

இருசக்கர வாகனங்களை ஓட்டிச் செல்கிற பெண்களுக்குக் கனரக வாகனங்களை இயக்கும் வாய்ப்புப் பெரும்பாலும் மறுக்கப்படுகிறது. கனரக வாகனங்களை இயக்குவதற்கான தொழில்நுட்பத் திறனும் உடல் வலுவும் பெண்களுக்கு இல்லை என்று இப்போதும் பலர் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், ஆங்காங்கே மாற்றங்கள் நிகழாமல் இல்லை. பொள்ளாச்சி நகராட்சியின் முதல் பெண் ஓட்டுநர் என்கிற பெருமையைப் பெற்றிருப்பதன் மூலம் மாற்றத்துக்கு வித்திட்டிருக்கிறார் சாந்தி.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியைச் சேர்ந்தவர் சாந்தி, நான்கு குழந்தைகளுக்குத் தாய்; கணவனை இழந்தவர். குடும்ப உறவுகளின் ஆதரவு இல்லாமல், தனது சொந்த முயற்சியால் ஓட்டுநர் பயிற்சி முடித்தார். 12 ஆண்டுகள் பல மாநிலங்களுக்கு இரவும் பகலும் சரக்கு வாகனங்களை ஓட்டிச் சென்றுள்ளார். இன்று பொள்ளாச்சி நகராட்சியின் முதல் பெண் ஓட்டுநராகச் சேர்ந்து பொள்ளாச்சி சாலைகளில் சிங்கப் பெண்ணாக வலம்வருகிறார்.
எந்தச் சூழல் உங்களைச் சரக்கு வாகன ஓட்டுநராக மாற்றியது?
என் கணவர் நாகராஜன் கூலி வேலைக்குச் சென்று குடும்பத்தைக் காப்பாற்றிவந்தார். 12 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது இறப்பு எனக்குப் பொருளாதாரரீதியாகப் பெரும் சுமையாக மாறியது. மூன்று பெண் குழந்தைகள், கைக்குழந்தையான மகன் ஆகியோரை வைத்துக்கொண்டு தனியாக எப்படி அவர்களைக் கரைசேர்க்கப் போகிறேன் என்னும் கவலையில் தூக்கமின்றிப் பல இரவுகள் தவித்துள்ளேன். என்ன ஆனாலும் குழந்தைகளை உறவுகளுக்கு மத்தியில் தலைகுனியவிடக் கூடாது என்கிற வைராக்கியம் எனக்குள் எழுந்தது. அதற்காகப் பல அவமானங்களையும் மோசமான பேச்சுகளையும் எதிர்கொண்டேன். கூலி வேலை செய்தாவது குழந்தைகளுக்குப் படிப்பையும், நல்ல எதிர்காலத்தையும் தர வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். அதற்காகத் தனியார் நிறுவனத்தில் கூலி வேலைக்குச் சேர்ந்தேன். வேலைக்குச் சென்றபோது, அங்கே நிறுத்தப்பட்டு இருக்கும் சரக்கு வாகனத்தை ஓட்டிப் பார்க்க வேண்டும் என்னும் ஆசை எனக்குள் எழுந்தது. உன்னால் முடியுமா என உடன் இருந்தவர்கள் கேட்டனர். முதலில் தயங்கினாலும் எனக்குள் இருந்த தயக்கத்தை உடைத்து வெளியில் வந்தேன். ஓட்டுநராக ஆகிவிட்டால் குடும்பத்தின் பொருளாதாரத்தை அடுத்தக் கட்டத்துக்கு நகர்த்திச் செல்ல முடியும் என்று தோன்றியது. வாகனத்தை ஓட்ட கற்றே தீர்வது என்கிற வைராக்கியத்தில் ஒரே வாரத்தில் ஓட்டியும் பழகினேன். ஓட்டுநர் உரிமமும் பெற்றேன்.
சரக்கு வாகன ஓட்டுநராக இந்தச் சமூகத்தில் உங்களின் அனுபவம் எப்படி இருக்கிறது?
ஒரு தனியார் நிறுவனத்தில் ஏழு ஆண்டுகள் பணியாற்றினேன். கரோனா காலத்தில் வேலையில்லாததால் பல இடங்களில் வேலை தேடினேன். முதலில் என்னை ஓட்டுநராக நம்ப மறுத்தார்கள். எனது ஓட்டுநர் உரிமத்தைக் காண்பித்த பின்னர், பொள்ளாச்சி காய்கறிச் சந்தையில் காய்கறி வாகனம் ஓட்டும் வேலை கிடைத்தது. கேரளம், ஆந்திரம், கர்நாடகம் எனப் பல மாநிலங்களுக்குச் சரக்கு வாகனம் ஓட்டியுள்ளேன். ஒரு பெண் சரக்கு வாகனம் ஓட்டுவதை ஏற்றுக்கொள்ளும் மனநிலை ஆண் ஓட்டுநர்கள் சிலருக்கு இல்லை. சாலையில் வாகனத்தை ஓட்டிச் செல்லும்போது, என்னைக் கடந்து செல்லும் ஆண் ஓட்டுநர்கள், இளக்காரமாகத் திட்டுவார்கள். திருநெல்வேலியில் நான் ஓட்டிச் சென்ற வாகனம் பஞ்சராகி நின்றுவிட்டது. அவ்வழியாக வந்த வாகன ஓட்டுநர்களிடம் உதவி கேட்டபோது, யாரும் உதவ முன்வரவில்லை. அப்போது வேதனையாக உணர்ந்தேன்.
