முகங்கள் | அன்று ‘ஹோம் மேக்கர்’ இன்று ‘ஹோம் பேக்கர்’

முகங்கள் | அன்று ‘ஹோம் மேக்கர்’ இன்று ‘ஹோம் பேக்கர்’
Updated on
2 min read

திருமணம் முடிந்து புகுந்த வீடு, குழந்தை என்றான பிறகு பெரும்பாலான பெண்களால் வேலைக்குச் செல்ல முடிவதில்லை. ஆனால், இதுதான் விதியென்று சிலர் ஓய்ந்துவிடுவதில்லை. இல்லத்தரசியாக வீட்டையும் கவனித்துக்கொண்டு ஏதாவது சிறு தொழிலையும் செய்துவருகின்றனர். அவர்களில் ஒருவர்தான் கிருத்திகா. சென்னையைச் சேர்ந்த இவர் தன்னை ‘ஹோம் பேக்கர்’ என்று அறிமுகப்படுத்திக்கொள்கிறார்.

கிருத்திகாவின் பிறந்த வீட்டில் கடலை மிட்டாய் செய்வது குடும்பத் தொழில். சிறுவயதில் சிறுவாட்டுக் காசுக்காகக் கடலைமிட்டாய் உருட்டுவது, பாக்கெட்டுகளை ஒட்டுவது என்று சிறு சிறு வேலைகளைச் செய்த கிருத்திகாவுக்கு அந்தத் தொழில் மிகவும் பிடித்திருந்தது. திருமணம் முடிந்து சென்னை வந்த பிறகு தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைக்குச் சேர்ந்தார். வயிற்றில் மகள் உதித்த நான்கு மாதங்களில் வேலையை விட்டுவிட்டார்.

சாப்பிடும் ஆசையில் உருவான தொழில்

கணவர் வேலைக்குச் சென்றுவிட வீட்டில் தனியாக இருந்த கிருத்திகாவுக்கு விதவிதமாகச் சமைப்பது மட்டுமே பொழுதுபோக்கு. ஒரு நாள் கேக் சாப்பிட வேண்டும் என்று ஆசை வந்தது. பேக்கரியில் கேக் வாங்கியவருக்கு அந்தச் சுவை பிடிக்கவில்லை. தானே களத்தில் இறங்கி கேக் செய்ய, அதைச் சாப்பிட்ட பக்கத்து வீட்டுக்காரர்கள் கேக்கின் சுவையைப் புகழ்ந்தார்கள். “அன்னைக்குச் சும்மாதான் பண்ணேன். நல்லா வந்தது. பிறகு தோழியின் கணவரது பிறந்தநாளுக்கு கேக் செய்துகொடுத்தேன். அதைச் சாப்பிட்டவர் இதைத் தொழிலாகச் செய்யலாமே என்று சொல்ல அப்போது தொடங்கியதுதான் இந்த கேக் பயணம்” என்று புன்னகைக்கிறார் கிருத்திகா.

கேக் செய்யும்போது கூடுமானவரை செயற்கைச் சுவையூட்டிகளையும் நிறமூட்டி களையும் தவிர்த்துவிடுகிறார். பதப்படுத்தும் பொருட்களையும் சேர்ப்பதில்லை. “என் மகளுக்காக எப்படிச் செய்வேனோ அப்படித்தான் கேக்குகளைத் தயாரிக்கிறேன்.” என்கிற கிருத்திகாவுக்குத் தற்போது 300 பேர் நிரந்தர வாடிக்கை யாளர்கள். நண்பர்கள், தெரிந்தவர்கள் என்று கேள்விப்பட்டுப் பலரும் இவரைத் தேடிவருகின்றனர். யூடியூப் ஃபுட் பிளாகர் ஒருவர் தன் சேனலில் கிருத்திகாவின் கேக் வகைகளைப் பற்றிச் சொல்ல, அதுவும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்தது.

ஆரம்பத்தில் பேக்கிங் பற்றி கிருத்திகாவுக்குப் பெரிதாக எதுவும் தெரியாது. ஆனால், இந்தத் துறையில் நிலவும் போட்டியைச் சமாளிக்கத் தன்னைத் தகுதிப்படுத்திக்கொண்டார். பல பயிற்சி வகுப்புகளில் பங்கேற்றுத் தன் அறிவைப் பெருக்கிக்கொண்டார். கேக்குகளை டெலிவரி செய்வதுதான் பெரும் சவாலாக இருக்கிறது என்கிறார் கிருத்திகா. “நிறைய டெலிவரி செயலிகளைப் பயன்படுத்திப் பார்த்தாச்சு. பாதியை உடைச்சுதான் கொண்டுபோய் சேர்க்கிறாங்க. அதனால், வாடிக்கையாளர்களையே வந்து வாங்கிட்டுப் போகச் சொல்வேன்” என்கிறார்.

கரோனாவால் விளைந்த நன்மை

கரோனா பெருந்தொற்றால் இரண்டு ஆண்டுகளுக்கு அனைவரும் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்க, கிருத்திகாவுக்கு அப்போதுதான் நிறைய ஆர்டர்கள் வந்தன. “பொதுவா ஒரு நாளுக்கு ஏழு அல்லது எட்டு கேக் டெலிவரி செய்வேன். கரோனா நாட்கள்ல 25 கேக் வரைக்கும் ஆர்டர் வந்தது. பொது முடக்கத்தால் எல்லாக் கடைகளும் மூடியிருந்ததால் எனக்கு நிறைய ஆர்டர் கிடைத்தது” என்று சொல்லும் கிருத்திகா இன்று மாதம்தோறும் கணிசமாகச் சம்பாதிக்கிறார்.

“இந்தத் தொழிலைத் தொடங்கியபோது வருமானத்தைப் பெரிய அளவில் எதிர்பார்க்க வில்லை. ஆனால், இந்த ஏழு வருட உழைப்பு எனக்கு ஓரளவுக்கு நல்ல வருமானத்தைக் கொடுக்குது. இந்தத் தொழில் விரிவடைந்ததில் என் கணவர் முத்துக்குமரனுக்குப் பெரும் பங்கு உண்டு. எந்த உணவா இருந்தாலும் முதலில் அது கண்ணுக்கு விருந்தாக இருக்கணும். நான் தயாரித்த கேக் வகைகளை அவர் அப்படிப் படமெடுத்துத் தந்து என் வெற்றிக்கு உதவினார்” என்று சொல்லும் கிருத்திகா, இன்ஸ்டாகிராம் செயலியையும் தன் வெற்றிக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கிறார்.

கிருத்திகாவின் இன்ஸ்டாகிராம் பக்கம்: https://bit.ly/36k2t4H

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in