Last Updated : 27 Apr, 2022 05:32 PM

 

Published : 27 Apr 2022 05:32 PM
Last Updated : 27 Apr 2022 05:32 PM

பிரசவத்துக்குப் பிந்தையை மன அழுத்தம்: தாயே குழந்தையைக் கொல்லக்கூடும்

ன் ஒன்றரை மாதக் குழந்தையைக் கொன்ற மும்பையைச் சேர்ந்த பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்திருக்கிறது மும்பை அமர்வு நீதிமன்றம். சம்பவம் நடந்து 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மும்பையைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு 2010இல் இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. குழந்தைகள் பிரசவ தேதிக்கு முன்னரே பிறந்ததாலும் எடை குறைவாக இருந்ததாலும் தாயும் குழந்தைகளும் மும்பையில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இரட்டைக் குழந்தைகளில் பெண் குழந்தையைக் காணவில்லை என்று 2010 அக்டோபர் 25ஆம் தேதி மருத்துவமனை செவிலியரிடம் அந்தப் பெண் தெரிவித்தார். உடனே, மருத்துவமனைக் காவலர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுத் தேடல் தொடங்கியது. மருத்துவமனையின் கழிவறைக்கு வெளியே குழந்தையின் அழுகுரல் கேட்பதாகக் காவலாளி ஒருவர் சொல்ல, அங்கே தலையில் பலத்த காயத்தோடு குழந்தை கண்டெடுக்கப்பட்டது.

குழந்தையைக் காணவில்லை

மருத்துவமனையின் சிசிடிவி காட்சிகளைப் பார்த்தபோது அந்தப் பெண் குழந்தையுடன் கழிவறைக்குச் சென்றதும் சிறிது நேரம் கழித்துக் கையில் குழந்தை இல்லாமல் வெளியேறியதும் கண்டறியப்பட்டது. கழிவறையின் ஜன்னலும் உடைக்கப்பட்டிருந்தது. ஜன்னலின் வழியே குழந்தையை வெளியே வீசிய அந்தப் பெண், தன் குழந்தை கடத்தப்பட்டுவிட்டதாகப் பொய் சொன்னது தெரியவந்தது. சிகிச்சை பலனின்றிக் குழந்தை இறந்துவிட, இந்த வழக்கில் மும்பை அமர்வு நீதிமன்றம் கடந்த வாரம் தீர்ப்பளித்தது.

தன் பெண் குழந்தையை அந்தப் பெண் கொலை செய்தார் என்பது சாட்சியங்கள் மூலம் நிரூபணமானாலும், அந்தப் பெண் பிரசவத்துக்குப் பிந்தைய மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு (போஸ்ட்பார்ட்டம் சிண்ட்ரோம்), சிகிச்சையில் இருந்தார் என்று மருத்துவமனை தரப்பில் வாதிடப்பட்டது. அந்தப் பெண்ணுக்குச் சிகிச்சை அளித்த அதே மருத்துவமனையைச் சேர்ந்த உளவியல் நிபுணரின் சாட்சியைக் கேட்ட நீதிபதிகள், “குழந்தையின் இறப்புக்குப் பிறகுதான் அந்தப் பெண் பிரசவத்துக்குப் பிந்தைய உளவியல் சிக்கலால் பாதிக்கப்பட்டிருப்பது பதிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கு முன்பு வரை அந்தப் பெண்ணுக்கு உளவியல் சிக்கல் இருப்பதாக மருத்துவமனை பதிவுகளில் குறிப்பிடப்படவில்லை. ஆண், பெண் என்று பிறந்த இரட்டைக் குழந்தைகளில் பெண் குழந்தையை மட்டுமே இந்தப் பெண் கொன்றிருக்கிறார். அவர் உளவியல் சிக்கலால் பாதிக்கப்பட்டிருந்தால் குழந்தையை ஜன்னலுக்கு வெளியே வீசிவிட்டு, குழந்தை காணவில்லை என்று நாடகமாடி இருக்க மாட்டார். அதனால், உள்நோக்கத்துடன்தான் குழந்தையை அவர் கொன்றிருக்கிறார்” என்று தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டனர்.

