சுடச் சுட முட்டை குல்ஃபி 

சுடச் சுட முட்டை குல்ஃபி 
Updated on
3 min read

முட்டை ஆம்லேட், முட்டை கலக்கி, ஆஃப் பாயில், ஃபுல் பாயில், வேகவைத்த முட்டை, முட்டை பொடி மாஸ் என முட்டையை அடிப்படையாக வைத்துத் தயாரிக்கப்படும் பல்வேறு சிற்றுண்டி ரகங்களைக் கேள்விப்பட்டிருந்தாலும், ‘முட்டை குல்ஃபி’யை முதன் முறையாகக் கேள்விப்பட்டபோது, புதுமையாகவும் வித்தியாசமாகவும் இருந்தது!

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்திலிருக்கிறது ‘மைபாடு’ கடற்கரை. அப்பகுதியிலிருக்கும் அழகான பொழுதுபோக்கு இடமாக மைபாடு கடற்கரையை நெல்லூர் மக்கள் குறிப்பிடுகிறார்கள். நெல்லூரிலிருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் உள்ள மைபாடு கடற்கரையின் அழகை ரசிக்கலாம் என மாலை வேளையில் புறப்பட்டோம். சில மீனவக் கிராமங்களைத் தாண்டியதும் கண் முன்னே அழகாய் விரிந்தது அந்தக் கடற்கரை. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கடல் அலையில் கால் நனைத்தும், கடற்குளியல் போட்டும் மகிழ்ச்சியாகத் தங்கள் பொழுதைக் கழித்துக்கொண்டிருந்தனர்.

கடலோரம் கேட்ட குரல்

கடற்கரையையொட்டி பல்வேறு கடைகள் மின் ஒளியில் ஜொலித்துக் கொண்டிருந்தன! மீன் உணவுகளுக்கு அங்கே பஞ்சமில்லை! வெவ்வேறு அளவில் பொறித்த மீன் ரகங்கள், நண்டு, இறால் எனக் கடல் வாசனையோடு சேர்த்து மீன் வாசனையும் அப்பகுதியை ஆக்கிரமித்திருந்தது. மீன் உணவுக் கடைகளைத் தாண்டி, முட்டைகள் அடுக்கப்பட்டிருந்த சில கடைகள் வித்தியாசமாகக் காட்சி அளித்தன.

கடைகளை நோட்டமிட்டுக்கொண்டிருக்கும்போது, இரண்டு கைகளிலும் முட்டைகளை வைத்திருந்த இளைஞர், ‘வாங்க வாங்க… எக் குல்ஃபி சாப்பிடுங்க…’ எனத் தெலுங்கில் அழைப்பு விடுத்தார். ஏற்கெனவே தயார்செய்து வைக்கப்பட்டிருந்த முட்டை குல்ஃபியைக் காண்பித்து, ‘டிரை பண்ணிப் பாருங்க… சூப்பர் டேஸ்ட்’ என குல்ஃபிக்கு அறிமுகம் கொடுத்தார். புதுமையாக இருக்கிறதே, என்னவென்று பார்த்துவிடுவோம் எனும் ஆவல் மேலோங்கியது.

தொலைவில் இருந்து பார்ப்பதற்கு அப்படியே நம்ம பனிக்கூழ் குல்ஃபி சாயல். முட்டை குல்ஃபியை எப்படித் தயாரிக்கிறார்கள் என்பதை அறிந்துக்கொள்ள மூன்று முட்டை குல்ஃபிகளை ஆர்டர் செய்தேன். ஒரு குல்ஃபி தயாரிப்புக்கு இரண்டு முட்டைகள் தேவைப்படுகின்றன. எலக்ட்ரிக் அடுப்பு போன்ற அமைப்பை வைத்து குல்ஃபியைத் தயாரிக்கின்றனர். அடுப்பில் பத்து பதினைந்து ஆழமான குழிகள் இருக்கின்றன. முட்டைகளை உடைத்து வெள்ளை மற்றும் மஞ்சள் கரு இரண்டையும் ஒன்றாக அந்தக் குழிக்குள் ஊற்றினார் கடைக்காரர். சுமார் ஐந்து நிமிடங்கள் வேகவைக்கப்படுகிறது. லேசாக எண்ணெய் ஊற்றவும் அவர் தவறவில்லை.

ஐந்து நிமிடத்தில் தயார்

குழிக்குள் ஊற்றப்பட்ட முட்டைகள் நன்றாக வெந்துவிட்டனவா என்பதை அறிய ‘குல்ஃபி குச்சி’ பயன்படுகிறது. முட்டைகள் ஊற்றப்பட்ட ஆழமான குழிக்குள் நீளமான குல்ஃபி குச்சி செருகப்படுகிறது. அதாவது பணியாரம் வெந்துவிட்டதா என்பதை தெரிந்துக்கொள்ள அக்காலத்தில் நெம்புக்கோல் பயன்பட்டதைப் போல, குல்ஃபி குச்சி முட்டையின் பதத்தை அளவிடுகிறது! முட்டை முழுமையாக வேகவில்லை எனில், குச்சி அங்கும் இங்கும் நகர்கிறது. ஓரளவிற்கு வெந்திருப்பின் இறுக்கமாக குச்சியைப் பற்றிக்கொள்கின்றன முட்டைகள்!

