

தின்பண்டங்கள்… குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை மன மகிழ்ச்சியை அள்ளிக்கொடுக்கும் வகையறாக்கள். நம் பகுதியில் கிடைக்கும் பண்டங்களை ருசிக்கும்போது கிடைக்கும் அதே குதூகலம், வெளியூரிலிருந்து வருகை தரும் பண்டங்களை ருசிக்கும்போதும் கிடைக்கும். அவ்வகையான தின்பண்டங்கள் பாரம்பரிய முறைப்படி தயாரிக்கப்பட்டிருந்தால் இரட்டிப்பு மகிழ்ச்சி! அவ்வகையில் பல கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் ஒரு மலைப்பகுதியின் பாரம்பரிய தின்பண்டம் தான் சிக்கி!
மகாராஷ்டிரா மாநிலத்தின் அழகான மலைப்பகுதிகளில் ஒன்று லோனாவாலா! நம்மூர் ஊட்டி, கொடைக்கானல் போல அவர்களுக்கு லோனாவாலா! ரம்மியமான லோனாவாலா மலைப்பகுதியின் மையத்தை அடைந்ததும், புன்னகையோடு வரவேற்றன ‘சிக்கி' (Chikki) இனிப்பு ரகக் கடைகள்! எண்ணிவிட முடியாத அளவிற்கு இந்த இனிப்புக் கடைகள் அப்பகுதியை ஆக்கிரமித்து இருந்தன! எங்கு நோக்கினும் சிக்கி தான். ‘Chikki… Fudje…' எனப் பதாகைகள் தாங்கிய கடைகள் நிச்சயம் சுற்றுலா வருவோரைச் சுண்டி இழுக்கும்!
இங்கே கடலைமிட்டாய், அங்கே சிக்கி
நம்மூரில் கடலைமிட்டாய் ரக இனிப்புகளை அங்கே 'சிக்கி' என்று அழைக்கிறார்கள்… ஆனால், நிறையவே வித்தியாசங்களை உணர முடிகிறது. கடலைமிட்டாய், எள்ளு மிட்டாய், தேங்காய் பர்ஃபி போன்ற இனிப்பு ரகங்களே நமது பகுதியில் அதிகம் பரிச்சயமாக இருக்கின்றன! ஆனால் அங்கோ எக்கச்சக்க ரகங்கள்! 'ரகங்களுக்கா இங்கே பஞ்சம்' என்று சொல்லும் வகையில் கடலை, எள், பாதாம், பிஸ்தா, முந்திரி, உலர் பழங்கள் போன்றவற்றை வைத்து வெல்லப்பாகு தொடுத்து சிக்கி ரகங்களைத் தயாரிக்கிறார்கள்!
நம்ம ஊட்டி வறுக்கி, கோவில்பட்டி கடலைமிட்டாய், மணப்பாறை முறுக்கு போல, லோலானாவாலவிற்கு சிக்கி தனித்த அடையாளம்! சிக்கியோடு சேர்த்து, 'Fudje' எனும் ரகமும் அங்கே பிரபலம்! Fudje என்பது சாக்லேட் போல ஒரு இனிப்பு என வைத்துக்கொள்ளலாம். ஃபுட்ஜ் எனும் அந்த சாக்லேட் ரக இனிப்பிலும் நிறைய வித்தியாசமான சுவையும் வடிவமும் பிரதிபலித்தன! சாக்லேட் பிரியர்கள் ஃபுட்ஜ் மீது நிச்சயம் படையெடுப்பார்கள்.
நம்ம தமிழ்நாட்டிலும் இந்த இனிப்பு ரகங்களை எளிதாக முயற்சித்துப் பார்க்கலாம். அனைத்து ரகங்களுக்கும் அடிப்படை வெல்லப்பாகு தான்! வெவ்வேறு அடிப்படைப் பொருட்களில் வெல்லப்பாகு வினைபுரிந்து சிக்கியாக உருவாகும் போது, வெவ்வேறு சுவைகளைக் கொடுக்கின்றன! ஒன்று விடாமல் சுவைத்துவிட்டுத் தான் ஊர் திரும்பினேன்.
வரவேற்கும் சிக்கி
கடலை, உடைகடலை, தேங்காய், எள், ஸ்ட்ராபெர்ரி, சாக்லேட், மாம்பழம், தேன் கடலை, கருப்பு எள், முந்திரி, பாதாம், பிஸ்தா, மேலும் சில உலர் பழங்கள் கொண்டு தயாரிக்கப்பட்ட சிக்கி ரகங்கள் அனைத்து கடைகளிலும் முன்னின்று நம்மை வரவேற்றுச் சிரிக்கின்றன! அனைத்து சிக்கி ரகங்களும் சேர்ந்த 'மிக்ஸ் சிக்கி' இனிப்புகளும் அதிகமாக அங்கு விற்பனையாகின்றன! ஒவ்வொரு சிக்கியையும் கொஞ்சம் கொஞ்சம் சுவைத்தால் போதும், ஒரு வேளை பசி இனிப்பாக அடங்கிவிடும்! ஆரோக்கியமிக்க கொட்டை ரகங்களையும், உலர் பழங்களையும் சாப்பிட அடம்பிடிக்கும் சிறுவர், சிறுமிகளிடம் சிக்கி ரகங்களை அறிமுகப்படுத்தலாம். ஆசையோடு சேர்த்து ஊட்டத்தையும் இனிப்பு குழைத்து எடுத்துக்கொள்வார்கள் அவர்கள்!
ஆரோக்கிய நொறுவை
ஆரோக்கிய நொறுவை (Healthy Snack) பட்டியலில் 'சிக்கி’ ரக இனிப்புகளுக்குத் தாராளமாக இடம் கொடுக்கலாம். வெல்லப்பாகு தான் அடிப்படை என்றாலும், ஒவ்வொரு பொருளின் சுவை வெல்லப்பாகோடு ஊடல் கொள்ளும் போது, தனித்த சுவையில் மிளிர்கின்றன சிக்கி ரகங்கள்! மருத்துவ ரீதியாக சிக்கியைப் பற்றிப் பேசினால் வைட்டமின்கள் மற்றும் மினரல்களின் கொள்கலன்களாக சிக்கி ரகங்கள் விளங்கும் என்பது உறுதி! அளவோடு சாப்பிடும் போது உலர்விதைகளின் அனைத்து ஊட்டங்களும் நமக்குள் தஞ்சமடையும்.
லோனாவாலாவில் மட்டுமல்லாமல் அருகில் இருக்கும் தேசிய நெடுஞ்சாலையின் சில இடங்களிலும் சிக்கி ரகங்கள் கிடைக்கின்றன! இருப்பினும் லோனாவாலாவிற்குள் சென்று, ஆசுவாசமாக இயற்கையை ரசித்துக்கொண்டு சில சிக்கி ரகங்களைக் கடித்துச் சுவைப்பதே தனி அனுபவம்! லோனாவாலாவிற்குள் சென்று சிக்கி இனிப்புகளை வாங்கினால் விலையும் மிகக் குறைவே! கிலோ 300 ரூபாயில் தொடங்கி 1400 ரூபாய் வரை ரகங்களுக்கு ஏற்ப சிக்கியின் விலை நீள்கிறது! உலர்பழங்கள் கொண்டு தயாரிக்கப்படும் சிக்கி ரகத்துக்கே அதிக விலை! லோனாவாலா சென்றால் பல சிக்கி ரகங்களை வாங்க மறக்காதீர்கள்!
கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர்
தொடர்புக்கு: drvikramkumar86@gmail.com