கேபால்.
பள்ளி மட்டுமின்றி, ‘கேபால் டுபா அறக்கட்டளை’ ஒன்றையும் நடத்தி வருகிறார் இவர். இந்த அறக்கட்டளை இளம் பெண்களுக்கும் தாய்மார்களுக்கும் அதிகாரம் அளிக்கும் நோக்கில் செயல்பட்டு வருகிறது. பெண் உறுப்புச் சிதைப்பு என்னும் சடங்கையும் குழந்தைத் திருமணங்களையும் தடுத்து நிறுத்தும் பணிகளையும் மேற்கொண்டு வருகிறது.
கென்யாவில் பெண் உறுப்புச் சிதைப்பு, சட்டத்துக்குப் புறம்பானது. அதனால் மக்கள் கென்ய எல்லையைக் கடந்து, இந்தக் கொடூரத்தை அரங்கேற்றி வருகின்றனர். அன்னா கேபாலும் 12 வயதில் பெண் உறுப்புச் சிதைப்புக்கு உள்ளானவர். 14 வயதில் இவருக்குத் திருமணம் நடத்த திட்டமிடப்பட்டது. அதிலிருந்து தப்பிப் படிப்பை முடித்து, செவிலியரானார் அன்னா கேபால்.
“ஆணாதிக்கத்தில் ஊறிய குடும்பங்களில் இருந்து வந்தவர்கள் நாங்கள். கலாச்சார ரீதியாகப் பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை வெளிப்படுத்துவது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. நான் என் படிப்பின் மூலம் இந்தப் பிரச்சினைகளைத் துணிச்சலுடன் எதிர்த்து வருகிறேன்” என்கிறார் இவர்.
அன்னா கேபால் பணியாற்றும் ரெஃபரல் மருத்துவமனையின் இயக்குநர் ஹசன் ஹலாக்கே, “இளம் பெண்களின் பிரச்சினைகளைப் புரிந்துகொள்வதிலும் துணிச்சலாக நடவடிக்கைகள் எடுப்பதிலும் அன்னா கேபால் திறமையானவர். இவர் மூலம் கணிசமான பெண்கள் விழிப்புணர்வைப் பெற்றிருக்கிறார்கள்” என்கிறார்.
2019ஆம் ஆண்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ‘க்ளோபல் சிட்டிசன் விருது’ அன்னா கேபாலுக்கு வழங்கப்பட்டது. இது இவருக்குக் கிடைக்கும் இரண்டாவது மிகப் பெரிய விருது.