

வெயில் இல்லாத கோடைகூட சாத்தியப்படலாம். ஆனால் சுற்றுலா இல்லாமல் கோடை விடுமுறைகள் நிறைவடைவதில்லை. சிலர் திட்டமிட்டு, வருடம் முழுக்கப் பணம் சேர்த்து கோடை வாசஸ்தலங்களுக்குச் சென்று வருவார்கள். நேரம் இல்லையென்றால் சிலர் கூப்பிடு தூரத்தில் உள்ள இடங்களுக்குச் செல்வார்கள். எதுவுமே சரிப்பட்டு வரவில்லை என்றால் உறவினர் வீடுகளுக்குச் சென்று, அங்கிருக்கும் ஏதாவதொரு புராதனச் சிறப்பு வாய்ந்த கோயிலுக்கோ கடற்கரைக்கோ சென்று மகிழ்ச்சியோடு திரும்புவார்கள். தன் நீண்ட நாள் கனவான ஐரோப்பியப் பயணம் குறித்து நம்முடன் பகிர்ந்துகொள்கிறார் சாந்தகுமாரி சிவகடாட்சம்.
“ஐரோப்பிய நாடுகள் பலவற்றை வலம் வந்திருந்தாலும் என் பட்டியலில் குரேஷியா மட்டும் விட்டுப்போயிருந்தது. ஆனால் விரைவிலேயே என் கனவு நிறைவேறியது. அட்ரியாடிக் கடலின் கிழக்குக் கடற்கரையோரத்தை ஆக்கிரமித்துக்கொண்டிருக்கும் அந்த நாட்டுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. குரேஷியாவின் பல இடங்கள் உலக பாதுகாப்பு வளையத்துக்குள் இருக்கின்றன. அவற்றில் முதல் இடத்தைப் பிடிப்பவை பிளிட்வைஸ் ஏரிகள் (plitvice lakes). பிளிட்வைஸ் தேசியப் பூங்காவின் நடுவே பதினாறு ஏரிகள் ஒன்றுடன் ஒன்று கைகோத்து பிறகு எண்ணற்ற அருவிகளாக, கொப்பளிக்கும் ஊற்றுகளாக ஓடிவரும் அழகைக் காணக் கண் கோடி வேண்டும்.
பிளிட்வைஸ் ஏரிகளின் எல்லையில் இருக்கும் ராஸ்டோக் கிராமம், காணக் கிடைக்காத அரிய காட்சிகளைத் தன்னகத்தே கொண்டிருக்கிறது. பல சிறிய, பெரிய நீர்வீழ்ச்சிகள், அவற்றின் மேல் வீடுகள், உணவகங்கள், சலசலவென சத்தமிட்டு ஓடும் பளிங்கு நீரூற்றுகள் அனைத்தையும் கண்டு உள்ளம் பூரித்தேன்.
பத்து மணியைத் தாண்டினால் பிளிட்வைஸ் ஏரிகளைப் பார்க்கக் கூட்டம் குவிந்துவிடும் என்பதால் அதிகாலையிலேயே கிளம்பிவிட்டோம். நாங்கள் சென்றது ஜூலை மாதம் என்றாலும் அணிந்திருந்த ஸ்வெட்டரையும் மீறி குளிர் எலும்புகளுக்குள் பாய்ந்தது. உச்சியிலிருந்து பார்த்தால் பிளிட்வைஸ் ஏரிகளின் எழில்மிகு தோற்றத்தைப் பார்க்கலாம் என்றார் கைடு. அதனால் வளைந்து வளைந்து செல்லும் பாதையில் ஏறி, உச்சிக்கு வந்தோம். தொலைவில் நாலாபுறமும் மலைகள் சூழ, செங்குத்தான பள்ளத்தாக்கில் மரகதப் பச்சை நிறத்தில் நாங்கள் கண்ட காட்சி மலைக்கவைத்தது. ஏரிகள், பாறைகளே அரணாக அமைய, தண்ணீர் பல இடங்களில் அருவியாக ஓட, சில இடங்களில் குளங்கள் போல தேங்கியும் இருக்க, அந்தக் காட்சிகள் எங்கள் உள்ளத்தைக் கொள்ளை கொண்டன.
அந்தக் காட்சிகளை மனதில் தேக்கியபடியே கீழே இறங்கி வந்தோம். அங்கே இருக்கும் பதினாறு ஏரிகளைப் பார்க்கப் புறப்பட்டோம். மேல் ஏரிகள், கீழ் ஏரிகள் இரண்டையும் பாறைகள் நிறைந்த நிலப்பரப்பு பிரிப்பதால், மேல் ஏரிகள் இருக்கும் இடத்தைப் பார்க்கப் பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மேல் ஏரிகளின் முழு அழகையும் ரசிக்க மரப்பலகையால் ஆன பாதைகளை அமைத்திருக்கிறார்கள். குட்டைகளாகத் தேங்கி, ஏரிகளாக விரிந்து, ஊற்றுகளாகப் பொங்கி, அருவிகளாக விஸ்வரூபம் எடுக்கும் அந்தக் காட்சிகளை இன்றைக்கெல்லாம் பார்த்துக்கொண்டே இருக்கலாம். கர்னா, பிஜ்லா, ரஜ்சியா என்ற மூன்று ஆறுகளும், பல கிளை ஆறுகளும், ஊற்றுகளும் இந்த உலக அதிசயத்தை உருவாக்கியிருக்கின்றன.”