Published : 27 Feb 2022 12:35 PM
Last Updated : 27 Feb 2022 12:35 PM
ஆண், பெண், மாற்றுப் பாலினத்தவர் எல்லாரையும் சேர்த்ததுதான் இந்தச் சமூகம். அப்படி ஒன்றிணைந்த சமூகத்தால் வேலூர் மாவட்டத்தின் 37வது வார்டில் ஆளுங்கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிக்கொடி நாட்டியிருக்கிறார் கங்கா நாயக்.
அவரிடம் பேசியதில் ‘நான் எல்லாருக்குமானவள்’ என்னும் தொனி வெளிப்படுவதை உணர முடிந்தது.
“ஏறக்குறைய 20 ஆண்டுகளாகக் கட்சியில் இருக்கிறேன். கலைஞர் ஆட்சிக் காலத்தில்தான் திருநங்கை சமூகத்திற்குப் பல நல்ல திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. திருநங்கைகளின் வாழ்வாதாரத்துக்கும் நலத் திட்டங்கள் கிடைப்பதற்கும் பல ஆண்டுகளாகப் போராடி வருகிறோம். உள்ளாட்சித் தேர்தலில் கிடைத்திருக்கும் இந்த வெற்றி, நாங்களும் சமூகத்தில் ஓர் அங்கமே என்பதை நிரூபித்திருக்கிறது.
கடந்த ஆண்டுகளில் திருநங்கைகளின் பிரச்சினைகளுக்காக மட்டும் நாங்கள் போராடவில்லை. வேளாண் நிலங்களில் எரிவாயுக் குழாய் பதிப்பது, விவசாய நிலங்களை அழித்துச் சாலைகளை அமைப்பது, நியூட்ரினோ திட்டம் போன்ற சூழலுக்கு எதிரான திட்டங்களுக்கு எதிராகவும் குரல்கொடுத்திருக்கிறோம். விவசாயிகளையும் விவசாயத்தையும் கடுமையாகப் பாதிக்கும் ஒன்றிய அரசின் மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி டெல்லியில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தில் வேலூர் மாவட்டம் சார்பாக நாங்களும் சென்றோம்.
இப்படிப் பொது மக்களுக்கு இன்னல் விளைவிக்கும் அரசுத் திட்டங்களுக்கு எதிராக எப்போதுமே எங்களின் குரல் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது. ஆகவே, பொதுச் சமூகத்தின் பிரதிநிதியாகத்தான் தேர்தலில் நின்றேன். பொதுமக்களும் என்னை வெற்றி பெறச் செய்திருக்கின்றனர். தனியாக திருநங்கைகளுக்கான நலத் திட்டங்கள் என்று பிரித்துப் பார்க்க வேண்டியதில்லை. எல்லாருக்குமான நலத் திட்டங்களையும் பணிகளையும் செய்வதையே என்னுடைய கடமையாக நினைக்கிறேன். வார்டில் இருக்கும் மக்களின் நலனுக்காகப் பாடுபடும் முன்னுதாரண உறுப்பினராக நான் இருப்பேன்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT