மனைவி ஓட்டுநர்; கணவர் நடத்துநர்
ஒரே துறையில் பணியாற்றும் தம்பதியர் நமக்குப் புதிதல்ல. அதிலும் ஒரே அலுவலகத்தில் வேலை செய்வோரும் நம்மிடையே உண்டு. ஆசிரியர்கள், ஐ.டி. நிறுவன ஊழியர்கள், மருத்துவர்கள், வியாபாரிகள் என்று நீளும் பட்டியலில் இந்தத் தம்பதி புதுவகை.
டெல்லி அருகிலுள்ள காஸியா பாத்தின் அரசுப் பேருந்தின் நடத்துநர் முகேஷ் குமார். இவர் தனது பேருந்தின் ஓட்டுநராகத் தன் மனைவி வேத் குமாரி இருக்க வேண்டும் என விரும்பினார். முகேஷின் விருப்பம் நிறைவேற, ஒரே பேருந்தில் கணவன், மனைவி இருவரும் பணியாற்றுகிறார்கள்.
“வாகனம் ஓட்டுவதில் எனக்கு ஆர்வம் இருந்ததில்லை. என் கணவரும் புகுந்த வீட்டினரும்தான் நான் ஓட்டுநர் ஆகக் காரணம். எனினும், பெரும்பாலும் ஆண்கள் மட்டுமே செய்யும் பணியை முதல் பெண்ணாக நான் செய்வது வித்தியாசமான அனுபவமாக உள்ளது. எனக்குப் பயிற்சி நிலையத்தினர் அளித்த ஒத்துழைப்பை மறக்க முடியாது. சவால்கள் நிறைந்த இந்த ஓட்டுநர் பணியில் துணிந்து இறங்கினால் பெண்களுக்கு நிச்சயம் வெற்றிதான்” என நம்பிக்கை அளிக்கிறார் வேத் குமாரி.
மணமாகி 17 ஆண்டுகளாக வீட்டுடன் இருந்த வேத் குமாரிக்கு 14 வயதில் மகனும், ஒன்றரை வயதில் மகளும் உள்ளனர். தன் அம்மாவுடன் சேர்ந்து கூட்டுக் குடும்பமாக வாழ்வதால் மனைவி வேத் குமாரியை வேலைக்கு அனுப்பலாம் என எண்ணியுள்ளார் முகேஷ். அப்போது உத்தரப் பிரதேச அரசால் பெண்களுக்கு முதன் முறையாக ஒட்டுநர் பயிற்சி அறிவிக்கப்பட்டது. அந்த வாய்ப்பை முகேஷ் தம்பதி முறையாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளனர். கணவர் முகேஷின் வேண்டுகோளுக்கு இணங்க அவரது மனைவி வேத் குமாரியை முகேஷ் பணியாற்றும் அதே பேருந்தில் பணியமர்த்த நிர்வாக அதிகாரிகளும் சம்மதித்துவிட்டனர்.
உத்தரப் பிரதேச அரசு, ஓட்டுநர் பயிற்சி நிலையத்தின் பெண்கள் குழுமத்திற்கான முதல் பயிற்சி கடந்த மார்ச் 8-ல் தொடங்கியது. இவர்கள் வரும் மே மாதம் 15-ம் தேதி முழுப்பயிற்சி பெற்று பணியில் சேர உள்ளனர். இவர்களில் ஒருவரான வேத் குமாரி, தன் பயிற்சியின் ஒரு கட்டமாகத் தனது கணவர் நடத்துநராக உள்ள பேருந்திலேயே இணைந்துள்ளார். மே 15-க்குப் பிறகும் வேத் குமாரி, அதே பேருந்திலேயே ஓட்டுநராகத் தொடர்வார்.
