நகைச்சுவை உணர்வு இல்லாத பெண்கள்?

நகைச்சுவை உணர்வு இல்லாத பெண்கள்?
Updated on
3 min read

கணவன் ஒருவர் தன் மனைவியின் தோற்றத்தைக் கேலியாகப் பேசியவரின் கன்னத்தில் அறைந்த நிகழ்வு கடந்தவாரம் பேசுபொருளானது. ஆஸ்கர் விருதுகள் வழங்கும் மேடையில் நடந்த இந்த நிகழ்வு சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்தது. நோயின் விளைவாகத் தலைமுடி உதிர்ந்து மொட்டையாக இருக்கும் தன் மனைவியின் தோற்றம் குறித்துக் கேலி செய்த தொகுப்பாளர் கிறிஸ் ராக்கை ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் தாக்கியது சரி, தவறு, அன்பின் வெளிப்பாடு என்று பல்வேறுவிதமான விமர்சனங்கள் எழ, ‘உருவக் கேலி’ குறித்துப் பொதுச் சமூகம் உரையாட இந்த நிகழ்வு ஒரு வாய்ப்பாக அமைந்தது.

ஒருவரது புறத்தோற்றத்தையும் ஆளுமையையும் வைத்துக் கேலி பேசி சிரிப்பது நம் பண்பாட்டுடன் கலந்துவிட்ட செயல்பாடாகிவிட்டது. முட்டைக் கண்ணி, போண்டா மூக்கு, மாட்டுப் பல்லன், கோணக் காது என்பது போன்ற விளிப்புகள் குழந்தைப் பருவத்திலேயே நமக்கு அறிமுகமாகத் தொடங்கிவிடுகின்றன. அதனாலேயே நம் சமூகத்தில் உருவக் கேலிகள் இயல்பானவையாகப் பார்க்கப்படுகின்றன.

இது சிரிப்பதற்கு அல்ல

வீடுகள் தொடங்கிப் பொதுக் கூட்டங்கள் வரை பெரும்பாலான தனிமனித தாக்குதல்கள் தோற்றத்தை வைத்தே அமையும். அரசியல் மேடைகளின் பகடிக்குக்கூடக் கணவன் - மனைவி ‘நகைச்சுவை’ தேவைப்படுகிற அளவுக்குத்தான் கருத்துச் செறிவோடும் அரசியல் தெளிவோடும் இருக்கிறோம். நகைச்சுவை என்கிற பெயரில் மனைவியைத் தரம்தாழ்ந்து விமர்சித்துவிட்டு அதற்குச் சிரிக்காத மனைவியைப் பார்த்து, ‘இந்தப் பெண்களுக்கு நகைச்சுவை உணர்வே இருப்பதில்லை’ என்று அலுத்துக்கொள்பவர்கள் அதிகம்.

உடல் குறைபாட்டைக்கூட விட்டுவைக்க மாட்டோம். அதையே அவர்களது அடையாள மாக்கிக் களமாடுவோம். அவர்களைப் புகழ்வதாக நினைத்துக்கொண்டு ‘பார்ப்பதற்கு இப்படி இருக்கிற நபர் எப்படிச் சாதித்திருக்கிறார் பாருங்கள்’ என்று வன்மத்தையே வார்த்தைகளாக்கிச் சொடுக்குவதும் உண்டு. தனிப்பேச்சிலோ, பொதுவிலோ ஒருவரை உருவக் கேலி செய்வதும், உடல் குறைபாட்டைப் பகடிசெய்வதும் காலகாலமாக நடந்துவருகிறது. காலத்துக்கு ஏற்ப அதைக் காக்கும் காரணிகள் மாறுபடுகின்றனவே தவிர, பொதுப்புத்தியில் ஏற்றப்பட்டிருக்கும் பிற்போக்குத்தனத்தில் மாற்றமில்லை.

