

பெண்களின் உருவத்தையும் அவர்களது உடல்குறைபாட்டையும் நகைச்சுவை என்கிற பெயரில் கேலியாகப் பேசுவது குறித்து ஏப்ரல் 3 அன்று வெளியான ‘பெண் இன்று’வில் எழுதியிருந்தோம். ஒருவரை உருவக் கேலி செய்வதற்கான காரணம் என்ன, அதை எப்படித் தவிர்ப்பது என்றும் கேட்டிருந்தோம். பெண்களைப் போகப்பொருளாகக் கருதுவதே இதற்குக் காரணம் என்று பெரும்பாலானோர் குறிப்பிட்டிருந்தனர். தேர்ந்தெடுக்கப்பட்ட கடிதங்களில் சில உங்கள் பார்வைக்கு:
தன் மனைவியைப் பொதுவெளியிலோ வீட்டிலோ நடத்தும் விதம் அவளது சுயமரி யாதையை எந்த அளவுக்குப் பாதிக்கும் என்று ஒவ்வோர் ஆணும் உணர்வதுடன் பிறருக்கும் உணர்த்த வேண்டும். பெண்களுக்கும் இது பொருந்தும்.
- விஜயா காமாட்சி
திரைப்படங்களில் வரும் பாடல் முதல் அனைத்திலும் பெண்ணைப் போகபொருளாகத் தான் காட்சிப்படுத்துகின்றனர். ‘அடிடா அவள, வெட்ரா அவள...’ என்பது போன்ற காட்சியோ பாடல் வரியோ எதுவானாலும் அது வன்முறையானது, கீழ்த்தரமானது என்று அந்த நடிகர்களுக்குத் தெரியமாலா இருக்கும்?
- ரா.மணிகண்டன், சேலம்
குழந்தைகள் பெற்றோர்களைப் பிரதி பலிப்பார்கள். அவர்களிடம் ஆரோக்கியமான சிந்தனையை ஏற்படுத்துவதைக் காட்டிலும், உருவக் கேலி போன்ற தவறான அணுகு முறை அவர்களிடம் சென்றுசேராத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும். பெண்களும் கணவர்கள் பேசும் வரம்புமீறிய கேலித்தனத்தைப் புன்னகை யோடு எதிர்கொள்ளாமல், கேள்விகளால் தாக்குதல் தொடுக்கும்போது, உருவக் கேலி தவறு என்று குழந்தைகளும் உணர்வார்கள்.
- வே. பிரேமாவதி, விழுப்புரம்.
பெண்கள் மட்டுமே இருக்கும் குழுவில் நகைச்சுவைக்கும் சிரிப்புக்கும் பஞ்சமே இருக்காது. அங்கே அவர்களைத் தயங்கவைக்கும் ஆண் என்கிற காரணி இல்லாததுதான் காரணம். உருவக் கேலிகளை எதிர்கொள்ளும்போது பெண்கள் தைரியமாகத் தங்கள் எதிர்ப்பைப் பதிவுசெய்ய வேண்டும். இதுதான் நாம் அவர்களுக்குக் கொடுக்கும் பதிலடி.
- தேஜஸ் சுப்பு, காளப்பட்டி, கோவை.
பெண்களை எப்போதும் போகப்பொரு ளாகவும், நகைச்சுவை கோமாளிகளாகவும், கேலிச் சித்திரமாகவும் பார்க்கும் மனிதர்களை உணர்வற்ற வேடிக்கை மனிதர்களாகத்தான் நான் பார்க்கிறேன். அவர்களைத் துச்சமாக நினைத்து கடக்கப் பழக வேண்டும்.
- விமலா ஆல்பர்ட், கோடம்பாக்கம்.
பெண்களை எகத்தாளமாகப் பார்க்கும் போக்கே, நாளடைவில் வளர்ந்து, அவர்களை என்ன வேண்டுமானாலும் பேசலாம், எப்படி வேண்டுமானாலும் நடத்தலாம் என்கிற மனப்பாங்கைத் தருகிறது. பெண்கள் சுயமரியாதையோடு அதை எதிர்த்தால் அவர்கள் மீது வன்முறையைச் செயல்படுத்துகிறார்கள். பெண்களை மதிக்கும் எவருமே, அவர்களைக் குறித்து முகம் சுளிக்கும் வகையிலும், மனம் வருந்தும் வகையிலும் கேலி பேசவே மாட்டார்கள். திரைப்படங்களில் பெண்களைப் பற்றி வெளியாகும் தரம்தாழ்ந்த ‘நகைச்சுவை’ முற்றிலும் தவிர்க்கப்பட வழிகாட்டுதல்கள் கொண்டுவரப்பட வேண்டும்.
- இரா. பொன்னரசி, சத்துவாச்சாரி, வேலூர்.
அந்த நேரத்துக்கு மற்றவர்களைச் சிரிக்கவைக்க வேண்டும், தன் ஆளுமையைக் காட்ட வேண்டும் என்கிற எண்ணமே ஆண்களை இப்படிப் பேச வைக்கிறது. சிலர் தாழ்வு மனப்பான்மையினால் இப்படிப் பேசுகிறார்கள். திரைப்படங்கள், ஊடகங்கள் எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றி உருவக் கேலியை வளர்க்கின்றன. எத்தனையோ இடர்களைக் கடந்து வரும் பெண்கள் இந்தப் பகடியையும் எளிதாகக் கடந்துசெல்லப் பழகிக் கொள்கின்றனர். பெண்ணை மதிக்கும் உணர்வற்ற ஆண்களை அறிவுரை கூறி திருத்த முயல்வது பயனற்றது. தோற்றத்தைத் தாண்டி நம் திறமையும் செயல்பாடுகளும்தான் உலகில் பேசப்படும் என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.
