

தற்போது நடைமுறையில் உள்ள இந்தியப் பெண்களின் திருமணத் தகுதியை 18 வயதிலிருந்து 21 வயதாக மாற்ற அரசு ஆலோசித்துவருகிறது. 2006-ம் ஆண்டின் குழந்தைத் திருமணத் தடைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்த பிறகு ஆணுக்கு 21 வயதாகவும் பெண்ணுக்கு 18 வயதாகவும் குறைந்தபட்சத் திருமண வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இது பற்றிய மசோதா 31 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றக் குழுவுக்கு அனுப்பப்பட்டது. பெண்களின் திருமண வயது தொடர்பான அந்தக் குழுவில் ஒரே ஒரு பெண் உறுப்பினர் மட்டுமே இடம்பெற்றுள்ளார். அந்த மசோதாவில், “பெண்களின் பிரச்சினைகளை முழுமையான முறையில் தீர்க்கும் வகையில், பெண்களுக்கு அதிகாரம், பாலினச் சமத்துவம், பெண் தொழிலாளர்களை அதி கரிப்பதற்கான நடவடிக்கையாகக் கட்டாயப் பங்கேற்பு, அவர்களைத் தன்னம்பிக்கை கொண்டவர்களாக ஆக்குதல், அவர்களே முடிவெடுக்க உதவுவதற்கு இந்த மசோதாவை அறிமுகப்படுத்தி குழந்தைத் திருமணத் தடைச் சட்டம் 2006-ஐ திருத்த விழைகிறது” என்று குறிப்பிடப் படுள்ளது.
சட்டத் திருத்த நகை முரண்
இந்தச் சட்டத் திருத்தம் குழந்தை என்பதை 21 வயது நிரம்பாத ஆண் அல்லது பெண் என்று வரையறுக்க முயல்கிறது. அவ்வாறு திருத்தம் செய்யப்பட்டுவிட்டால் பெண்கள் 21 வயது வரை குழந்தைகளாகக் கருதப்படுவார்களாதலால் அவர்கள் 21 வயது வரை திருமணம் செய்ய முடியாது. அவ்வாறு செய்தால் அது குற்றமாகும்.
திருமண வயதை மூன்று ஆண்டுகள் அதிகரிப்பது எப்படிப் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் அல்லது அவர்களைத் தன்னிறைவு அடையச் செய்யும் என்பது அரசாங்கத்துக்கு மட்டுமே வெளிச்சம். திருமணத்திற்கான குறைந்தபட்ச வயதை அரசாங்கம் தீர்மானிக்க விரும்பும்போது, விசித்திரமாக அது பெண்களைத் தாங்க ளாகவே முடிவெடுக்க அதிகாரம் அளிக்கப் போவதாகக் கூறுகிறது. மசோதாவின் நோக்கத்தில் இது மிகவும் வேடிக்கையான அறிக்கை.
இந்தியப் பெரும்பான்மைச் சட்டம் 1875-ன்பிரிவு 3 படி, இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு நபரும் 18 வயதை நிறைவு செய்தவுடன் பெரும்பான்மை வயதை (மெஜாரிட்டி) அடைகிறார். இதே சட்டத்தில் முன்பு ஒருவருக்கு நீதிமன்றத்தால் ஒரு காப்பாளர் நியமிக்கப்பட்டால் அவர் 21 வயதுக்குப் பிறகே வயது வந்தவராகக் கருதப்படுவார் என்று இருந்தது. பின்பு இது திருத்தப்பட்டு தற்போது உள்ள சட்டப்படி யாராக இருந்தாலும் 18 வயதுக்குப் பிறகு அவர் ‘மேஜர்’ என்கிற தகுதியைப் பெறுகிறார். இதில் ஆண், பெண் என்கிற பாகுபாடு எதுவும் இல்லை. இதன்படி 18 வயது முடிந்த எவரும் குழந்தை அல்ல. ‘குழந்தைத் திருமணத் தடைச் சட்டம்’ என்று பெயரிடப்பட்ட சட்டத் திருத்தம் ஒரு நகை முரண்.
