

பிறந்த நாளுக்காக விதம் விதமான வடிவமைப்பில் தங்கள் முகங்களை அச்சிட்டு தாங்கள் இருக்கும் பகுதிகளின் சுவர்களில் ஒட்டித் தங்களின் இருப்பைக் காட்டிக்கொள்பவர்கள் பலர் உண்டு. ஆனால், திருநங்கை சுதா இவர்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டுத் தன் 50ஆவது பிறந்த நாளில் தன்னைச் செதுக்கியவர்களை நினைவுகூர்ந்து அவர்களின் செயல்பாடுகளையும் தன்னலமற்ற போராட்டங்களையும் பற்றி எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து ‘திருநங்கை சுதா 50’ என்னும் புத்தகமாக வெளியிட்டுள்ளார்.
திருநங்கைகளின் வாழ்வாதாரத்துக்கும் மாற்றுப் பாலினத்தவர், மாற்றுப் பாலின ஒருங்கிணைவு கொண்டவர்களின் நலன்களுக்காகவும் அரசு மற்றும் தன்னார்வலர்களுக்கு இடையே பாலமாகச் செயல்பட்டுவருகிறார் சுதா. அவர்களுக்குப் பல்வேறு பலன்கள் கிடைப்பதற்குப் போராடிவரும் சமூகச் செயற்பாட்டாளரான இவர், தன்னைப் பற்றியும் தன்னுடைய திருநங்கை சமூகத்தைச் சேர்ந்தவர்களைப் பற்றியும் மட்டும் பேசாமல், தன்னலமற்ற சேவையை சமூகத்தில் வழங்கிக்கொண்டிருக்கும் பல துறைகளைச் சேர்ந்த அரசு அதிகாரிகள், கலைத் துறையைச் சேர்ந்தவர்கள், மருத்துவர்கள், தன்னார்வலர்கள், தனியார் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் எனப் பலரது அணுகுமுறைகளையும் அவர்களிடமிருந்து தான் கற்றுக்கொண்ட பண்புகளையும் மிகவும் நேர்மையாகப் பதிவுசெய்துள்ளார்.
“கல்லாக இருந்த என்னைச் சிற்பமாக வடித்த சிற்பிகளை நினைவுகூரவே இந்தக் கட்டுரைகளை எழுதினேன். இன்னும் எழுத வேண்டிய சிற்பிகள் பலர் இருக்கிறார்கள். அவர்களைப் பற்றியும் தொடர்ந்து எழுதுவேன்” என்கிறார் சுதா.