உளவியல் சிக்கல்

இரட்டைக் குழந்தைகள் பிறப்பதற்கு முன்பு அந்தப் பெண்ணுக்கு ஒரு முறை கருச்சிதைவு ஏற்பட்டிருக்கிறது. மற்றொரு பிரசவத்தின்போது குழந்தை பிறந்ததும் இறந்துவிட்டிருக்கிறது. இந்த முறையும் இரட்டைக் குழந்தைகள் பிறந்த பிறகு அந்தப் பெண் போதுமான அளவுக்கு ஓய்வெடுக்கவில்லை, சரியாகச் சாப்பிடவும் உறங்கவும் இல்லை என்று மருத்துவமனையின் உளவியல் நிபுணர் தெரிவித்துள்ளார். அந்தப் பெண்ணும் அவருடைய கணவரும் தொழுநோயால் பாதிப்பட்டவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளை வைத்திருந்த அறைக்குத் தினமும் 200 ரூபாய் வாடகை தர வேண்டும் என்று அந்தப் பெண்ணிடம் சொன்னார்களாம். பிரசவம் தொடர்பான செலவுகளுக்கு ஏற்கெனவே நிறைய கடன்வாங்கியிருக்கும் அந்தத் தம்பதியை இந்தச் செலவும் பயமுறுத்தியிருக்கும். அதுவும் அந்தப் பெண்ணின் மனநிலையை மேலும் சிக்கலுக்குள்ளாக்கியிருக்கும் என்பதும் அந்தப் பெண்ணின் தரப்பில் விளக்கப்பட்டது. ஆனாலும், அந்தப் பெண் தெரிந்தேதான் குழந்தையைக் கொன்றிருக்கிறார் என்று சொன்ன நீதிபதிகள், இரு பிரிவுகளின்கீழ் அவருக்குத் தண்டனை விதித்தனர்.

நிறம் மாறும் எண்ணங்கள்

பிரசவத்துக்குப் பிந்தைய மன அழுத்தத்தால் குழந்தையைக் கொன்ற முதல் பெண் இவரல்ல. உலகம் முழுக்க இதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்றன. Postpartum Depression என்பது பிரசவத்துக்குப் பிறகு பெண்களுக்கு ஏற்படுவது. உடல், உளவியல், நடத்தை எனப் பலவிதங்களிலும் இது பாதிப்பை ஏற்படுத்தும். பொதுவாகப் பிரசவித்த நான்கு வாரங்களில் இந்தச் சிக்கல் கண்டறியப்படுகிறது. குழந்தை பிறந்ததுமே அதுவரை உச்சத்தில் இருந்த ஹார்மோன்கள் இயல்பு நிலைக்குத் திரும்பத் தொடங்கும். அதோடு சுற்றியிருப்பவர்களின் நடத்தை, குடும்பச் சூழல் என எல்லாம் சேர்ந்து அந்தப் பெண்ணை உளவியல் ரீதியாகப் பாதிக்கும். பொதுவாகப் பத்தில் ஒரு பெண் இதனால் பாதிக்கப்படுவார். சிலருக்கு இது தானாகவே சில நாட்களில் சரியாகிவிடும். கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால் தீவிரமடைந்து மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். ஆயிரத்தில் ஒரு பெண் தீவிர உளவியல் பாதிப்புக்கு ஆளாவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பொதுவாகப் பிரசவத்துக்குப் பிறகு பெரும்பாலான பெண்களுக்குத் தூக்கமின்மை, சோர்வு, மலச்சிக்கல், திடீர் மனமாற்றம் போன்றவை ஏற்படுவது இயல்பு. இவற்றைக் கண்டறிந்து உடனே சரிசெய்துவிட்டால் சிக்கல் இல்லை. ஆனால், இதை அப்படியே விட்டுவிட்டால் போஸ்ட் பார்ட்டம் சிண்ட்ரோம் நிலைக்குச் சென்றுவிடுவோம். குழந்தையின் மீது அக்கறை இல்லாமல் இருப்பது அல்லது குழந்தையோடு உணர்வுரீதியாக ஒன்றமுடியாமை, எப்போதும் அழுதுகொண்டே இருப்பது, காரணமே இல்லாமல் அழுவது, அமைதியின்மை, அதீத கோபம் அல்லது எரிச்சல், என்னால் எதற்கும் பயனில்லை என்கிற விரக்தி, மன அழுத்தம், தற்கொலை அல்லது கொலை பற்றிய சிந்தனை, பிறரைக் காயப்படுத்திப் பார்க்க நினைப்பது, எதிலும் கவனமின்மை போன்ற அறிகுறிகள் போஸ்ட்பார்ட்டம் சிண்ட்ரோம் தீவிரமடைவதை உணர்த்தும். உடனே மனநல ஆலோசகரையோ மருத்துவரையோ சந்தித்து ஆலோசனை பெற வேண்டும். இல்லையெனில் விளைவுகள் மோசமானதாக இருக்கும். பெரும்பாலான பெண்கள் தங்களைக் காயப்படுத்திக்கொள்வர் அல்லது குழந்தையைக் காயப்படுத்துவர். அதனால், பிரசவம் முடிந்த பிறகு குழந்தையிடம் காட்டும் அக்கறையைத் தாயிடமும் காட்ட வேண்டும். தன்னை யாரும் கண்டுகொள்வதில்லை, தான் கைவிடப்படுகிறோம் என்கிற நினைப்பு தாயின் மனநிலையை மோசமாகப் பாதிக்கும். அது மும்பையில் நிகழ்ந்தது போன்ற விபரீதத்துக்கும் இட்டுச் செல்லலாம். அதனால், பிரசவத்துக்குப் பிறகு தாயின் மனநலத்தில் அக்கறை செலுத்த வேண்டியது அவசியம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x