18 வயதானால் குழந்தையல்ல
தற்போதைய சட்டம் 18 வயது நிறை வடைந்த யாரும் சொந்தமாகப் பல்வேறு செயல்களைச் செய்ய அனுமதிக்கிறது. அவர் ஒரு பாதுகாவலரால் (கார்டியன்) பிரதிநிதித்துவப்படுத்தப்பட வேண்டிய தில்லை. மற்றவர்களுடன் ஒப்பந்தம் போட முடியும். சொத்துக்கள் வாங்க முடியும். எந்த வேலையையோ தொழிலையோ மேற்கொள்ளமுடியும். பெரும்பாலான மாநிலங்களில் கனரக வாகனங்களை ஓட்ட முடியும். தேர்தலில் வாக்களித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்து மறைமுகமாக இந்த நாட்டின் குடியரசுத் தலைவரையும் பிரதமரையும்கூடத் தேர்ந் தெடுக்கிறார்கள். உண்மை இவ்வாறு இருக்க பெண்களை 21 வயது வரை குழந்தைகள் என்கிற வரையறைக்குள் கொண்டுவந்து அவர்கள் 21 வயது வரை திருமணம் செய்யக் கூடாது என்பது விந்தையானது.
அரசியலமைப்புச் சட்டம் (61-வது திருத்தம்) 1988-ஐ அறிமுகப்படுத்தும்போது, அரசாங்கம் ‘இன்றைய இளைஞர்கள் கல்வியறிவு மற்றும் அறிவொளி பெற்ற வர்கள்’ என்றும் ‘வாக்களிக்கும் வயதைக் குறைப்பது நாட்டின் பிரதிநிதித்துவமற்ற இளைஞர்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்கும்’ என்றும் ‘இன்றைய இளைஞர்கள் அரசியல் விழிப்புணர்வுடன் உள்ளனர்’ என்றும் கூறி வாக்களிக்கும் வயதை 21 வயதிலிருந்து 18 ஆகக் குறைத்தது.
இளையோரின் தெளிவு
யுனிசெஃப்கூட மைனர் திருமணத்தை மட்டுமே குழந்தைத் திருமணம் மற்றும் உரிமை மீறல் என்று கருதுகிறது. குழந்தைத் திருமணத் தடைச் சட்டம், 2006-ன் படி தகுதி பெற்ற பிறகும் பெரும்பாலான பெண்களும் ஆண்களும் திருமணம் செய்துகொள்வதில்லை என்பது வேறு விஷயம். தனியார் நிறுவனத்தால் இந்தியாவில் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பின்படி, பதிலளித்த 10,005 பேர்களில் நான்கில் ஒரு இளைஞர் திருமணம் செய்துகொள்ள விரும்பவில்லை.
வாழ்க்கையைச் சுற்றியுள்ள விதிமுறைகள், மதிப்பீடுகள் மாறும்போது, இந்திய இளைஞர்களும் அண்மைப் போக்குகளால் பாதிக்கப்படுகின்றனர். பத்து வருடத்துக்கு முன்பிருந்ததைவிட இளைஞர்கள் இப்போது தாமதமாகவே திருமணம் செய்துகொள்கிறார்கள். 2016 மற்றும் 2007-ம் ஆண்டுகளில் லோக்நிதி-சிஎஸ்டிஎஸ் நடத்திய ஆய்வின்படி திருமணமான இளைஞர்களின் விகிதம் 2007-ல் 55 சதவீதமாக இருந்து 2016-ல் 47 சதவீதமாக எட்டுப் புள்ளிகள் குறைந்துள்ளது. எனவே, திருமணத்துக்கான பெண்களின் குறைதபட்ச வயதை உயர்த்துவது தேவையற்றது.
- எஸ். கல்யாணசுந்தரம், சென்னை.