

பெண்களை உருவக் கேலி செய்துவிட்டு அதை நகைச்சுவை என்று சிலர் சொல்லித் திரிவது குறித்து ஏப்ரல் 3 அன்று வெளியான ‘பெண் இன்று’வில் எழுதியிருந்தோம். அது குறித்து வாசகர்களின் கருத்துகளையும் கேட்டிருந்தோம். தேர்ந்தெடுக்கப்பட்ட கடிதங்களில் ஒரு பகுதி கடந்த வாரம் வெளியானது. அதன் தொடர்ச்சியாக மேலும் சில கடிதங்கள் உங்கள் பார்வைக்கு:
பொதுவெளியில் ஒரு சாரார் தங்கள் மனைவியைக் கேலி பேசுவதை வைத்து அனைத்துக் கணவன்களும் அப்படித்தான் என்கிற எண்ணம் தவறானது. சில பெண்கள், கணவன் தன்னை அப்படி அழைப்பதை விரும்புகிறார்கள் எனும்போது அங்கே அந்தக் கணவன் பகடி பேசுவதாகச் சொல்வதா மனைவியின் விருப்பத்தை நிறைவேற்றுகிறார் என்று எடுத்துக்கொள்வதா? பெரும்பாலான கணவன்மார் வில் ஸ்மித்தாகத்தான் இருக்க விருப்பப்படுவார்களே தவிர பகடி செய்யும் மனிதனாக இருக்க விரும்ப மாட்டார்கள்.
- வீ.சக்திவேல், தே.கல்லுப்பட்டி.
ஆண்டாண்டுக் காலமாகக் கடைபிடிக்கப்பட்டுவரும் ஆணாதிக்கச் சிந்தனையும், அடுத்த தலைமுறைகளுக்கும் அது கடத்தப்படுவதற்கு ஏதுவாக அமைந்துள்ள சாதி, மதம் போன்ற சமூகக் கட்டமைப்புகளும்தான் பெண்களின் உருவத்தைக் கேலி பேசக் காரணம். இதில் ஊடகத் துறையின் பங்களிப்பு அதிகம். பெண்களைச் சமமாகக் கருதும் எண்ணத்தை வளர்க்கும் இலக்கியங்களையும் கதைகளையும் அவசியம் வளர்த்தெடுக்க வேண்டும்.
- மு.முகிலன், சென்னை.
தங்களைப் பிறர் கேலி செய்யும்போது பெண்கள் அமைதியாக இருப்பதால்தான் கேலியும் கிண்டலும் நகைச்சுவை என்கிற பெயரில் தொடர்கின்றன. பெண்கள் இனியும் பொறுமை காக்காமல் தங்களைக் கிண்டல் செய்பவர்களைத் துணிந்து எதிர்த்து நின்று சாட வேண்டும். அப்போதுதான் அவர்கள் அச்சப்பட்டுத் தங்கள் செயலுக்காக வருந்துவார்கள்.
- உமாதேவி பலராமன், திருவண்ணாமலை.
தங்களது குறுகிய மனப்பான்மையாலும், தன் மனைவி தன்னை விஞ்சிவிடுவாளோ என்கிற பயத்தாலும்தான் பெரும்பாலான ஆண்கள் உருவக் கேலியைக் கையில் எடுக்கிறார்கள். தன் மனைவியின் உடல் குறைபாட்டைக் கேலி செய்த கிறிஸ் ராக்கைத் தாக்கியதற்காக வில் ஸ்மித் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், பொதுவெளியில் ஒரு பெண்ணின் உருவத்தை விமர்சனம் செய்த கிறிஸ் ராக் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிகழ்வு இச்சமூகத்தின் பாலினப் பாகுபாட்டுக்கும், பெண்கள் மீது வார்த்தை வன்முறைகள் தொடுக்கப்படுவதற்கும், அவை கண்டிக்கப்படாமல் தொடர்வதற்குமான சான்று. பெண்கள் இவற்றைப் பொருட்படுத்தாமல், தங்களது முன்னேற்றத்தில் கவனம் செலுத்த வேண்டும். புறத்தோற்றத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதைத் தவிர்த்து, திறன்கள் மற்றும் செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
- ர. ரஜினி பியூலா ஷோபிகா, வடபழஞ்சி, மதுரை.