Published : 01 Jun 2014 10:00 AM
Last Updated : 01 Jun 2014 10:00 AM

தன்னம்பிக்கையே அழகு

சிவப்பழகு விளம்பரங்கள் குறித்து நம் வாசகர்களிடம் இருந்து கடிதங்கள் மலை போல குவிந்துவிட்டன. மின்னஞ்சல், இணையதளம் மூலமும் பலர் கருத்துகளைப் பகிர்ந்து இருந்தார்கள். பலரும் ஒரே கருத்தை வெவ்வேறு வார்த்தைகளில் வெளிப்படுத்தியிருந்தார்கள். அனைத்துக் கடிதங்களிலும் சிவப்பழகின் மீது மக்களுக்கு இருக்கும் மோகத்தின் மீதான கோபம் அடிநாதமாக ஒலித்தது. அவற்றில் சில கடிதங்களை இங்கே பார்க்கலாம்.

அழகில் ஒளிந்திருக்கும் ஆபத்து

‘நான்கே வாரங்களில் சிவப்பழகு’ என்று வாய் கூசாமல் பொய் சொல்லி, பெண்களின் தாழ்வு மனப்பான்மையைப் பயன்படுத்தித் தங்களின் வியாபாரத்தைப் பெருக்கிக் கொள்கின்றன அழகுப்பசை தயாரிப்பு நிறுவனங்கள். சமீபத்தில் செய்தித்தாள்களில் வந்த செய்தி அதிர்ச்சியளிப்பதாக இருந்தது. அழகுக்காகப் பெண்கள் பயன்படுத்தும் பசைகளால் புற்றுநோய் தாக்கும் அபாயம் இருப்பதாக ஆய்வுகள் தெரிவித்திருப்பதை அந்தச் செய்திகள் சுட்டிகாட்டியிருந்தன. அப்படி இருந்தும் ஏன் அரசாங்கங்கள் அவற்றை தடைசெய்யாமல் வேடிக்கை பார்க்கின்றன என்று தெரியவில்லை. பெரியார் சொன்னதைத்தான் நாமும் சொல்ல வேண்டும். ‘பெண்கள் ஒன்றும் நகை மாட்டும் ஸ்டாண்ட் அல்ல! பெண்களை அழகின் அடிப்படையில் பார்ப்பதே ஆணாதிக்கச் சிந்தனையாகும்’.

ஐந்தே வயதுடைய என் இளைய மகள் அவ்வப்போது அவள் அம்மாவிடம் சென்று, “ஏன்மா என்னை கறுப்பா, அசிங்கமா பெத்த?” என்று கேட்டு அழுகிறாள். அந்தப் பிஞ்சு மனத்தி்ல் யார் விதைத்தது கறுப்பு அசிங்கம் என்கிற சிந்தனையை? கறுப்பாக இருக்கும் பெண்களுக்குத் திருமணத்தின்போது எத்தனை தடைகள் ஏற்படுகின்றன? பெண்கள் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள கல்வியும் அரசியல் தெளிவும் பெறவேண்டும். அப்போதுதான் இந்த வியாபார, ஆணாதிக்கச் சிந்தனைகளுக்கு இடம்கொடுக்காமல் இருப்பார்கள்.

- யாழினி முனுசாமி, சென்னை - 68.

காட்சிப்பொருளா பெண்?

அறிவியல் ரீதியாகப் பார்த்தாலும்கூட கறுப்புத் தோல்தான் நல்லது. பாதுகாப்பானது. ஏனெனில் நமது உடல் சுரக்கும் ‘மெலனின்' என்ற பொருளால் நமது தோல் கறுத்து, சூரிய ஒளியிலிருந்து ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கிறது. ஆனால் சிவப்புத்தோல் உள்ளவர்களுக்கு சூரிய ஒளி மூலம் தோல் வியாதிதான் வருகிறது.

