

விழுப்புரம் மாட்டம் செஞ்சியைச் சேர்ந்தவர் திருநங்கை மர்லிமா முரளிதரன். இவர் இந்தப் பகுதியில் பிரபலமான கட்டிடப் பொறியாளர். கட்டிடப் பொறியாளராக மட்டுமின்றி, தனது சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் பொதுச் சமூகத்தில் இருப்பவர்களுக்கும் யாரிடமும் உதவி கேட்காமல் தனது சொந்த செலவில் முடிந்த அளவில் உதவிவருபவர். இவர் சான்றிதழ் பெற்ற கட்டிடப் பொறியாளராக இருப்பதால் கட்டிடங்கள் பலவற்றுக்கு வடிவமைப்பு உத்தியையும் இவர் அளித்துவருகிறார். திருநங்கை சமூகத்தில் இருப்பவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்குப் பலவிதங்களிலும் தன்னுடைய பங்களிப்பைச் செலுத்திவரும் மர்லிமா முரளிதரனுக்குத் தமிழக அரசின் இந்த ஆண்டுக்கான சிறந்த திருநங்கைச் செயற்பாட்டாளர் விருது தமிழக முதல்வரால் அண்மையில் அளிக்கப்பட்டது. அவரிடம் பேசியதிலிருந்து…
நீங்கள் படித்த கல்லூரி, உங்களுடன் படித்து இப்போதும் நட்பில் இருக்கும் மாணவர்கள், ஆசிரியர்களிடமிருந்து உங்களுக்குக் கிடைத்த நெகிழ்ச்சியான சம்பவம் பற்றியெல்லாம் சொல்ல முடியுமா?
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கல்லூரியில் தான் கட்டிடப் பொறியியல் படித்தேன். நாங்கள் நான்கு பேர் நல்ல நண்பர்கள். எங்கள் நட்பு இன்றைக்கும் பசுமையாக இருக்கிறது. பத்தாவது படித்தபோது என்னுடைய கணக்கு வாத்தியார் மிகவும் அன் பாகவும் பண்பாகவும் பாடங்களை நடத்தினார். என்னுடைய பெண் தன்மை அவருக்குத் தெரிந்திருந்தாலும் அது குறித்த கிண்டலாக எதையும் அவர் பேசியதில்லை. மிகவும் மதிப்புக்குரிய மறக்க முடியாத ஆசிரியர் அவர். இது ஒன்றைத் தவிர நெகிழ்ச்சியான சம்பவங்கள் எதுவும் என் பள்ளி வாழ்க்கையில் இல்லை. அப்போது எனக்கிருந்த தாழ்வு மனப்பான்மையை வெல்வதற்கே போராட வேண்டியிருந்தது.
என்னுடைய முழுநேரப் பணியே கட்டிடங் களைக் கட்டிக் கொடுப்பதுதான். ஏறக்குறைய 150 வீடுகளை இதுவரை கட்டிக் கொடுத்திருப்பேன். என்னிடம் கட்டிடப் பொறியியல் பட்டயக் கல்வி (Diploma) முடித்த மூன்று பேர் உதவியாளர்களாக இருக்கிறார்கள். ஏறக்குறைய 150 பேர் வரை பணிசெய்கிறார்கள்.
தமிழக அரசின் இந்த விருதைப் பெறுவதற்கான தகுதிகள் என்று வரையறுத்திருக்கிறார்களா?
தமிழக அரசு இந்த விருதை வழங்குவதற்குச் சில தகுதிகளை நிர்ணயித்துள்ளது. அரசு உதவி இல்லாமல் சுயமாகப் படித்திருக்க வேண்டும். என்னுடைய பெற்றோரின் உதவியால்தான் படித்தேன். படித்து முடித்ததும் சுய தொழிலோ நல்ல பணியிலோ இருக்க வேண்டும். அரசின் எந்த உதவியும் பெற்றிருக்கக் கூடாது. குறைந்தபட்சம் ஐந்து திருநங்கைகளின் வாழ்க்கையை உயர்த்துவதற்கு, அவர்களுக்கான வாழ்வாதாரத்துக்கு உதவும் பணியைச் செய்திருக்க வேண்டும். திருநங்கை நல வாரியத்தில் உறுப்பினராக இருக்கக் கூடாது. இந்தத் தகுதிகள் அனைத்தும் எனக்கு இருந்தன. என்னைப் பற்றி விசாரித்து அறிந்துதான் இந்த விருதுக்காக என்னைத் தேர்ந்தெடுத்திருக்கின்றனர்.
