

சில ஆண்டுகளுக்கு முன்பு மலையாள நடிகை ஒருவர் கடத்தப்பட்டுப் பாலியல் தொந்தர வுக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கில் நடிகர் திலீப் உள்படப் பலர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. அதற்குப் பின்னால் உள்ள கூட்டுச் சதி அம்பலமானது. இது மலையாள சினிமாவில் பெண்கள் மீதான துன்புறுத்தல்களுக்கு எதிரான ஒன்றுகூடலுக்கு வித்திட்டது.
அந்தச் சம்பவத்துக்கு எதிராக மலை யாள நடிகர்கள் சங்கமான ‘அம்மா’ சரியான நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை எனக் குற்றம்சாட்டி நடிகைகள் பலரும் அமைப்பிலிருந்து வெளியேறினர். பாலி யல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட நடிகையும் அதிலிருந்து வெளியேறினார்.
இந்தப் பெண்கள் ஒன்றுகூடி டபுள்யூசிசி (WCC – Women in Cinema Collective) என்னும் பெயரில் ஒரு தனி அமைப்பைத் தொடங்கினர். பணியிடத்தில் தங்களுக்கு எதிரான பாலியல் சுரண்டல் குறித்து இவர்கள் குரல்கொடுக்கத் தொடங்கினர். தொடர்ந்து கேரள அரசு மலையாளத் திரையில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் மூவர் கொண்ட கமிஷனை 2017-ல் அமைத்தது. அந்த கமிஷன் அறிக்கை சமீபத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அந்த அறிக்கையின் முழு வடிவத்தை வெளியிட வேண்டும் என டபுள்யூசிசி அரசை வலியுறுத்திவருகிறது. பிரமுகர்கள் பலரைக் குறித்து அந்த அறிக்கையில் பெண்கள் புகார் அளித்துள்ளதாகவும் அதை அம்பலப்படுத்த வேண்டும் என்றும் டபுள்யூசிசி சார்பில் சொல்லப்படுகிறது. ஆனால், அரசுத் தரப்பு இதை வெளியிட மறுத்துவருகிறது.
தொடர்ச்சியான புகார்கள்
இன்னொரு புறம் நடிகரும் மலையாளத் தின் முன்னணித் தயாரிப்பாளர்களில் ஒருவருமான விஜய் பாபுவுக்கு எதிராகச் சில நாட்களுக்கு முன்பு ஒரு புதுமுக நடிகை கொச்சி போலீஸில் புகார் அளித்தார். தனக்கு மது புகட்டி சுய நினைவில்லாத நிலைக்குத் தள்ளித் தன்னைப் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் தன் நிர்வாண ஒளிப்படத்தை வைத்து மிரட்டுவதாகவும் அந்தப் புகாரில் அவர் தெரிவித்திருந்தார். விஜய் பாபுவோ, ‘அந்தப் புதுமுக நடிகையால் நான்தான் பாதிக்கப்பட்டேன். என் பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் புகார் அளித்துவிட்டு அவர் மட்டும் கேக் வெட்டி சந்தோஷப்பட வேண்டாம். அவர் பெயரை நான் வெளிப்படுத்துகிறேன்’ என்று சொல்லி சம்பந்தப்பட்ட நடிகையின் பெயரை ஃபேஸ்புக் லைவ் வீடியோவில் அம்பலப்படுத்தினார். இது பெரும் சர்ச்சைக்குள்ளானது. பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை வெளிப்படுத்தக் கூடாது என்று நீதிமன்ற அறிவுறுத்தல் உண்டு. அது தண்டனைக்குரியது. எனினும் தான் வெளிப்படுத்துவேன் எனச் சொல்லி விஜய் பாபு பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரைக் கூறினார்.
விஜய் பாபுவுக்கு எதிராகக் கடந்த மாதம் 22-ம் தேதி புகார் அளிக்கப்பட்டது. 24-ம் தேதி விஜய் பாபு துபாய்க்குச் சென்று தலைமறைவாகிவிட்டார். இப்போது அவரைக் கைதுசெய்ய இண்டர்போல் உதவியை நாடியிருப்பதாக போலீஸ் தரப்பில் சொல்லப்படுகிறது. இதிலுள்ள பொருத்தக்கேடுகளும் இப்போது விவாதம் ஆகியிருக்கின்றன. இதற்கிடையில் வேறொரு நடிகையும் விஜய் பாபுவுக்கு எதிராகப் பாலியல் பலாத்கார புகாரைச் சமூக ஊடகம்வழி வெளிப்படுத்தியிருந்தார். விஜய் பாபுவின் ஃபிரைடே பிலிம் ஹவுஸின் நிறுவனரும் அதன் பங்குதாரராகவும் இருந்த சாந்தரா தோமஸும் சில வருடங்களுக்கு முன்னால் விஜய் பாபுவுக்கு எதிராகப் புகார் கொடுத் திருந்தார். ஆனால், போதிய சாட்சியம் இல்லாததால் அது நிலை நிற்கவில்லை.
செயல்படாத ‘அம்மா’
இந்நிலையில் ‘அம்மா’வின் நிர்வாகக் குழு உறுப்பினரான விஜய் பாபுவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற குரல் எழுந்தது. நடிகை கடத்தப்பட்ட சம்பவத்தின் எதிர்வினையாக ‘அம்மா’வில் உள்ளகப் புகார்க் குழு (internal complaints committee) உருவாக்கப்பட்டது. நடிகை ஸ்வேதா மேனன் தலைமையிலான இந்தக் குழுவில் நடிகை மாலா பார்வதி, குக்கூ பரமேஷ்வரன் உள்ளிட்டவர்கள் உறுப்பினர்கள். ஐசிசி, விஜய் பாபு மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியது. ஆனால், ‘அம்மா’ நிர்வாகக் குழுக் கூட்டம் ஒரு தீர்மானமும் எடுக்காமல் கூடிப் பிரிந்தது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து முதலில் மாலா பார்வதியும் பிறகு ஸ்வேதா, குக்கூ பரமேஷ்வரனும் பதவி விலகினர்.
நடிகர் திலீபுக்கு எதிராக நடிகை மஞ்சு வாரியார் சில நாட்களுக்கு முன்பு சாட்சியம் அளித்தார். அதன் பிறகு அதன் விசாரணை அதிகாரி மாற்றப்பட்டார். இந்தச் சம்பவத்துக்குப் பிறகு மஞ்சுவின் உயிருக்கு ஆபத்து என இயக்குநர் சனல் குமார் சசிதரன் ஃபேஸ்புக்கில் வெளிப்படையாக அறிவித்தார். அவர் இது தொடர்பாக குடியரசுத் தலைவருக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதிக்கும் மனு அனுப்பினார். அதற்கு மறுநாள் அவரும் மஞ்சுவின் புகார் அடிப்படையில் கைது செய்யப்பட்டார்.
கல்வியறிவில் இந்தியாவில் முதன்மை மாநிலமாக இருக்கும் கேரளத்தில், உலக அளவில் சிறந்த படங்களை உருவாக்கி யுள்ள மலையாள சினிமா உலகத்தில் பெண்களுக்கு எதிராகத் தொடர்ந்து புறக் கணிப்பு நடந்துகொண்டே இருக்கிறது. ஹேமா கமிஷன் பரிந்துரையால் இது மாறுமா என்பது சந்தேகம்தான்.