

உலகின் எப்பகுதிக்குச் சென்றாலும் அப்பகுதியில் இருக்கும் சிறப்பான உணவு வகைகளைத் தேடிக் கண்டுபிடித்து ருசிக்கத் தொடங்கிவிட்டால், ஏராளமான உணவு வகைகள் நமக்கு அறிமுகமாகும். கூடவே அப்பகுதியின் உணவுக் கலாச்சாரம் குறித்தும் ஆழமாக நம்மால் அறிந்துகொள்ள முடியும். பயணம் செல்லும் பகுதிகளில் உள்ள உணவு வகைகளைத் தேடிப்பிடித்துச் சாப்பிடும் பழக்கமுடைய நான் சேகரித்த ஓர் உணவு அனுபவம்தான் ‘நீர்தோசை’! ‘என்ன… தண்ணீரில் தோசையா!...’ என நீங்கள் ஆச்சரியப்படுவது தெரிகிறது!
கர்நாடக மாநிலத்தில் உள்ள ஆகும்பேவின் சிறப்புதான் ‘நீர்தோசை’. கர்நாடக மாநிலத்தின் உணவுச் சிறப்புகளில் நீர்தோசையை நிச்சயம் குறிப்பிட்டே ஆக வேண்டும். ரவா தோசை, மசால் தோசை, கோதுமை தோசை, பொடி தோசை எனத் தோசைகளில் பல்வேறு வகைகள் நம்மிடம் இருக்க, அதென்ன நீர்தோசை எனும் கேள்வி உங்களுக்கு எழலாம். இதே கேள்வி ஆகும்பேவில் உள்ள ஓர் உணவகத்தில் அமர்ந்திருந்தபோது எனக்குள்ளும் எழுந்தது!
மங்களூர் சமையல் கலாச்சாரம்
‘நீர்தோசை சாப்பிடுங்க… இங்க ஸ்பெஷல்…’ என உணவக ஊழியர் உணவுக் குறிப்பு கொடுக்க, நீர்தோசை மீது ஆர்வம் மேலோங்கியது. எப்படித் தயாரிக்கிறார்கள் என்பதை அறிய உணவகத்தின் அனுமதியுடன் சமையலறைக்குள் நுழைந்தேன். பெரிய தோசைக்கல்லில் தண்ணீர் போலக் கரைக்கப்பட்ட மாவை, வீட்டு வாசலுக்கு நீர் தெளிப்பதைப்போல நுணுக்கமாகத் தெளித்தார் அந்தச் சமையலர். அடுத்த சில நிமிடங்களிலேயே பெரிய அளவிலான நீர்தோசை தயார்!
உடுப்பி, மங்களூர் சமையல் கலாச்சாரத்தில் நீர்தோசை முக்கிய அங்கம் வகிக்கிறது. உடுப்பியிலிருந்து வெகு அருகில் இருக்கும் ஆகும்பேவில் நீர்தோசை பிரபலம் அடைந்திருப்பதில் எவ்வித ஆச்சரியமும் இல்லை. உள்கர்நாடக மாநிலத்தில் நீர்தோசை அதிகம் புழக்கத்திலிருந்தாலும், கர்நாடக கடற்கரையோரப் பகுதிகளில் கிடைக்கும் நீர் தோசைக்குத் தனி மவுசு இருக்கிறதாம்.
எப்படித் தயாரிப்பது?
நமது அரிசிமாவு தோசையைப் போன்று இந்த மாவை நீண்ட நேரம் புளிக்கவைக்கத் தேவையில்லை. 2 – 3 மணிநேரம் புளிக்க வைத்தால்போதும். மாவோடு இளநீர் (அ) தேங்காய் நீர் (அ) தேங்காய்த் துருவல் (அ) சீரகம் சேர்த்துத் தோசையாக ஊற்றுவது நீர்தோசையின் ஸ்பெஷல் டிசைனாம்! நான் ருசித்த நீர்தோசையில் இடம்பிடித்திருந்த சீரகம் அவ்வப்போது கடிபட்டபோது, ஏனோ தனித்த சுவையை அள்ளிக்கொடுத்தது.