- மணிமேகலை, ஓசூர்.
தங்கள் மகள் மாநிறத்துடன் இருந்தால் வரன் பார்ப்பதில் சிக்கல் வந்துவிடும் என்று கவலைகொள்கிற பெற்றோர் நம்மிடையே உண்டு. வீட்டிலேயே இந்த நிலை என்றால் பொதுவெளியில் பெண்ணுக்கு எப்படி மதிப்பு கிடைக்கும்? அழகான ஆண்தான் துணைவனாக வேண்டும் என்று பெண்கள் நினைத்தால் இங்கு ஆண்கள் பலருக்குத் திருமணமே நடந்திருக்காது. பெண்களின் உருவம் ஒரு பொருட்டல்ல, உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதே ஆண்களுக்கு அழகு என்று ஒவ்வொரு ஆணும் புரிந்துகொண்டால் பொது இடங்களில் அறை வாங்க வேண்டியதில்லை, தங்கள் மதிப்பையும் இழக்க வேண்டியதில்லை.
-ச.அரசமதி, தேனி.
உருவக் கேலிக்கு எதிராகச் சமூக வலைத்தளங்களில் களமாடுகிறவர்கள்கூடத் தனிப்பட்ட வாழ்வில் தன்னைச் சுற்றியுள்ள சிலரை உருவக் கேலி செய்துகொண்டுதான் இருப்பார்கள். உருவக் கேலி செய்வதில் ஆண், பெண் என்கிற வேறுபாடு இல்லை. ஆனால், பெண்களே அதிக பாதிப்புக்கு ஆளாகிறார்கள். உருவக் கேலிக்கு ஆளாகும் பெண்கள் அதை இரண்டு வழியில் அணுகலாம். ஒன்று வில் ஸ்மித்தைப் போல உரைக்கும்படி உணர்த்தலாம் அல்லது அவர்களின் அறிவு அவ்வளவுதான் என எண்ணி சிறு புன்னகையுடன் கடந்து செல்லலாம்.
- ரா. காயத்ரி, மாத்தூர், புதுக்கோட்டை.
நகைச்சுவை என்பது யார் மனத்தையும் புண்படுத்தாமல் இருக்க வேண்டும். இன்று சமூக ஊடகங்களில் வெளியாகும் ஏராளமான மீம்கள் பெண்களைச் கேலி செய்துதான் உருவாக்கப்படுகின்றன. இதைப் பார்த்து வளரும் இளம் தலைமுறையினர், உருவக் கேலி தவறல்ல என்று நினைத்து அவர்களும் அதைக் கையில் எடுக்கிறார்கள். முதலில் இதைக் கட்டுப்படுத்த வேண்டும்.
- ராஜேஸ்வரி ரிஷிகர்
உருவத்தை அடிப்படையாக வைத்துச் சூட்டப் படும் புனைபெயர்கள் கணவன், மனைவிக்குள் நெருக்கத்தை உண்டாக்குவதுபோலத் தோன்றினாலும்சில நேரம் மனக்கசப்பையும் உருவாக்கக்கூடும். ஆண், பெண் யாராக இருந்தாலும் நகைச்சுவை என்பது இருபாலாருக்கும் எந்தவிதச் சங்கடத்தையும் உருவாக்காத வகையில் இருப்பதே சிறந்தது.
- மா.கல்பனா பழனி, தருமபுரி.
கணவன் மனைவிக்கு இடையே பரஸ்பர அன்பின் அடையாளமாகத் தெரியும் கிண்டல் கலந்த காயப்படுத்தாத வார்த்தைகள் நான்கு சுவர்களுக்குள் நடக்கையில் சிறப்பு. ஆனால், பட்டிமன்ற பேச்சாளர்கள் பலர் தங்களது மனைவி, மாமியார், மைத்துனி எனப் பெண் வர்க்கத்தைக் கேலி பேச அதற்குப் பார்வையாளர் மத்தியிலிருந்து சிரிப்பொலியும், கரவொலியும் வெளிப்படுவது வருத்தத்திற்குரியது. ஒரு கூட்டம் சிரிக்கிறதென்றால் என்ன வேண்டுமானாலும் பேசிவிடலாமா? பெண்களை மையப்படுத்தி வணிக நோக்குடன் உருவாக்கப்பட்ட செயற்கை யான அழகுசார் கட்டமைப்புகள் அனைவர் வீட்டின் அத்தியாவாசியச் செலவினங்களுக்குள் இடம்பிடித்துவிட்டதுதான் எதார்த்தம்.
அழகு என்னும் மாயவலைக்குள் சிக்கி, அதை அடைவதற்கான முயற்சிகளால் பல்வேறு வகையில் பாதிக்கப்படும் பெண்களும் நம்மிடையே உண்டு. தற்போது ஆண்களும் இதில் இணைந்துவிட்டனர். யாரோ சிலரது வியாபார உத்திகளுக்கு நமது உடல்நலனையும், மனநிம்மதியையும் தொலைத்துக்கொண்டிருக்கிறோம். இது போன்ற செயற்கைக் கட்டமைப்புகளையும் மாயத்தோற்றங்களையும் உடைத்தெறிவதில் தொடங்குகிறது உண்மையான பெண்ணியம். என் உடல், என் உரிமை என்கிற புரிதல் மேம்படவேண்டும். பெண்களுக்கு அரசியலில் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் நாம் அவர்களது உடல்நலன், மனநலன் சார்ந்த விஷயங்களுக்கும்கூடுதல் கவனம் செலுத்தவேண்டும்.
- நா.ஜெஸிமா ஹீசைன், திருப்புவனம்புதூர்.