பெண்களை இந்த உலகம் வெறும் போகப் பொருளாக, காட்சிப் பொருளாக, சதைப் பிண்டமாகத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறது. ஆண்கள் பயன்படுத்தும் ரேசர் விளம்பரத்துக்கும், பைக் விளம்பரத்துக்கும் அரைகுறை ஆடையுடன் பெண்களை ஆபாசமாகக் காட்டுகிறார்கள். இங்கு பொருளைவிட அந்தப் பெண்ணின் உடல்தான் விளம்பரப்படுத்தப்படுகிறது.

‘அழகு' என்று போற்றி அந்த மயக்கத்திலேயே பெண்களை மூழ்க வைத்திருக்கிறார்கள். மயக்கம் தெளிவதற்கு ஆண்கள் சமுதாயம் விடுவதாயில்லை. மயக்கத்திலிருந்து தெளிவதற்கு பெண்களுக்கும் விருப்பம் இல்லை. இதுதான் உண்மை.

பெண்களைத் தெய்வமாகப் போற்றி ஆராதனை செய்ய வேண்டாம். குறைந்தபட்சம் அவளும் தன்னைப் போல் ஒரு மனிதப் பிறவி என்று சக தோழியாய் மதித்தால் போதும்.

- தேஜஸ், காளப்பட்டி, கோவை.

எது அடையாளம்?

நிறத்தில் என்ன இருக்கிறது? எல்லாம் நம் மனதில்தானே இருக்கிறது? ஒருவரின் நிறத்தை வைத்து அவரின் குணத்தைத் தீர்மானம் பண்ணிவிட முடியுமா? நம் மண்ணின் நிறமே கறுப்புதானே. அடுத்தவருடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போதுதான் பிரச்சினையே தொடங்குகிறது. நம் நடை, உடை, பேச்சு, அடுத்தவரிடம் பழகும் விதம் இவைதான் நம்மைத் தீர்மானிக்குமே தவிர, நிறமல்ல.

- ஸ்ரீவித்யா, சென்னை.

சிவப்பு நிறம்தான் பெண்ணுக்கான முதல் கல்யாணத் தகுதி என்ற சமுதாயக் கருத்து இங்கே வேரூன்றப்பட்டிருக்கிறது. இந்த சிவப்பழகு ஆண்களை அவ்வளவாக பாதிப்பதில்லை. ஒவ்வொரு பெண்ணும் தன்னிடமுள்ள திறமைகளைக் கண்டறிந்து விடாமுயற்சியோடு பாடுபட்டு பயனுள்ள வழிகளில் தன்னைச் சாதனைப் பெண்ணாக உயர்த்திக்கொள்ளும் வழிகளில் பயணிப்பதில் அக்கறைகாட்ட வேண்டும்.

- லலிதா சண்முகம், உறையூர், திருச்சி.

சிவப்பழகு விளம்பரங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்குக் காரணம் மக்களிடம் இருக்கும் அதற்கான தேவையையே காட்டுகிறது. என்னதான் நாம் கறுப்பும் அழகுதான், வெண்ணிறத்தைவிட அது ஆரோக்கியமானது என்று கூறினாலும், சிவப்பழகுதான் பலராலும் விரும்பப்படுகிறது என்பதை ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும். இந்த உளவியலை வியாபாரமாக்கி கொண்டுவிட்டன சிவப்பழகு நிறுவனங்கள்.

- சு.ராகவி, பெருங்களத்தூர், சென்னை.

நிறம் என்பது மரபணுக்கள் தருவது. ஆனால் இந்த சமூகம் பெண்ணின் அழகு அவள் வெளிர்நிறத்தில் உள்ளது என்ற முகமூடியின் கீழ் வாழ்கின்றது. அது மாறும் நாளில்தான் இந்த விவாதம் முற்றுப்பெறும்.

- டி.என். சௌமியா.

