

பெண்கள் அரசியலுக்கு வருவது வரவேற்கப்பட வேண்டிய முன்னகர்வு என்கிறபோதும், அரசியலுக்கு வருகிற பெண்கள் அனைவருமே மக்கள் நலன் சார்ந்து செயல்படுவதில்லை. பெண்களிலும் வலதுசாரித்தனத்துடன் நடந்துகொள்கிற அரசியல்வாதிகள் உண்டு. பிரான்ஸ் அதிபர் தேர்தலில் மூன்றாம் முறையாகப் போட்டியிட்டுத் தோற்றிருக்கும் மரின் லு பென், இந்தத் தோல்வியைத் தனது மூன்றாம் முயற்சி என்று குறிப்பிட்டுள்ளார்.
குற்றவியல் சட்டத்தில் பட்டப்படிப்பை முடித்த மரின் லு பென், தன் தந்தையின் தேசிய முன்னணிக் கட்சியில் 1998இல் இணைந்தார். 2003இல் அதன் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர், 2011இல் கட்சியின் தலைமைப் பொறுப்புக்கு வந்தார். சர்ச்சைக்குரிய கருத்துகளைச் சொன்னதற்காக 2015இல் தன் தந்தையைக் கட்சியைவிட்டு நீக்கினார். 2012இல் பிரான்ஸ் அதிபர் தேர்தலில் போட்டியிட்டு மூன்றாம் இடத்தைப் பிடித்தவர், 2017 தேர்தலிலும் தோல்வியைச் சந்தித்தார். தற்போது நடந்து முடிந்த 2022 தேர்தலில் தோல்வியடைந்தபோதும் 41.5 சதவீத வாக்குகளைப் பெற்றிருப்பது கவனிக்கத்தக்கது. தன்பாலின உறவுக்கு எதிர்ப்பு, கருக்கலைப்புக்கு மறுப்பு, மரண தண்டனைக்கு ஆதரவு, அகதிகளின் குடியேற்றத்துக்கு எதிர்ப்பு என்று பெரும்பாலான விஷயங்களில் வெகு மக்கள் விரோத நிலைப்பாட்டை எடுத்ததுதான் 2012 தேர்தல் தோல்விக்குக் காரணமாகச் சொல்லப்பட்டது. இருந்தபோதும் தேசியவாதம், பொருளாதாரம், குடியேற்றம், வெளியுறவுக் கொள்கை உள்ளிட்டவற்றில் இப்போதும் பிற்போக்கான கருத்துகளையே மரின் கொண்டுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்கும் நாடுகளின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலான வெளியுறவுக் கொள்கையை இவர் பரிந்துரைக்கிறார். எந்த அமைப்புக்கும் கட்டுப்படாத எதேச்சதிகாரமான வெளியுறவுக் கொள்கை ஆபத்தானது. இதுபோன்ற முடிவுகளும் இவர் தோல்விபெறக் காரணம். ஒருவேளை மரின் வெற்றிபெற்றிருந்தால் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்கும் நாடுகளின் ஒற்றுமைக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையிலான செயலைச் செய்திருப்பார் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். ஒரு பக்கம் உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலைக் கண்டித்துவிட்டு மறுபக்கம் ரஷ்யா நம் நட்பு நாடு என்று தெரிவித்துள்ளார். தன் கட்சியின் பெரும்பாலான அடிப்படைவாத, பிற்போக்குக் கருத்துகளுக்கு மரின் தொடர்ந்து ஆதரவளித்துவருகிறார். இந்த வலதுசாரித்தனம்தான் அவரது தோல்விக்குக் காரணம் என்று சொல்லப்பட்டாலும் மக்களும் அதற்கு ஆதரவளித்துவருகிறார்கள் என்பதை அவர் பெற்றிருக்கும் வாக்கு சதவீதம் உணர்த்துகிறது.