உங்களிடம் உதவி கேட்டு வரும் திருநங்கை களிடம் நீங்கள் எதிர்பார்ப்பது என்ன?
கைநீட்டி யாசகம் கேட்பது, பாலியல் தொழிலில் ஈடுபடுவது இந்த இரண்டையும் தவிர, வேறு வகையில் வருமானத்தை ஈட்ட வேண்டும் என்கிற நினைப்போடு இருக்க வேண்டும். இதுதான் என்னுடைய எதிர்பார்ப்பு. திருநங்கைகள் சிலருக்குக் கலை, ஆடு, மாடு, கோழி வளர்ப்பு, தையல், கணினி போன்று அவர்கள் விரும்பும் பயிற்சிகளைப் பெறவைத்து அவர்களுக்கான வாழ்வா தாரத்தைப் பெருக்குவதற்கு உதவிவருகிறேன். என்னுடைய குழுவில் திருநங்கைகள் 60 பேர் இருக்கின்றனர். அவர்கள் தங்கள் சொந்தக் காலில் நிற்கும் வரை அவர்களுக்கான உணவு, உடை, இருப்பிடம் போன்ற அத்தியாவசியத் தேவைகளை அவர்களுக்குக் கொடுத்துவருகிறேன். இந்தப் பணிகளை எல்லாமே கட்டிடப் பொறியாளராக நான் செய்யும் பணிகளின் மூலம் கிடைக்கும் வருவாயில் இருந்தே செய்துவருகிறேன். இது தவிர என்னுடைய அரவணைப்பில் வாழும் திருநங்கைகளில் பலரும் கிராமியக் கலைகளான ஒயிலாட்டம், மயிலாட்டம் போன்ற கலைகளில் வல்லவர்கள். எனவே, அவர்களைக் கொண்டு கலைக் குழுக்களை அமைத்து நிகழ்ச்சிகளில் அவர்களைப் பங் கெடுக்க வைத்து, அதன் மூலம் அவர்களின் வாழ்வாதாரத்துக்கு உதவுகிறேன். என்னுடைய குழுவில் இருக்கும் பட்டயக் கல்வி (Diploma) முடித்த ஒரு திருநங்கை தனியார் நிறுவனம் ஒன்றில் கட்டிடப் பொறியாளராகப் பணியில் இருக்கி றார். இன்னொரு திருநங்கை ஒரு தன்னார்வ நிறுவனத் தில் முக்கியப் பொறுப்பில் இருக்கிறார். ஆன்மிகத்தில் அதிகம் ஈடுபாடுள்ள திருநங்கை ஒருவர் திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் நந்திக்கு அன்றாடம் பூஜைகள் செய்துவருகிறார். இன்னொரு திருநங்கை சென்னையில் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் பணியில் இருக்கிறார். இப்படி ஒவ்வொருவரும் அவரவர் விரும்பும் பாதையில் பயணிப்பதற்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்துவருகிறேன்.
திருநங்கைகளின் தனித்தன்மையாக நீங்கள் நினைப்பது?
அவர்களிடம் குடிகொண்டிருக்கும் தெய்வாம்சம்.
திருநங்கையருக்குக் கல்வி, வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு கிடைப்பதற்கு ஆதாரமான விஷயமாக நீங்கள் எதைக் கருதுகிறீர்கள்?
