

சமைப்பது ஆணின் வேலையா, பெண்ணின் வேலையா என்கிற விவாதங்கள் ஒரு பக்கம் இருக்க, சமையலுக்கென்று யூடியூப் சேனல் தொடங்கி ஒரு கோடிக்கும் அதிகமான சந்தாதாரர்களைப் பெற்றிருக்கிறார் நிஷா மதுலிகா.
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இவர் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர். சிறு வயதிலேயே சமைக்கக் கற்றுக்கொண்டார். திருமணத்துக்குப் பிறகு தன் கணவரது வேலைகளில் உதவியவர், ‘Empty nest syndrome’ என்கிற பாதிப்புக்கு ஆளானார். குழந்தைகள் படிப்புக்காகவோ திருமணம் முடிந்தோ வீட்டை விட்டுப் போகும்போது பெரும்பாலான இந்தியப் பெற்றோருக்கு ஏற்படும் சோகமும் தனிமையும்தான் இந்தப் பாதிப்புக்குக் காரணம். அதாவது வீடு என்கிற கூட்டைவிட்டுக் குழந்தைகள் வெளியேறியதும் வெறுமையான வீட்டுக்குள் பெற்றோர் உணரும் தனிமையத்தான் ‘Empty nest syndrome’ என்கிறார்கள்.
தன்னை மூழ்கடிக்கவிருந்த தனிமைத் துயரிலிருந்து வெளிவர, தனக்குத் தெரிந்த சமையலை உறுதியாகப் பற்றிக்கொண்டார் நிஷா. 2007-ல் ஒரு வலைப்பூவைத் தொடங்கித் தனக்குத் தெரிந்த சமையல் குறிப்புகளை அதில் பதிவிட்டார். நாடறிந்த பல்கலைக் கழகத்தில் உலக சமையல் முறைகளைக் கற்று அறியவில்லை நிஷா. தனக்குத் தெரிந்ததை இந்தியில் எழுதினார். அது பெரிய அளவுக்கு வரவேற்பைப் பெற 2011-ல் யூடியூப் சேனலைத் தொடங்கினார். அடுத்த மூன்றே ஆண்டுகளில் நாடறிந்த சமையல் கலை நிபுணராகிவிட்டார்.
இந்திய சைவ உணவு வகைகள்தான் நிஷாவின் ஸ்பெஷல். பிற மாநில சமையலையும் ஒரு கை பார்க்கிறார். காரம், இனிப்பு, மாலை நேர நொறுவை, ஊறுகாய், தொடுகறி, நூடுல்ஸ் வகைகள், சப்பாத்தி - ரொட்டி வகைகள், சாட் உணவு என்று அனைத்து வயதினருக்கும் ஏற்ற உணவு வகைகளைக் கற்றுத் தருகிறார். நிஷாவின் இணையதளத்தில் ஆங்கிலம், இந்தி என இரண்டு மொழிகளிலும் சமையல் செய்முறையைப் படிக்கலாம். யூடியூபில் இந்தியில்தான் பேசுகிறார். சமையலுக்கு மொழி தடையா என்ன? அந்தக் காலத்துப் பாட்டிகள் சொல்வதைப் போல பொறுமையாகச் செய்முறையைச் சொல்கிறார் நிஷா. அதைப் பார்த்தே சமைத்துவிடலாம். அப்படியும் சில பொருட்கள் என்னவென்று தெரியவில்லை என்றாலும் கவலையில்லை. சமையல் பொருட்களின் பெயர் வீடியோவின் அடியில் ஆங்கிலத்தில் குறிப்பிடப்படுகிறது.
காலத்துக்கு ஏற்பவும் நேரத்துக்கும் ஏற்பவும் சமையல் வகைகளை அடுக்குகிறார் இவர். அதனால்தான் இவருக்கு மாநிலம் கடந்தும் ஏரளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்திய நாளிதழ்களிலும் இவர் சமையல் குறிப்புகளை எழுதுகிறார். பெரிய உணவகங்களில் ஆலோசகராகவும் செயல்படுகிறார். வடை, போண்டா, காரக் குழம்பு போன்ற பெரும்பாலான உணவு வகைகள் நம் தென்னிந்திய உணவைப் போலவேதான் இருக்கின்றன. ஆனால், சேர்க்கப்படும் மசாலாவைப் பொறுத்து சுவை மாறுபடுகிறது.
தற்போது கோடைகாலம் தொடங்கிவிட்டதால் வெயிலைச் சமாளிக்கும் உணவு வகைகளின் செய்முறையைத் தந்துள்ளார். நாம் அரிசி மாவில் செய்கிற வற்றல் போல இவரும் அரிசியை ஊறவைத்து வற்றல் போடுகிறார். குழந்தைகளுக்குப் பிடிக்கும் வகையில் அதை ‘அரிசி குர்குரே’ என்று சொல்கிறார்! வெயிலுக்கு இதமாகப் பச்சை மாங்காயில் ஜூஸ் தயாரிப்பது குறித்தும் சொல்லியிருக்கிறார். பச்சை மாங்காய்த் துண்டுகளோடு சிறிதளவு கறுப்பு உப்பு, புதினா, சீரகத் தூள், மிளகு, சர்க்கரை சேர்த்து அரைத்துக்கொள்கிறார் அதை வடிகட்டி அதிலிருந்து ஒரு டேபிள் ஸ்பூன் அளவுக்கு ஒரு டம்ளரில் ஊற்றி அதனுடன் தேவையான அளவு தண்ணீரும் ஐஸ் துண்டுகளும் சேர்த்துப் பருக வேண்டியதுதான்! இந்த எளிமைதான் நிஷா மதுலிகாவின் வெற்றிக்குக் காரணம்.
நிஷாவின் சமையலைக் காண: https://www.youtube.com/channel/UCgoxyzvouZM-tCgsYzrYtyg