சுமார் ஐந்து நிமிடத்தில் மேற்சொன்ன விஷயங்கள் எல்லாம் நடந்து, அந்த அடுப்புக் குழியில் இருந்து, குச்சி செருகப்பட்ட முட்டை குல்ஃபி தானாக வெளிவருகிறது! அதாவது வெப்பம் காரணமாக இறுகிய முட்டைகள் உந்தி வெளித்தள்ளப்படுகின்றன. பெளதீக மாற்றங்களுடன் முட்டை குல்ஃபி தட்டில் அடைக்கலமானது.

தேவைக்கேற்ப மிளகாயத் தூள் தூவப்படுகிறது. தேவைக்கு ஏற்ப என்பதைவிடத் தேவைக்கு அதிகமாகவே என்று சொல்லலாம். ஆந்திரப் பகுதியில் காரத்துக்கு அளவென்ன இருக்கிறது! ‘நிறைய வேண்டாம், லேசா தூவுங்க…’ எனக் குறிப்பு கொடுக்க, கொஞ்சமாக மிளகாய்த் தூள் தூவப்பட்ட முட்டை குல்ஃபியை என்னிடம் கைமாற்றினார்.

கையில் முட்டை குல்ஃபியைப் பதமாக ஏந்திக்கொண்டேன். கடற்கரையோரக் கடையில், அலைகளின் ஓசையை உள்வாங்கிக்கொண்டு மணலில் கால் பதிய புதுமையான உணவு ரகத்தைச் சுவைப்பது தனி சுகம்தான்! பொதுவாக நாம் சாப்பிடும் பனிக்கூழ் குல்ஃபி குளிர்ச்சி ரகம்! இந்த முட்டை குல்ஃபியோ ஆவி பறக்க ஊதி ஊதிச் சாப்பிட வேண்டிய சூடு ரகம். பனிக்கூழ் குல்ஃபி கொடுக்கும் சுவை அனுபவத்திற்கு, முட்டை குல்ஃபி கொஞ்சமும் சளைத்தது அல்ல!

மிளகாய்த் தூள் தூவப்பட்ட முட்டை குல்ஃபியைக் கடித்துச் சாப்பிட்டபோது அப்படியொரு சுவை. வேகவைக்கப்பட்ட முட்டைதான். ஆனால், பரிமாறும் விதம் வித்தியாசப்படும்போது, அது ஸ்பெஷல் உணவாகப் பதவி உயர்வு பெறுகிறது. மாலை நேர நொறுவையாக இந்த முட்டை குல்ஃபி நன்றாகப் பசியாற்றும். புதுமையான சுவை அனுபவத்தைக் கொடுக்கும்.

சத்துக் களஞ்சியம்

முட்டை குல்ஃபி கடையிலிருந்து சிறிது தொலைவில் பனிக்கூழ் குல்ஃபியின் வியாபாரமும் நடைப்பெற்றுக்கொண்டிருந்தது. ஆனால், முட்டை குல்ஃபி கடைக்குத்தான் அமோக வரவேற்பு. ‘இதற்கு எப்படி முட்டை குல்ஃபி எனப் பெயர் வந்தது? இந்தப் பகுதியின் ஸ்பெஷல் உணவா?’ எனக் கடைக்காரரிடம் வினாவினேன். ‘வியாபாரத்தைப் பெருக்க இந்த உத்தி எங்களுக்குத் தேவைப்பட்டது. முதலில் இதை ‘எக்-ரோல்’ என்று சொல்லித்தான் விற்பனை செய்தோம். ஆனால், இதன் வடிவத்தைப் பார்க்கும் போது, குல்ஃபி போல இருந்ததால், அந்தப் பெயரையே சூட்டிவிட்டோம். அதன் பிறகு இந்தப் புதுமையை மக்களும் ரசிக்கத் தொடங்கிவிட்டனர்…’ எனப் பதில் அளித்துத் தனது வியாபார ரகசியத்தையும் வெளிப்படுத்தினார் முட்டை குல்ஃபிக்குச் சொந்தக்காரர்.

முட்டை குல்ஃபியின் விலை முப்பது ரூபாய். மிளகாய்த் தூளுக்குப் பதிலாக மிளகுத் தூள் தூவி கொடுத்தால் ஆரோக்கியமாக இருக்கும் என்பது என் யோசனை. மைபாடு கடற்கரையில் கிடைத்த முட்டை குல்ஃபியின் நினைவுகள் புரதமாக என்னுள்ளே உட்கிரகிக்கப்பட்டன! உடலுக்கு ஊட்டம் கொடுக்கும் சிற்றுண்டியாக இந்த முட்டை குல்ஃபியைத் தாராளமாகச் சாப்பிடலாம். வயிற்றுப் புண்களை ஆற்றும் வெள்ளைக் கரு, ஊட்டம் கொடுக்கும் மஞ்சள் கரு, பசியாற்றும் ஆரோக்கிய சிற்றுண்டி, நுண்ணூட்டங்கள் நிறைந்த ஆவி பறக்கும் முட்டை குல்ஃபி… மொத்தத்தில் புரதங்களை வாரி வழங்கும் சத்துக் களஞ்சியம் இது.

கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர்|தொடர்புக்கு: drvikramkumar86@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in