ஏப்ரல் 15: தேசிய திருநங்கையர் தினம்: திருநரின் வாழ்வும் வளமும்

ஏப்ரல் 15: தேசிய திருநங்கையர் தினம்: திருநரின் வாழ்வும் வளமும்
Updated on
2 min read

தேசிய திருநங்கையர் தினத்தையொட்டி இரண்டு முக்கியமான பதிவுகளை இந்தக் கட்டுரையில் முன்வைக்கிறோம். முதலில் திருநங்கையரின் வாழ்வுக்கு ஆதாரமாக அவர்கள் தங்களுக்குத் தாங்களே ஏற்படுத்திக்கொண்ட சமூக அமைப்புகள் அரசின் நலத் திட்டங்களுக்குத் தொடக்கப்புள்ளியாக திகழ்ந்தன என்பதை அறிவுறுத்துவது. அடுத்து, தேசிய கலாச்சார நிதியகத்தின் ஆலோசகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, சுதா நாராயணமூர்த்தி போன்ற பிரபலங்களுடன் இணைந்து பணியாற்றவிருக்கும் ஒரு திருநங்கையைப் பற்றிய பதிவு.

கேள்விக்குறியாக இருந்த திருநங்கையர் வாழ்வை ஆச்சரியக்குறியாக மாற்றியிருப்பதில் இந்தியாவின் பல மாநிலங்களுக்கும் முன்னோடி மாநிலமாகத் தமிழகம் திகழ்கிறது. திருநங்கை, திருநம்பி, திருநர் வாழ்வில் சந்திக்கும் போராட்டங்களைப் பற்றி எழுதுவதற்கும் பேசுவதற்கும் இன்றைக்கு நிறைய ஊடகங்கள் இருக்கின்றன. ஆனால், இப்படிப்பட்ட வாய்ப்புகள் எதுவுமே இல்லாத 1990-களில் இந்தியாவிலேயே முதன் முதலாக ‘அகில உலக அலிகள் நலவாழ்வு சங்கம்’ நூரி அம்மாள் உள்ளிட்ட மூத்த திருநங்கைகளால் 1996-ல் சென்னையில் தொடங்கப்பட்டது. இந்த அமைப்புதான் பொதுச் சமூகத்துக்கும் அரசுக்கும் இடையே பாலமாகச் செயல்பட்டு திருநர் சமூகத்தின் பிரச்சினைகளை அவர்களுக்குப் புரியும் வகையில் கொண்டு சேர்த்தது. இப்படித் தொடங்கப்பட்ட நலச் சங்கம் படிப்படியாக எப்படி வளர்ந்தது, 2008 ஏப்ரல் 15 அன்று தமிழக அரசால் ‘அரவாணிகள் நல வாரியம்’ தொடங்கப்படுவதற்குக் காரணமாக அமைந்த தருணங்கள் எவை, தேசிய திருநங்கையர் தினமாக ஒட்டுமொத்த இந்தியாவும் ஏப்ரல் 15ஐ ஏற்றுக்கொள்வதற்கு காரணமாக அமைந்த விஷயம் என்ன என்பது போன்ற செய்திகளை ஒரே சரடில் கோத்து நேர்த்தியாகத் தன்னுடைய ‘டிரான்ஸ் மீடியா’ யூடியூப் தளத்தில் பேசியிருக்கிறார் திருநர் சமூகச் செயற்பாட்டாளர் ப்ரியா பாபு.
கேலிப் பேச்சுக்கும் தீண்டாமைக்கும் உள்ளான ஒரு சமூகம் எப்படித் தன்னைத்தானே செதுக்கிக்கொண்டு சிற்பமாகியிருக்கிறது, அதில் எப்படிப்பட்ட போராட்டங்களை எதிர்கொண்டிருக்கிறது என்பதையெல்லாம் ரத்தினச் சுருக்கமாக அதே சமயத்தில் தீர்க்கமாக நமக்குப் புரியவைக்கிறது இந்தக் காணொலி.
காணொலியைக் காண: https://www.youtube.com/watch?v=pNkhL0M6sS4

ஊர்வசி
ஊர்வசி

இந்தியாவிலேயே முதன் முறையாகத் தேசிய கலாச்சார நிதியத்தின் ஆலோசகராக மதுரை உசிலம்பட்டியைச் சேர்ந்த திருநங்கைச் செயற்பாட்டாளர் ஊர்வசி காந்தி நியமிக்கப்பட்டிருக்கிறார். ‘தாய் விழுதுகள் திருநங்கைகள் கூட்டமைப்’பின் செயலாளராகவும், தலைவராகவும் இருந்தவர். அதோடு, சென்னை ‘வாலண்டரி ஹெல்த் சர்வீஸ்’ தமிழ்நாடு நோய்த் தடுப்புப் பணியில் திருநங்கை மேம்பாட்டுத் திட்டத்தில் பணியாற்றியிருப்பவர் ஊர்வசி. மாற்றுப்பாலினத்தவரின் சமயச் சடங்குகள், அவர்களின் கலாச்சார தொடர்புடைய இடங்கள், வழிபாட்டுத் தளங்கள் அனைத்தையும் பாதுகாக்கும் நடவடிக்கைகளே தங்கள் பணியாக இருக்கும் என்கிறார் ஊர்வசி.
“தமிழகத்தின் பல மாவட்டங்கள், இந்தியாவின் பல மாநிலங்கள், பல நாடுகளிலிருந்தும் திருநர் சமூகத்தினர் சங்கமிக்கும் ஒருங்கிணையும் இடமாக இன்றைக்கும் இருப்பது தமிழ்நாட்டில் கூத்தாண்டவர் கோவில் விழா. அப்படிப்பட்ட மையமாகச் செயல்படும் அந்த இடத்தின் முக்கியத்துவத்தை முறையாக ஆவணப்படுத்த இருக்கிறோம். அதோடு, திருநங்கையரின் குலதெய்வமான போத்ராஜ் மாதா கோயிலுக்கு மூத்த திருநங்கையர் யாத்திரை சென்று தரிசிப்பதற்கு அரசின் உதவியைக் கோருவது, திருநர்கள் பூசாரிகளாக இருக்கும் கோவில்களை முறைப்படுத்துவது, ஆவணப்படுத்துவது, அரசின் அங்கீகரிக்கப்பட்ட கோவிலுக்கு உரிய சலுகைகளைப் பெறவைப்பது, கலாக்ஷேத்ரா போன்ற அமைப்புகளில் திருநங்கையர்கள் நடனம் உள்ளிட்ட கலைகளைக் கற்றுக்கொள்வதற்கு இட ஒதுக்கீட்டைக் கோருவது, முதற்கட்டமாக ஒருங்கிணைக்கப்படும் தகவல்களைச் சுற்றுலாத்துறை வசம் ஒப்படைப்பது போன்ற பணிகளில் கவனம் செலுத்த இருக்கிறோம்” என்றார் ஊர்வசி.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in