

கார்த்திகை பிறந்துவிட்டால் போதும். அந்தக் கிராமத்துக்காரர்கள் பௌர்ணமியை ஒட்டிய திருக்கார்த்திகை எப்போது வருமென்று ஆவலோடு காத்திருப்பார்கள். ஏனென்றால், இந்த மூன்று நாட்களும் ஊர் ஆட்கள் மொத்தமும் மந்தையில்தான் குவிந்து கிடப்பார்கள். பெண்கள் தங்கள் வீட்டு வாசற்படிகளில் ஆளுக்கொரு கிளிஞ்சட்டியில் (அகல் விளக்கு) தீபமேற்றி வைத்துவிட்டு, ஊர்சனங்களுக்குக் கொடுப்பதற்காகப் பொங்கல் வைக்க ஆரம்பித்துவிடுவார்கள்.
சிறுவர்கள், ஆண்கள், பெண்கள், வயதானவர்கள் என்று எல்லோரும் விதம் விதமாக விளையாட ஆரம்பித்துவிடுவார்கள். விடிய விடிய சளைக்காமல் விளையாட்டுத்தான். இவர்களின் விளையாட்டைப் பார்ப்பதற்காகப் பெளர்ணமி நிலவு கிழக்குத் திக்கத்தில் சீக்கிரமே புறப்பட்டுத் தன் பால் ஒளியைச் சிந்தியவாறு மெல்லத் தவழ்ந்து வரும். அப்படி வரும்போது அதனுடன் சிறு சிறு மேகத்துணுக்குகளும் நட்சத்திரங்களும் கூடவே வந்தால், நிலா அவற்றையெல்லாம் ஒதுக்கிவிட்டுக் கிராமத்துக்காரர்களின் விளையாட்டைப் பார்க்க தானாகவே தனித்து வரும்.
வாசல்களில் அகல் விளக்கு
இந்தக் கிராமத்துக்காரர்களும் வயதுக்குத் தகுந்தவாறு தவுட்டுக்கன்னி, பொட்டக்கன்னி, மாது மாது, எட்டாம்தட்டு, துரோசணி எனது விதம் விதமான விளையாட்டுகளை விளையாடுவார்கள். பெண்கள் கிஞ்சட்டிகளைப் பொருத்திவிட்டுப் பொங்கச் சருவத்தோடு பொங்கலுக்கான அரிசி, பருப்பை மந்தைக்கு எடுத்துக்கொண்டு வந்ததும் கொஞ்சம் விவரமான பிள்ளைகளைக் கூப்பிட்டுத் தாங்கள் எரியவிட்டு வந்திருக்கும் கிளிஞ்சட்டிகளில் தீபத்தைக் குளிரவைத்துவிட்டு வரச் சொல்வார்கள். ஏனென்றால், எல்லா வீடுகளும் அப்போது கூரை வீடுகளாகத்தான் இருந்தன.
வீட்டுப் பக்கத்தில் மாட்டுக்காகக் கொட்டம், பக்கத்தில் படப்பு, அதோடு வீட்டைச் சுற்றிலும் சாக்கு, கோழிகளை அடைத்திருக்கும் பஞ்சாரக்கூடை, விறகு, ஏதாவது நெத்து நெருகு என்று கிடக்கும். காற்றில் சிறு தீப்பொறி போய் விழுந்தால் போதும். சற்று நேரத்தில் ஊரே சாம்பலாகிவிடும். அதனால், பிள்ளைகளைக் கூப்பிட்டு, விளக்கைக் குளிரவைத்துவிட்டு வரச் சொல்வார்கள். அதுவும், எண்ணெய் விட்டு எரியும் தீபங்களை வாயால் ஊதி அமத்தக் கூடாது. அதனால், அந்தப் பிள்ளைகளின் கையில் ஒரு பிடி வேப்பங்கொளையைக் கொடுத்து அனுப்புவார்கள். சிறுவர்களும் வீடு வீடாகப் போய் எரியும் தீபங்களைக் குளிர வைத்துவிட்டு வருவார்கள்.
கொண்டையை அலங்கரிக்கும் ஆவாரம்பூ
இப்படி விளையாட்டுகள் எல்லாம் முடிந்தபின் மந்தையில் கிடக்கும் பெரிய ‘இளவட்டக்கல்’லை யார் அதிக எண்ணிக்கையில் தூக்கிப் போடுகிறார்கள் என்கிற போட்டி நடைபெறும். இதற்காகவே மற்ற விளையாட்டுகளை வேர்க்க விறுவிறுக்க முடித்த இளவட்டங்கள் கிணற்றுக்குப் போய் ஒரு சிறு கல்லை எடுத்துத் தண்ணீருக்குள் போட்டுவிட்டுக் குளித்துவிட்டு வருவார்கள். சிறு கல்லை ஏன் கிணற்றுத் தண்ணீரில் போடுகிறார்கள் என்றால் பகல் முழுக்கக் கூனையாலும் வாளியாலும் மனிதர்களாலும் அடிபட்டு இருக்கும் கங்காதேவி, இரவில் அசந்து அலுத்துப்போய் உறங்கிக்கொண்டிருப்பாளாம். இந்த இளவட்டங்கள் திடீரென்று போய் கிணற்றுக்குள் குதித்தால் அரண்டுபோய் விடுவாளாம். இப்படி அரண்டுபோனால் பூமிக்குள்ளிருந்து ஊற்றெடுப்பது குறையுமாம். அதனால், முதலில் கங்காதேவியை எழுப்பச் சிறு கல்லெடுத்துப் போடுவார்கள்.
இளவட்டங்கள் குளித்துவிட்டு இடுப்பில் வெளுத்த வேட்டியும் தோளில் பட்டுக்கரைத் துண்டுமாக மந்தைக்குப் புதிதாகச் சில்லென்று வருவார்கள். இவர்களின் பலத்தைப் பார்ப்பதற்காகவே இவ்வளவு நேரமும் விளையாட்டில் மூழ்கியிருந்த குமரிகளும் வீட்டுக்குப் போய் ஒரு செறட்டை நிறைய மஞ்சள் அரைத்து முகத்தில் பூசி நன்றாகக் குளித்து முழுகி, பூவரசம்பூ சேலையும் புளியம்பூ ரவிக்கையையும் அணிந்துகொள்வார்கள். பிறகு அடர்ந்த கூந்தலை ஈரம் உலர்த்தி சிணுக்கோரியால் சிக்கெடுத்து ஒருவருக்கொருவர் மரச்சீப்பால் வாரி இடது பக்கம் சாய்த்துப் பெரிய கொண்டையாகப் போட்டுக்கொள்வார்கள். ஓடைகளில் பூத்திருக்கும் ஆவரம்பூவைப் பறித்து ஏற்கெனவே தொடுத்து வைத்திருப்பார்கள். அந்தக் காலங்களில் வேறு பூ கிடைக்காததால் இந்த ஆவாரம்பூவைத்தான் பெண்கள் விரும்பி வைத்தார்கள்.
கட்டுரையாளர், எழுத்தாளர்.
தொடர்புக்கு: arunskr@gmail.com