

ஒரு புத்தகத்தை வாசிப்பது என்பது வாழ்க்கையை வாசிப்பது, வரலாற்றை அறிந்துகொள்வது, கடந்த காலத் துக்குச் சென்று மீள்வது, எதார்த்தத்துக்கும் கற்பனைக்குமான ஊசலாட்டத்தை உணர்வது, வெறுமையும் சோகமும் கவிந்த முகத்தில் லேசான புன்னகையை அணிந்துகொள்வது, நம்மைப் பிணைத்திருப்பவை பிற்போக்குத்தனங்கள் எனத் தெளிவது... புத்தகங்களையும் அவை பேசும் பொருளையும் வைத்து இப்படி வகைப் படுத்திக்கொண்டே போகலாம். ஆனால், மனித மனத்தைச் சிறு அளவுக்காவது முன் நகர்த்துகிறவையே புத்தகங்கள் என்கிற பெயருக்குப் பொருள் சேர்க்கின்றன. பெண்கள் மீதான ஒடுக்குமுறை முழுவதும் நீங்காத இந்நாளில் பெண்கள் எழுதுவதையும், பெண்களைப் பற்றி எழுதுவதையும் அரசியல் செயல்பாடாகக் கருதவேண்டும். அந்த வகையில் அண்மையில் வெளியாகிக் கவனம்பெற்ற புத்தகங்களில் சில இவை:
கேளடா மானிடவா
குழந்தை வளர்ப்பும் பெற்றோரும்
l பிருந்தா சேது, ஹெர் ஸ்டோரிஸ், தொடர்புக்கு: 7550098666
குழந்தை வளர்ப்பின் மையச் சரடான ஆண் - பெண் பாகுபாட்டை எளிய மொழியில் எழுதியுள்ளார் பிருந்தா சேது. ஆண்மை என்பதும் பெண்மை என்பதும் கற்பிதம் என்று சொல்லும் இவர், குழந்தை வளர்ப்பில் ஆண்களின் பங்கு என்ன என்று கேட்கிறார். வேலை பகிர்வு, குழந்தைகளுக்குப் பாலியல் கல்வியின் அவசியம், காதல், காமம், உடல், மீ டூ, உறவுச் சிக்கல் என்று வெவ்வேறு தளங்களுக்கு இந்நூல் நம்மை அழைத்துச் செல்கிறது. பெண்ணையும் பெண்ணியத்தையும் ஊடகங்கள் படுத்தும்பாட்டை விரிவாகச் சொல்லி யிருக்கிறார் பிருந்தா. வாழ்க்கை அனுபவம், சம்பவங்கள், கதைகள், திரைப்படங்கள் போன்றவை கட்டுரைகளுக்கு வலுசேர்க்கின்றன.
விடுதலைக்கு முந்தைய தமிழ்ச் சிறுகதைகள் - 2
l (பெண்ணெழுத்து - 1: 1907 – 1947)
தேர்வும் தொகுப்பும்: அரவிந்த் சுவாமிநாதன், யாவரும் பதிப்பகம்
எழுத்தில் ஆண், பெண் பாகுபாடு ஏன் என்று சிலர் கேட்பது நியாயமாகத் தோன்றினாலும் எழுத்துலகில் ஆணுக்குக் கிடைக்கிற அனைத்தும் பெண்ணுக்குப் பெரும் போராட்டத் துக்குப் பிறகே கிடைக்கிறது. தவிர, ஆண்கள் வரைந்து வைத்திருக்கும் கோலத்தையெல்லாம் நேர் செய்வதும் மாற்றுவதும் பெண்களின் வேலையாக அமைந்துவிடுகிறது. அதனால்தான் பெண்ணெழுத்து எப்போதும் தனித்துவமானதாக இருக்கிறது. தமிழில் முதல் சிறுகதையை எழுதியவர் யார் என்கிற விவாதத்தைப் போலவே சிறுகதை எழுதிய பெண்களில் முதலாமவர் யார் என்கிற விவாதமும் நடைபெற்றுவரும் வேளையில் பெண்ணெழுத்தை ஆவணப்படுத்தும் நோக்கில் இந்தப் புத்தகத்தைத் தொகுத்திருப்பதாகச் சொல்லியிருக்கிறார் அரவிந்த் சுவாமிநாதன். 1947-க்குப் பிறகு எழுதவந்த பெண்களுக்குக் கிடைத்த கவனம்கூட அதற்கு முந்தைய காலத்தில் எழுதியவர்களுக்கு இல்லை. தமிழ்ச் சிறுகதை உலகில் இவ்வளவு பெண்கள் இயங்கினார்களா என்கிற மலைப்பையும் பெருமிதத்தையும் இந்நூல் ஏற்படுத்துகிறது.