மேலும், அஞ்சறைப்பெட்டி சார்ந்த பொருட்களை நீர்தோசைக்கான மாவில் கலந்து விதவிதமான ஸ்பெஷல் நீர்தோசைகளைத் தயாரிக்கலாம். அதாவது மிளகுத் தூள், சோம்பு, ஓமம் இப்படி மருத்துவ குணமிக்க நீர்தோசைகளையும் செய்யலாம்.
எளிதான செரிமானத்திற்கு
நீர்தோசையைப் பற்றித் தெரிந்துகொண்டால் லேசான சீருணவுக்கு எடுத்துக்காட்டாக இனி நீர்தோசையை மருத்துவர்கள் பரிந்துரைக்கத் தொடங்கிவிடுவார்கள். உணவியல் நிபுணர்களின் சீருணவு அட்டவணையில் நீர்தோசை கட்டாயம் இடம்பிடித்துவிடும். சொல்லப்போனால் நீர்தோசை, எளிதில் செரிமானமாகும் லேசான சீருணவு அல்ல; அது மிக, மிக லேசான சீருணவு! பூவின் இதழைப் போல மெல்லியது.
ஆம், ‘மெல்லிய கண்ணாடியைப் போல நீர்தோசை காட்சியளித்தது’ என நீர் தோசைக்குக் கண்ணாடியை உருவகப்படுத்தலாம். உருவத்தில் மட்டுமல்ல, உணவாக எடுத்துக்கொண்டாலும், அந்த மெல்லிய தேகம் கொண்ட நீர்தோசையைச் செரிக்க, நமது செரிமான உறுப்புகளுக்குப் பெரிதாக ஆற்றல் தேவை இருக்காது. விரைவில் செரித்து நமக்கான ஆற்றலை அது உடனடியாக வழங்கும்.
தொடு உணவு
நீர்தோசைக்குத் தொட்டுக்கொள்ள, தேங்காய்த் துருவல், தேங்காய்த் துருவலால் தயாரிக்கப்பட்ட இனிப்பு சட்னி, இனிப்பான கர்நாடக சாம்பார் பரிமாறுகிறார்கள். நீர்தோசையை மேலும் மெருகேற்றுகின்றன தொடுகைகள்! தொட்டுச் சுவைத்த பின் ‘அருமையான காம்பினேஷன்…’ என சபாஷ் போட வைக்கிறது! தொடுகைகள் இல்லாமல் தனித்த நீர்தோசையை ருசித்தபோது, அதுவும் தனித்துவமான சுவையை வழங்கியது.
மருத்துவ தோசை
நீர்தோசை காம்போவிற்கு மருத்துவக் குணங்களோ ஏராளம்! ‘தேங்காயே சாப்பிடக் கூடாது…’ என நம்மைச் சார்ந்து உலாவரும் தகவல் மிகவும் தவறானது. உடலுக்குத் தேவையான தெம்பையும் நெய்ப்புத்தன்மையையும் தேங்காய் சார்ந்த உணவுப் பொருட்கள் உடனடியாகக் கொடுக்கும். கூடவே நுண்ணூட்டங்களுக்குத் தேங்காயில் பஞ்சமில்லை. செரிமானக்கோளாறுகளை உடனடியாக நிவர்த்தி செய்ய இருக்கவே இருக்கிறது சீரகம். தொடுகையில் சேர்க்கப்படும் இனிப்பு, உடனடி ஆற்றலையும் மகிழ்ச்சியையும் கொடுக்கும்.
மொத்தத்தில் நீர்தோசை, மருத்துவ தோசை!
- கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர்
தொடர்புக்கு: drvikramkumar86@gmail.com