

பாலியல் வல்லுறவு வழக்கில் கைது செய்யப்பட்ட ஒருவர் பிணையில் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவரது ஊரைச் சேர்ந்தவர்கள் ‘அண்ணன் திரும்பி வந்துவிட்டார்’ என்று பொருள்படும்படி பதாகை வைத்ததற்கு உச்ச நீதிமன்றம் தன் அதிருப்தியைத் தெரிவித்தது.
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சுபங் கோன்டியா, ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்தவர். அவர் மீது பெண் ஒருவர் பாலியல் வல்லுறவு புகார் அளித்ததையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். விசாரணையின்போது மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் அவரைப் பிணையில் விடுவித்தது. அதைத் தள்ளுபடி செய்யுமாறு பாதிக்கப்பட்ட பெண் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா, நீதிபதிகள் கிருஷ்ண முராரி, ஹிமா தாஸ் அடங்கிய மூவர் அமர்வுக்கு முன் ஏப்ரல் 11 அன்று விசாரணைக்கு வந்தது. குற்றம்சாட்டப்பட்டவர் பிணையில் விடுவிக்கப்பட்டதைக் கொண்டாடும்விதமாக, ‘அண்ணன் திரும்பி வந்துவிட்டார்’ என்கிற பதாகை வைக்கப்பட்டதை மனுதாரர் மூலம் அறிந்த மூவர் அமர்வு அது குறித்துக் கேள்வி எழுப்பியது.
தேர்தலுக்காக அந்தப் பதாகை வைக்கப்பட்டது என்று எதிர்தரப்பில் சொல்லப்பட்டது. பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரை வரவேற்கும்விதமாக வைக்கப்பட்ட பதாகை குறித்த தங்கள் அதிருப்தியை உச்ச நீதிமன்றம் பதிவுசெய்தது. “உங்கள் அண்ணனை இந்த வாரம் பத்திரமாக இருக்கச் சொல்லுங்கள்” என்று சொன்ன தலைமை நீதிபதி, விசாரணையை அடுத்த வாரத்துக்குத் தள்ளிவைத்தார்.
முதல் கறுப்பினப் பெண் நீதிபதி
அமெரிக்க உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாகக் கறுப்பினத்தைச் சேர்ந்த கேதன்ஜி பிரௌன் ஜாக்சன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அமெரிக்க வரலாற்றில் இந்தப் பதவியை வகிக்கும் முதல் கறுப்பினப் பெண் இவர்.
உச்ச நீதிமன்றத்தில் பன்முகத்தன்மையை நிறுவுவதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எடுத்த முயற்சிகளுக்குக் கிடைத்த வெற்றியாகவும் அமெரிக்கர்கள் இதைக் கருதுகிறார்கள். உச்ச நீதிமன்றத்தில் இருக்கும் ஒன்பது நீதிபதிகளில் நால்வர் பெண்கள் என்பதும் அமெரிக்க வரலாற்றில் இதுவே முதல் முறை. வாஷிங்டன்னில் பிறந்த ஜாக்சனுக்கு சட்டத் துறை மீது ஆர்வம் வர அவருடைய தந்தையே காரணம். ஜாக்சன் தொடக்கக் கல்வி பயின்றபோது அவருடைய அப்பா சட்டக் கல்லூரியில் சேர்ந்தார். ஜாக்சன் வீட்டுப்பாடம் எழுதும்போது அவருடைய அப்பா வழக்குகள், வாதங்கள் குறித்து குறிப்புகள் எழுதிக்கொண்டிருப்பார். அதுதான் சட்டத் துறை மீது தனக்கு ஆர்வம் ஏற்படக் காரணம் என்று ஜான்சன் சொல்லியிருக்கிறார். பள்ளி நாட்களில் மாணவர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர், பல்வேறு தடைகளை வென்று ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். மாவட்ட நீதிமன்றத்தில் பணியாற்றியபோது அமெரிக்காவின் முன்னாள் பிரதமர் ட்ரம்ப் நிர்வாகத்தின் செயல்பாடுகளைக் கேள்விக்குள்ளாக்கினார். ‘அதிபர்கள் அரசர் அல்ல’ என்று இவர் எழுதிய குறிப்பு குறிப்பிடத்தக்கது.
பிரசவ கால மரணம்
டெல்லியில் உள்ள நான்கு முக்கிய அரசு மருத்துவமனைகளில் ஒரு மாதத்துக்கு 16 பெண்கள் பிரசவத்துக்குப் பிறகு இறப்பதாகத் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தெரியவந்துள்ளது.
2015 ஜனவரி முதல் 2021 செப்டம்பர் வரை எய்ம்ஸ் உள்ளிட்ட டெல்லியின் முக்கிய நான்கு அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை, இறந்த தாய்மார்களின் எண்ணிக்கை குறித்துத் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தகவல் பெறப்பட்டது. இந்தியாவில் மருத்துவக் கட்டமைப்புகள் வளர்ச்சிபெற்றுள்ள நிலையில் பிரசவத்தின்போது தாய்ச்-சேய் இறப்புவிகிதம் பெருவாரியாகக் குறைக்கப்பட்டுவிட்டது. இந்நிலையில் நாட்டின் தலைநகரான டெல்லியில் உள்ள மருத்துவமனைகளில் நிகழும் பிரசவ கால மரணங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய ரத்தபோக்கு, தொற்று, வலிப்பு, மாரடைப்பு போன்றவை இதற்குக் காரணங்களாகச் சொல்லப்படுகின்றன. அதேபோல் சுவாசக் கோளாறு, அனீமியா, ரத்தத்தில் கிருமித் தொற்று, கருப்பை அழற்சி, கோவிட்-19 தொற்று போன்றவையும் இந்த மரணங்களுக்குக் காரணம். பிரசவ கால மரணங்கள் பத்துப் புள்ளிகள் சரிந்துள்ளதாக இந்தியப் பதிவுத் துறை சார்பில் அண்மையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொகுப்பு: ப்ரதிமா