இருசி
l ஸர்மிளா ஸெய்யித், கருப்புப் பிரதிகள், 9444272500
ஸர்மிளா ஸெய்யித்தின் சிறுகதைகள், இயல்பென்றும் விதியென்றும் கொள்ளப்பட்டவற்றை மறுபரிசீலனைக்கு உள்ளாக்குகின்றன. காலங்காலமாக மலிந்திருக்கும் சமூக அவலங்களை, உறவுச் சிக்கல்களை, மனச் சிடுக்குகளை, பாகுபாடுகளை இக்கதைகள் கேள்விக்குட்படுத்துகின்றன. சிலவற்றைப் பெண்ணால்தான் உணரவும் உணர்த்தவும் முடியும். ‘பெய்யெனப் பெய்யும் மழை’ சிறுகதையில் வருகிற றிஸ்மியா நமக்கு அறிமுகமானவள்தான். ஆனால், அவளது உள்ளத் தவிப்பு, அவளுடைய கணவன் அஜ்மலைப் போலவே நமக்கும் புதிது. அல்லது புதிதுபோல பாவனை செய்துகொள்வோம். அந்தப் பாவனை மீதும் அதை அறிந்துகொள்ள முயலாத நம் உதாசீனத்தின் மீதும் றிஸ்மியா எறிகிற கல், சலனத்தை ஏற்படுத்துகிறது. பெண்கள் அனைவருக்கும் ஸர்மிளா சமர்ப்பித்திருக்கும் இந்தச் சிறுகதைகள் பெண் களுக்கானவை மட்டுமல்ல.
ரொமிலா தாப்பர்-ஓர் எளிய அறிமுகம்
l மருதன், கிழக்கு பதிப்பகம், தொடர்புக்கு: 044-42009603
வரலாற்றில் பெண்களுக்கு ஏன் இடமில்லை என்கிற தேடலின் முடிவு, அது பெரும்பாலும் ஆண்களால் எழுதப்பட்டதாக இருக்கும் என்கிற கருத்துக்கு நம்மை இட்டுச் செல்லலாம். வரலாற்றை ஒற்றைத்தன்மையுடன் அணுகச் சாத்தியமற்ற நிலையில் பெண் வரலாற்று ஆய்வாளர்களின் பங்களிப்பு முக்கியமானது. பண்டைய இந்தியா குறித்த வரலாற்று ஆய்வாளர்களில் ரொமிலா தாப்பர் தவிர்க்க முடியாதவர். ரொமிலா தாப்பரின் வாழ்க்கை, அவர் வரலாற்றுத் துறைக்குள் நுழைந்தது, ரொமிலாவின் மீது ஆதிக்கம் செலுத்திய ஆளுமைகள், வரலாற்றை எப்படி வாசிப்பது என்று பலவற்றையும் இந்நூலில் விவரித்துள்ளார் மருதன். பண்டைய வரலாற்றைப் பொதுமக்கள் அறிந்து கொள்வதும் அதன் அரசியலை உணர்வதும் எந்த அளவுக்கு முக்கியம் என்பதை இந்நூல் உணர்த்துகிறது. நல்ல வரலாறு எழுதப்பட வேண்டுமென்றால் வகுப்பறையை மாற்றியமைப்பதிலிருந்து அதைத் தொடங்க வேண்டும் என்கிறார் ரொமிலா தாப்பர். அது காலத்தின் தேவையும்கூட.
நிழலிரவு
l தமயந்தி, யாவரும் பப்ளிஷர்ஸ்,
தொடர்புக்கு: 9042461472
வாழ்க்கையை எழுதுவதும் வரலாற்றை எழுதுவதைப் போலத்தான். தமயந்தியின் நாவலையும் அப்படிச் சொல்லலாம். நமக்குச் சில ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதர்களின் வாழ்க்கையை எழுதுவது என்பது நம் சமூகத்தை, அதன் நல்லது கெட்டதுகளை, மனிதர்களின் மேன்மை கீழ்மைகளை, சமூகத்தில் புரையோடிப்போயிருக்கும் பிற்போக்குத்தனங்களை வாசகர்களுக்குக் கடத்துவது. தமயந்தி அதைக் கச்சிதமாகச் செய்திருக்கிறார். சிறிய நாவலில் பெரும் வாழ்க்கைப் பரப்பைக் கண்முன் விரியவிட்டிருக்கிறார்.