குறிப்புகள் பலவிதம்: சுவையைத் தூண்டும் எலுமிச்சை!

குறிப்புகள் பலவிதம்: சுவையைத் தூண்டும் எலுமிச்சை!
Updated on
1 min read

# எலுமிச்சை சாற்றுடன் சிறிதளவு உப்பு, தண்ணீர் சேர்த்துத் தொண்டையில் படும்படி கொப்புளித்துவர தொண்டைப் புண், வாய்ப் புண் குணமாகும். வாய் துர்நாற்றம் மறையும்.

# எலுமிச்சைச் சாற்றுடன் வெந்நீர் கலந்து குடித்தால் நெஞ்சு எரிச்சல், ஏப்பம், வயிறு உப்புசம் குறையும். ஜீரண சக்தியும் அதிகரிக்கும்.

# எலுமிச்சைச் சாற்றை முகத்தில் தடவிவர, முகத்திலுள்ள கரும்புள்ளிகள், சுருக்கங்கள் மறையும். பால் ஏட்டுடன் எலுமிச்சைச் சாறு கலந்து முகத்தில் தடவினால் முகம் பளிச்சிடும்.

# இரவு நேரத்தில் வெதுவெதுப்பான நீரில், எலுமிச்சைச் சாற்றுடன் தேன் கலந்து குடித்தால் தூக்கம் நன்றாக வரும். உடல் மட்டுமின்றி மனமும் அமைதி அடையும்.

# சில துளிகள் எலுமிச்சைச் சாற்றை நாவில் தடவினால் சுவை அரும்புகள் தூண்டப்பட்டு, சுவை தெரியும்.

# தலையில் சிறிதளவு எலுமிச்சைச் சாறு தடவி சிறிது நேரம் ஊறியபின் குளித்தால் பொடுகுத் தொல்லை நீங்கும்.

# நீர்ச் சுருக்கு, பித்தம், வெட்டைச் சூடு, மலச்சிக்கல் ஆகியவற்றுக்கு எலுமிச்சம் பழச் சாற்றுடன் சர்க்கரை அல்லது உப்பு சேர்த்துக் குடித்துவந்தால், தகுந்த நிவாரணம் கிடைக்கும்.

# எலுமிச்சம் பழச் சாற்றுடன் தேன் கலந்து குடித்துவந்தால் வறட்டு இருமல் தீரும்.

# சிலருக்குப் பாதத்தில் எரிச்சல் ஏற்படும். மருதாணியை அரைத்து, அதை எலுமிச்சைச் சாற்றுடன் கலந்து பாதத்தில் தடவிவந்தால் எரிச்சல் குணமாகும்.

# எலுமிச்சை இலையை அரைத்துச் சாறு பிழிந்து, அதனுடன் சிறிது உப்பு சேர்த்து தண்ணீரில் கலந்து குடித்தால் வாந்தி நிற்கும்.

# சீரகத்தை எலுமிச்சைச் சாற்றில் இரண்டு நாள் ஊறவைத்து, பின் அந்தச் சாற்றுடன் வெயிலில் காயவையுங்கள். நன்றாகக் காய்ந்ததும் மீண்டும் எலுமிச்சைச் சாற்றில் ஓர் இரவு ஊறவைத்து, வெயிலில் காயவையுங்கள். நன்றாக உலர்ந்ததும் அதை எடுத்துப் பொடியாக்கி ஒரு டீஸ்பூன் அளவு எடுத்து தேன் அல்லது தண்ணீரில் கலந்து மூன்று வேளை சாப்பிட்டுவர அஜீரணம், பித்தம் தணியும். ரத்த அழுத்தம் சீராகும்.

- தேவி, சென்னை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in