பெண் ஓட்டுநர் என்பதால் உங்களை மரியாதைக் குறைவாக நடத்துபவர்கள் மீது உங்களுக்கு கோபம் வரவில்லையா?
எனது வாகனத்தைக் கடந்து செல்பவர்கள் வாகனத்தை ஓட்டி வருவது பெண் எனத் தெரிந்ததும் வேகத்தைக் குறைத்துவிடுவார்கள். அவரது வாகனத்தைக் கடக்க முற்படும்போது எனது வாகனத்தை ஓரம்கட்டி விடுவார்கள். அப்போது கோபம் வரத்தான் செய்யும். ஆனால், குடும்பச் சூழல் கருதி அமைதியாக இருப்பேன். ஒரு பெண்ணாக எல்லா இடங்களிலும் இப்படிக் கடந்துபோய்விட மாட்டேன். ஒரு முறை ஆக்டிங் ஓட்டுநராகச் சென்றபோது வாடிக்கையாளர்களாக வந்த ஆண்கள் சிலர் தங்களுக்குள் காது கூசும் அளவுக்குச் தகாத முறையில் பேசிக்கொண்டு வந்தனர். என்னால் அதைச் சகித்துக்கொள்ள முடியவில்லை. இப்படிப் பேச வேண்டாம் என்று பலமுறை அவர்களிடம் சொல்லிக்கொண்டே வந்தேன். அவர்கள் கேட்கவில்லை. ஒரு கட்டத்தில் வாகனம் பழுதாகிவிட்டது எனக் கூறி அவர்களை வாகனத்தில் இருந்து இறங்கச் சொல்லி நடுரோட்டில் இறக்கி விட்டுவிட்டு வந்துவிட்டேன். அதேபோல் ஒருமுறை சந்தைக்கு வாகனம் ஓட்டிச் சென்றபோது, என்னைக் கண்டதும் ஒருவர், “ஏய்...” என அழைத்து மரியாதைக் குறைவாகப் பேசினார். அதே இடத்தில் அவரை அறைந்துவிட்டேன். எந்த இடத்திலும், எந்தச் சூழ்நிலையிலும் பெண்கள் தங்களைப் பிறர் தரக்குறைவாகப் பேச இடம்கொடுத்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருப்பேன்.
பொள்ளாச்சி நகராட்சியில் ஓட்டுநர் வாய்ப்பு கிடைத்தது எப்படி?
கரோனா காலத்தில் போதிய வருமானம் இல்லை. வாடகை கொடுக்க முடியவில்லை. குழந்தைகளுக்கு உணவு தரவே சிரமப்பட்டேன். கடந்த ஆட்சியில் நகராட்சியில் ஓட்டுநர் பணி கேட்டேன். வாய்ப்பு கிடைக்கவில்லை. தற்போதைய ஆட்சியில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுவருவது அறிந்து சில வாரங்களுக்கு முன்பு பொள்ளாச்சி நகராட்சித் தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணனைச் சந்தித்து எனது குடும்பச் சூழலைப் பற்றி எடுத்துச் சொன்னேன். கடந்த 12 ஆண்டுகளில் ஒரு முறைகூட விபத்து இல்லாமல் நான் வாகனம் ஓட்டிவருவதைத் தெரிந்துகொண்டார். உடனடியாகத் தற்காலிக ஓட்டுநர் பணியைக் கொடுத்தார். 100 ஆண்டுகள் பழமையான பொள்ளாச்சி நகராட்சியில் முதல் முறையாக ஒரு பெண் ஓட்டுநராக என்னை நியமித்துள்ளனர் என்பதை நினைக்கும்போதே பெருமிதமாக உள்ளது. நகராட்சி வாகனத்தின் சாவியைக் கையில் வாங்கிய அந்த நொடி என் குழந்தைகளின் முகமும் அவர்களின் எதிர்காலத்துக்கு ஒரு பிடிப்பு கிடைத்துவிட்டது என்கிற எண்ணமுமே என்னுள் வந்து சென்றன. ஒரு பெண் உடலாலும், மனத்தாலும் வலிமையானவள் என்பதை இந்தச் சமூகத்துக்குப் புரியவைக்க எனக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்பு இது.
உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீதம் ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. பெண்கள் அதிகாரத்தில் இருந்தால் என்னென்ன மாற்றங்களைக் கொண்டுவர முடியும் என்பதற்கு பொள்ளாச்சி நகராட்சியில் ஓட்டுநராகச் சேர்ந்திருக்கும் சாந்தியே சான்று.
படங்கள்: ஜெ.மனோகரன்