

ஆண்மையின் அடையாளமாக முன்னிறுத்தப்படுவது மீசை. நாயகர்கள் பலர் மீசையை முறுக்கித் தமிழ் சினிமாக்களில் திரிந்து அதை உறுதிப்படுத்தவும் செய்திருக்கிறார்கள். பெண்களுக்கு மீசை என்பது அவலட்சணம்; கேலிக்குரிய ஹார்மோன் வளர்ச்சி. ஆனால், இதையே பெருமைக்குரிய அடையாளமாக மாற்றியிருக்கிறார் ஒரு பெண். கேரளத்தில் கண்ணூர் அருகே கோலையாட்டைச் சேர்ந்த சைஜாதான் அவர்.
‘பேரு: மீசைக்காரி, வயது: 33, கணவர்: 1, குழந்தை:1, காதல்: 1, ஊர்: கண்ணூர், மீசை: ஒரிஜினல், இனி வேறு என்ன தெரிந்துகொள்ள வேண்டும்? கேளுங்கள்’ என முகநூலில் பிரபலமான ‘வேர்ல்டு மலையாளிஸ் சர்க்கிள்’ என்கிற பக்கத்தில் சைஜா பகிர்ந்த இடுகை பெரும் வைரல் ஆனது. கேரளத்தில் முன்னணி பத்திரிகைகள் ஒன்றன் பின் ஒன்றாக சைஜாவின் வீட்டுக் கதவைத் தட்டின. ஒளிவுமறைவு இன்றி பட்டாசு வெடிப்பதுபோல் படபடவென தைரியத்துடன் பொரிந்து தள்ளும் மீசைக்காரியை பேட்டி காண அவை படை எடுத்தன. கேரளத்தின் பேசுபொரு ளாகவும் ஆனார் சைஜா. மஞ்சு வாரியரை வைத்துப் படம் இயக்கிய பேண்டோம் பிரவீன், சைஜாவின் வாழ்க்கையைப் படமெடுக்கவும் அணுகியுள்ளார்.
சைஜாவைத் தனித்துவமாகக் காட்டுவது மீசை மட்டுமல்ல. அவரது வெளிப்படையான பேச்சும்தான். பெண்ணியம் / பெண்ணியக் கருத்து என்கிற அளவில் பெரிய தத்துவங்களைப் பேசாமல் தன் நிலையில் இருந்து சடசடவெனப் பேசுகிறார். “மீசை தானாக வளர்ந்தது. எனக்குப் பிடித்ததால் வைத்துக் கொண்டேன். தாடிகூட வளரும். ஆனால், அதை வெட்டிவிடுவேன். எனக்குப் பிடிக்காது. இவ்வளவுதான். வேறு புரட்சி ஏதும் இல்லை” எனப் பட்டனெச் சொல்கிறார். சைஜாவுக்கு பிரபல அந்தஸ்து கிட்டியதுபோல் அவதூறுகளையும் சந்தித்துள்ளார். மீசையுடன் சுற்றித் திரியும் அவரை திருநங்கை எனச் சொல்லியுள்ளனர். சிலர் அவர் ஆண்தான், பெண்ணாக நடித்துக்கொண்டிருக்கிறார் என்று கூடச் சொல்லியிருக்கிறார்கள். இதை யெல்லாம் பெரிய நகைச்சுவைக் காட்சியைப் பார்த்தவரைப் போல் சிரித்துக்கொண்டேதான் பகிர்கிறார் சைஜா. மீசையைப் பற்றி விமர்சிப்ப வர்களைப் பார்த்து சைஜா, “மீசை என்னுடையது. என் முகத்தில் உள்ளது. அதற்கு நீங்கள் செலவுக்குப் பணம் கொடுக்கவோ கவனித்துக்கொள்ளவோ வேண்டாம். பிறகு என்ன பிரச்சினை?” எனக் கேள்வி கேட்கிறார்.
வீட்டில் அவருக்குப் பெரிய எதிர்ப்பு இல்லை. கணவரும் அம்மாவும் அதை ஏற்றுக்கொண்டுவிட்டார்கள். ஆனால், சமூக அளவில் ஏற்றுக்கொள்ள கொஞ்ச காலம் ஆனது. “கேரளத்தில் கட்டுப்பாடுகள் அதிகம். நாங்கள் தமிழ்நாட்டில் ஆறேழு வருஷம் இருந்தோம். அங்கு பெண்களுக்கு நேரக் கட்டுப்பாடெல்லாம் இல்லை. எங்கே போகிறாய், ஏன் இவ்வளவு நேரம் ஆச்சு, என யாரும் கேட்பதில்லை. அவ்வளவு சுதந்திரமாக இருந்தேன்” என்கிறார் சைஜா.
மீசையால் சில வசதிகள் சைஜா வுக்குக் கிடைத்திருக்கின்றன. நகரத்தில் ஒரு குளிர்பானக் கடையில் மாஸ்க்கைக் கழற்றிவிட்டு அருந்தும்போது கடைக்காரர் மீசையைக் கவனித்துவிட, “நீங்கள் மீசைக்காரிதானே காசு வேண்டாம்” எனத் தன் ஆதரவை வெளிப்படுத்தியிருக்கிறார்.
இன்றைக்கு ஹார்மோன் பிரச்சினைகளால் பெண்கள் பலருக்கும் மீசை வளர்கிறது. அதை நீக்க பெண்கள் படும்பாட்டை ஒப்பனைக் கலைஞரான தன் தோழி ஒருவர் மூலம் அறிந்திருக்கிறார் சைஜா. அது குறித்துச் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். மீசையுடன் வாழ்வதற்கான துணிவை பெண்கள் பலரும் சைஜாவிடம் முகநூல் அரட்டையில் கேட்டுக் கற்றுவருகிறார்கள்.
மீசை, ஆண்களுக்கானது என்பதால்தான் இந்தப் பிரச்சினை என்கிறார் சைஜா. “ஆண் கொலை செய்தாலும் பெண் கொலை செய்தாலும் தண்டனை ஒன்றுதானே, அப்படியானால் இதில் மட்டும் ஏன் பேதம்?” எனத் தனித்துவமான சிரிப்புடன் சமூகத்தை நோக்கிக் கேட்கிறார் சைஜா, மீசையை முறுக்காமல்.