ஆணின் தந்திரம்

பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்கிற அளவுகோலை நிர்ணயித்தது யார்? நம் பண்பாட்டு அடையாளங்களாகவும் கலைத்திறமையின் சான்றாகவும் நம்மைச் சுற்றி இருப்பவற்றில்கூட அதற்கு விடை உண்டு. கோவில்களில் சிலைகளாகவும் சித்திரங்களாகவும் வடிக்கப்பட்டிருக்கும் பெண்களின் உருவங்கள் எல்லாம் ஆண்களின் அதீத கற்பனையில் உதித்தவை; எதார்த்தத்துக்குச் சற்றும் பொருந்தாதவை. தாய்மையின் பெருமை என்று நிறைசூலியைக் கொண்டாடுகிற கலைப் படைப்புகள்கூட, பிள்ளைப் பேறால் இடை பெருத்து, உடல் தளர்ந்த பெண்களை ஒருபோதும் கண்டுகொள்வதில்லை. இலக்கியங்களில் எழுதப்பட்டிருக்கும் பெண்களின் சித்திரமும் கற்பனாவாதத்தின் உச்சமே. சங்கப் பாடல்களில் வர்ணிக்கப்பட்ட பெண்கள் எல்லாம் பேரண்டத்தின் எந்தக் கோளில் வசிக்கிறார்களோ தெரியவில்லை. இதுபோன்றவற்றைப் பார்த்தும் படித்தும் கேட்டும் பழகிய ஆண்கள், நிஜத்திலும் அதையே எதிர்பார்க்கிறார்கள். அது நிறைவேறாதபோது, ‘அந்தக் காலத்துல பெண்கள் ஆட்டுக்கல்லில் மாவரைத்தார்கள், கையால் துணியைத் துவைத்தார்கள். அதனால்தான் பேரெழிலோடு இருந்தார்கள்’ என்று சொல்லி பெண்களை மீண்டும் சமையலறைக்குள் சாதூர்யமாகப் பூட்டும் வேலையைச் செய்கிறார்கள்.

பொறுப்பற்ற திரைப்படங்கள்

இவற்றின் தொடர்ச்சியாகத் திரைப்படங்கள் பெண்ணுருவம் குறித்த கற்பனையை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றன. ‘சிவப்பான, உயரமான, ஒல்லியான, அழகான பெண் வேண்டும்’ என்று ஆண்கள் பலர் வரன் தேடுவதெல்லாம் நம் திரைப்படங்களின் தாக்கமே. படத்தின் நாயகியரைப் பார்த்து அவர்களைப் போல ‘சைஸ் ஜீரோ’வுக்கு மாறப் பட்டினி கிடக்கும் பெண்களின் உளவியல் நெருக்கடிக்கு அவர்கள் மீது நிகழ்த்தப்படும் உருவக் கேலிகளும் காரணமே. உலக அளவில் பெரும்பாலான இளம்பெண்களின் கனவு பார்பி பொம்மையைப் போன்ற உருவம். அந்தப் பொம்மையின் அங்க அளவுகள்படி இருந்தால் அந்தப் பெண் கைகளையும் கால்களையும் ஊன்றித்தான் நடக்கவேண்டும். அவ்வளவு சிறிய வயிற்றில் பாதி ஈரலுக்கும் சிறிது குடலுக்கும் மட்டுமே இடம் இருக்கும். மாதவிடாய் சுழற்சி நடைபெற சாத்தியமே இல்லை என்கிறார்கள் மருத்துவர்கள். இப்படி இயற்கைக்கு மாறான அளவுகோல்களைப் பெண்ணுக்கு நிர்ணயித்து விட்டு, இயல்பான உடல்வாகுடன் இருக்கும் பெண்களைக் கேலி பேசித் திரிவது எந்தவிதத்தில் நியாயம்? நம் விமர்சனத்தால் தன் நிறம் குறித்தும் தோற்றம் குறித்தும் பெண்களிடம் நாம் ஏற்படுத்துகிற தாழ்வுணர்வு அவர்களை அழகு குறித்த சிந்தனையில் சிக்கவைத்துவிடுகிறது. இதனால், அழகு சாதனப் பொருட்களின் சந்தை வளர்கிறதே தவிர, பெண் முன்னேற்றத்துக்கான சாத்தியக்கூறுகள் பின்னுக்குத் தள்ளப்படுகின்றன.

இதுதான் நகைச்சுவையா?

