

கொளுத்தும் கோடைக்கு நடுவில் நாம் இளைப்பாறக் கிடைத்த நாளாக இருக்கிறது சித்திரை மாதப் பிறப்பு. தமிழர்கள் பலரும் சித்திரை முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடுகின்றனர். அன்று பெரும்பாலானோர் வீடுகளில் அசைவ விருந்து கமகமக்கும். சித்திரையில் திரும்பும் திசையெங்கும் மலர்கள் பூத்துக் குலங்க, அவற்றுள் ஒன்றான வேப்பம்பூவில் பச்சடி செய்வோரும் உண்டு. சித்திரை முதல் நாளைச் சிறப்பிக்கும் உணவு வகைகள் சிலவற்றைச் சமைக்கக் கற்றுத்தருகிறார் கும்பகோணத்தைச் சேர்ந்த ராஜபுஷ்பா. பாரம்பரிய உணவைக் காலத்துக்கு ஏற்ப புதிய முறையில் சமைப்பதில் வல்லவர் இவர்.
செட்டிநாடு சிக்கன்
என்னென்ன தேவை?
நாட்டுக் கோழி – அரை கிலோ
தயிர் - கால் கப்
மிளகாய்த் தூள் - அரை டீஸ்பூன்
நெய், மஞ்சள் தூள், உப்பு, கறிவேப்பிலை, மல்லித் தழை - தேவையான அளவு
வறுத்து அரைக்க:
காய்ந்த மிளகாய் - 1 கைப்பிடி
மல்லி – 2 கைப்பிடி
சோம்பு, சீரகம் - தலா அரை டீஸ்பூன்
மிளகு – 1 டீஸ்பூன்
பெரிய வெங்காயம் - 2 (நறுக்கியது)
பட்டை - 1 துண்டு
கிராம்பு – 2
ஏலக்காய் -1
வதக்கி அரைக்க:
இஞ்சி -1 துண்டு
பூண்டு – 7 பல்
சின்ன வெங்காயம் - 5
தக்காளி – 2
எப்படிச் செய்வது?
கோழியைச் சுத்தம் செய்து அதில் தயிர், மஞ்சள் தூள், உப்பு சேர்த்துக் கிளறி 15 நிமிடம் கழித்து குக்கரில் 5 விசில் விட்டு இறக்குங்கள். அடுப்பில் கடாயை வைத்து நெய் சேர்த்து சோம்பு, கறிவேப்பிலை தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்குங்கள். அதில் உப்பு சேர்த்து, அரைத்து வைத்துள்ள விழுதையும் சேர்த்து நெய் மேலே வரும் வரை வதக்குங்கள். பின் வேக வைத்துள்ள கறியைச் சேர்த்துக் கலந்து, ஐந்து நிமிடம் மூடி வேகவையுங்கள். கிரேவி கெட்டியானதும் வறுத்து அரைத்த பொடியைச் சேர்த்துக் கிளறி இறக்குங்கள்.