ஒட்டுமொத்த திருநங்கை சமூகத்தையும் தனிநபரால் மாற்றிவிட முடியாது. ஒரு திருநங்கை குடும்பத்தில் தோன்றும்போது அவர்களின் உணர்வுக்கு மதிப்புக் கொடுத்து அவர்களின் மீது அன்பு பாராட்டினாலே, அந்தக் குடும்பத்திலிருந்து அந்தக் குழந்தை வெளியேறாத சூழல் உருவாகும். அன்பைத் தேடித்தானே வீட்டிலிருந்து வெளியேறு கிறார்கள். அன்பும் ஆதரவும் அரவணைப்பும் வீட்டிலேயே கிடைத்தால் ஏன் வெளியேறப் போகிறார்கள்? கடும்சொற்களால் திட்டி அவர்களை வீட்டைவிட்டு வெளியேற்றும் போதுதான் கைநீட்டிப் பிச்சை எடுக்கும் நிலைக்கும் பாலியல் தொழில் செய்வதற்கும் தள்ளப்படுகிறார்கள். திருநங்கைகளைக் குடும்பம் ஏற்றுக்கொண்டால் சமூகமும் ஏற்றுக் கொள்ளும் நிலை வரும். என்னுடைய வீட்டில் என்னை யாரும் கேலி செய்ததில்லை. ஆனால், அக்கம்பக்கத்து வீடுகளில் கிண்டல், கேலி செய்வார்கள். அதனால், எனக்கு வருத்தமாக இருக்கும். வாகனத்தின் நம்பர் பிளேட்டில் 9 என்கிற எண் இருந்தால்கூட, நம்மைத்தான் குறிக்கிறதோ என்று பதற்றப்பட்ட காலம் இருந்தது. என்னைப் போன்ற திருநங்கைகள் பலரையும் சந்தித்தபோதுதான் அந்தத் தடைகளிலிருந்து என்னால் மீண்டுவர முடிந்தது. குடும்பத்தின் திருநர் குழந்தை பிறப்பதற்கு யாரையும் குறை சொல்ல முடியாது. அவர்களும் சமூகத்தின் ஓர் அங்கமே என்னும் புரிதலைத்தான் நாம் வளர்த்தெடுக்க வேண்டும். இதைத்தான் இட ஒதுக்கீடு கிடைப்பதற்கான ஆதாரமான விஷயமாகப் பார்க்கிறேன்.
திருநங்கைகளைப் பற்றிய செய்திகளை வெளியிடுவதில் பத்திரிகை, ஊடகங்களின் பங்களிப்பு எந்த அளவுக்கு இருக்கிறது?
ஊடகங்களின் பங்களிப்பை நான் குறைகூற மாட்டேன். இதுவரை ஊடகங்களில் என்னை வெளிப்படுத்திக் கொண்டதில்லை. இப்போது பல ஊடகங்களில் இருந்து என்னைத் தொடர்புகொண்டு பேசுகிறார்கள். திருநங்கை சமூகத்துக்கு நான் செய்துவரும் பணிகளுக்கு கிடைத்த அங்கீகாரமாகவே இந்த விருதைப் பார்க்கிறேன். இன்னும் உத்வேகத்துடன் பணிபுரிவதற்கு இந்த விருது எனக்கு உதவும். ‘பிச்சை எடுக்காமல், பாலியல் தொழில் செய்யாமல் கவுரவமாக இந்தச் சமூகத்தில் நான் பிழைப்பதற்கு ஒரு வழியைக் காட்டுங்கள்’ என்னும் கோரிக்கையை என்னிடம் வைக்கும் திருநங்கைகளுக்குக் கடன்பட்டாவது உதவுவதற்கு நான் தயாராக இருக்கிறேன். விருது வழங்கிய தமிழக முதல்வருக்கும் விருதுக்காகப் பரிந்துரைத்த விழுப்புரம் மாவட்ட சமூக நலத்துறைக்கும் திருநங்கை நல வாரிய உறுப்பினர்கள் அனைவருக்கும் என்னுடைய மனப்பூர்வமான நன்றி.