நூற்றாண்டு வரலாறு கொண்ட இந்தியத் திரையுலகில் பெண்களை இழிவுபடுத்துவதைத்தானே நகைச்சுவை என்று நம் மீது திணிக்கிறார்கள்? பெண்ணைக் கேலி பேசும் வசனங்களையெல்லாம் ஏதோ வாழ்க்கையை மாற்றுகின்ற மந்திரம்போலச் சொல்லிவிட்டு அதற்குப் பாராட்டு எதிர்பார்த்து நிற்கும் அற்ப மனங்களை என்ன செய்வது? இதுபோன்ற கீழ்மைகளுக்கு எல்லாம் நாம் பழக்கப்பட்டுவிட்டதாலோ என்னவோ அக்காவை ‘சூப்பர் ஃபிகர்’ என்று சொல்வதையோ, ‘சங்கு ஊதுற வயசுல சங்கீதா’ என்று முதுமையை விமர்சிப்பதையோ பார்த்து நம்மால் எந்தச் சுரணையுமின்றி சிரிக்க முடிகிறது. அதை அந்தந்த நடிகர்களின் பாணியில் சொல்லிப் பெருமிதப்படவும் முடிகிறது.

எழுதிவைத்ததைப்போல எல்லாப் பெண்களும் அழகுப் பதுமைகளாக ஒரே அளவில் இருக்க வேண்டுமென்றால் அச்சு பொம்மைகளைத்தான் வார்க்க வேண்டும். ஒவ்வொரு பெண்ணைப் போலவே அவர்களது உடலமைப்பும் தனித்துவ மானதுதானே. இதில் ஒன்று சிறப்பென்றும் மற்றது தாழ்வென்றும் எப்படிப் பாகுபடுத்த முடியும்?

கணவர்களின் கவனத்துக்கு

தன் மனைவியின் தோற்றத்தைக் கேலி செய்தவரை அறைந்தது குறித்து நடிகர் வில் ஸ்மித், ‘அன்பு இதுபோன்ற பைத்தியக்காரத் தனங்களைச் செய்ய வைத்துவிடும்’ என்று ஆஸ்கர் விழா மேடையில் சொன்னார். நம்மிடையே எத்தனை கணவன்கள் தங்கள் மனைவியின் சுய மரியாதைக்கு மதிப்பளிக்கிறார்கள்? உடல் பருமனனோடு இருக்கும் மனைவியை ‘குண்டு’ என்று அழைப்பதைக்கூட அன்பின் வெளிப்பாடு என்று சொல்லி தப்பித்துக்கொள்ளும் கணவன்கள், பிறரது விமர்சனத்துக்கு மட்டும் எதிர்வினையாற்றுவார்களா என்ன? குழந்தைகள் முன்னிலையில், ‘உங்க அம்மாவுக்குக் கொஞ்சம்கூட அறிவே இல்லை’ என்று ‘பாராட்டுகிற’ ஆண்கள், பொதுவெளியில் தங்கள் மனைவியின் சுய மரியாதைக்குத் துணைநிற்பார்கள் என்று எதிர்பார்ப்பதற்கில்லை.

நண்பர்கள் மத்தியில் தன் மனைவி குறித்த எதிர்மறை கருத்துகளைச் சொல்லும் ‘என் பொண்டாட்டி ஊருக்குப் போயிட்டா’ வகையறா ஆண்களும் இங்கே அதிகம். பெரும்பாலான ஆண்களைப் பொறுத்தவரை பெண் என்பவள் எல்லாவிதமான கேலிக்கும் விமர்சனத்துக்கும் ஆளாக வேண்டியவள்தான் என்கிற பொதுவான எண்ணம் இருக்கிறது. மனைவி என்று வந்துவிட்டாலோ மடைதிறந்த வெள்ளம்போல் உருவக் கேலியை அள்ளிவீசுவார்கள். ஆண்களும் உருவக் கேலிக்கு ஆளாகிறார்கள்; பெண்களில் சிலர் அதைச் செய்வதும் உண்டு. யாராக இருந்தாலும் ஒருவரது தோற்றத்தை வைத்தோ உடல்குறைபாட்டை வைத்தோ விமர்சிப்பது மானுட அறத்துக்கு எதிரானது. உருவக் கேலி, இரட்டை அர்த்தம் போன்றவையெல்லாம் இல்லாமல் நகைச்சுவையாகப் பேசத் தெரியாது என்கிறவர்கள் வாழ்நாள் முழுவதும் மௌனமாக இருப்பதே நல்லது.

தொடர்புக்கு: brindha.s@hindutamil.co.in

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in