என் அம்மா மாநிறமாகத்தான் இருப்பார்கள். என் அத்தை என் அம்மாவை நேரிடையாகவே, “இந்தக் கறுப்பிக்கு வந்த வாழ்வைப் பார்த்தியா?” என்று பேசுவார்கள். இப்படிச் சமூகத்தில் நடப்பதைத் தங்கள் வியாபார நோக்குடன் விளம்பரப்படுத்தி ஆதாயம் தேடிக் கொள்கிறார்கள். சம்பந்தப்பட்டவர்கள் உணர்ந்து விலகிக்கொண்டால்தான் பெண்கள் இந்த மாதிரிக் காட்சிப் பொருளாகப் பயன்படுத்தப்படாமல் இருப்பார்கள்.

- பிருந்தா ரமணி, மதுரை.

ஆரோக்கியமே நல்லது

கறுப்போ சிவப்போ ஆரோக்கியமான தோல் இருப்பதே நல்லது. உடல் சோர்வு, மனச்சோர்வு இல்லாமல் மனதை சுறுசுறுப்பாக வைத்துக் கொண்டால் அழகு தானாக வரும். பெண்கள் தங்களுக்கு விருப்பமான துறையில் முன்னேறினால் தன்னம்பிக்கை மூலம் அழகை நிரந்தரமாக்கலாம். குறிப்பாக அழகு பற்றிய விழிப்புணர்வு அனைவருக்கும் ஏற்பட வேண்டும்.

- அ. கீதா, திருச்சி - 26

தேவை தணிக்கை

தணிக்கை செய்யப்படாத விளம்பரங்கள்! மணி கட்டுவது யார்? திரையரங்குகளில் எப்போதாவது பார்க்கும் படங்கள் தணிக்கை செய்யப்பட்டு வருகின்றன. ஆனால் வீட்டில் குடும்பத்துடன் நிமிடத்திற்கு பலமுறை பார்க்கும் விளம்பரங்கள் தணிக்கை செய்யப்படாமல் வருவது ஏன் ? ஒரு வாசனை திரவியத்தைப் போட்டால் பெண்கள் கூட்டம் ஆண்களைச் சுற்றுமாம். பெண்கள் என்ன அவ்வளவு கேவலமானவர்களா? நிறம் ஒருவரின் காதலை தீர்மானிக்கும் சக்தியா என்ன ? தவறாக மனித இனத்தைச் வழிநடத்திச் செல்கின்றன விளம்பரங்கள். இதை அரசு கவனிக்குமா ?

- ராமதுரை.

சிவப்புதான் அழகு என்ற எண்ணத்தை மாற்றும் பொறுப்பு ஒவ்வொருவருக்கும் உண்டு. முக்கியமாகப் பெற்றோருக்கு. வயிற்றில் இருக்கும் குழந்தையின் உடல்நலத்தைவிட அதன் நிறத்துக்கு முக்கியத்துவம் தந்து, அதற்கான ஆயத்தங்களைச் செய்கிறார்கள். விளம்பரங்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். முடிவு செய்வது நாமாகத்தான் இருக்க வேண்டும்.

- வைஷாலி, ஹைதராபாத்.

சிவப்பழகு மோகம் அத்தியாவசியத் தேவைகளுக்காகப் போராடிக் கொண்டிருப்பவர்களிடம் இன்னும் ஊடுருவவில்லை. நிறம் சார்ந்த தாழ்வு மனப்பான்மை ஒருவருக்கு ஏற்படுகிறது என்றால் அவரைச் சுற்றியிருக்கிற சமூகத்துக்கும் அதில் பங்கு உண்டு.

- சுசீலா ராமமூர்த்தி, திருப்பூர்.

கறுப்பு ஒரு நிறம், காரம் ஒரு ருசி, சோகம் ஒரு சுவை என்பதை யாரும் உணர்ந்ததாகத் தெரியவில்லை. பின்னிரண்டு விஷயங்களை ஏற்றுக் கொள்கிறவர்களும் கறுப்பு ஒரு நிறம் என்பதை ஏற்றுக்கொள்ளத் தயங்குகிறார்கள்.

- கே.கே. பாலசுப்ரமணியன், குனியமுத்தூர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x