Published : 20 Feb 2022 09:11 AM
Last Updated : 20 Feb 2022 09:11 AM

பெண் எழுத்து: விரலிலா இருக்கிறது கவிதை?

கண் விழித்ததும் அந்தச் சிறுமி தன் வீட்டுக்கு வெளியே ஓடிவருகிறாள். சுற்றியிருக்கும் வயல்பரப்பில் முற்றிய நெற்கதிர்களுக்கு இடையே வளைந்து செல்லும் பாம்பின் தடத்தைப் பார்த்துத் திகைத்து ரசிக்கிறாள். பிறகு, எருமைகள் அமிழ்ந்து கிடக்கும் குளத்தில் தாமரைப் பூக்களோடும் நண்பர்களோடும் சேர்ந்து விழுந்து கிடக்கிறாள். வீட்டிலிருந்து ஆள் தேடி வரும்வரை குளத்திலேயே பழியாக இருக்கிறாள்.

மதிய நேரம் நெருங்குகையில் அம்மாவுடன் சேர்ந்து நெல்லரைக்கத் தலைச்சுமையுடன் மில்லுக்குச் செல்கிறாள். வழியெங்கும் புளிய மரங்களும் புங்கை மரங்களும் நிறைந்திருக்க, குறுக்கிடுகிறது சிற்றாறு. அதில் இறங்கி நடந்தால் கரையேறவே அவளுக்கு மனமிருக்காது. ஆற்றங்கரையிலேயே சிறிது நேரம் அமர்ந்துவிட்டுச் செல்லலாம் என்று அம்மாவைக் கெஞ்சுவாள். பக்கத்திலேயே பேய்க்காடு இருக்கிறது என்று மிரட்டிவிட்டு அழைத்துச் செல்வார் அம்மா. ஆற்றிலிருந்து மில்லுக்கு நடக்கும் வழியில் அடிக்கிற வெயிலில் ஆடையெல்லாம் காய்ந்துவிடும்.

வீட்டுக்குத் திரும்பும் வழியில் வெயில் தாளாமல் கோணிப்பைகளைத் தலையில் போட்டுக்கொண்டு வயலில் நாற்று நட்டுக்கொண்டோ களைபிடுங்கியபடியோ சிலர் இருப்பார்கள். தொலைவிலிருந்து அதைப் பார்க்கும் அந்தச் சிறுமிக்குப் பல வண்ணத்தில் பெரிய பெரிய கொக்குகள் வயலில் அமர்ந்திருப்பதாகத் தோன்றும். தன்னைச் சுற்றியிருந்த ஒவ்வொன்றையும் ரசித்து வளர்ந்த அந்தச் சிறுமி, வளர்ந்தபிறகு அதைத்தானே கவிதையாகவும் வடிப்பாள்?

பஞ்சவர்ணம் இளம்பிறையாக உருக்கொண்டபோது அதைத்தான் செய்தார். ஆனால், குளம், ஆறு, மரங்கள் என்று இயற்கையை ரசிப்பதுடன் அவர் நின்றுவிடவில்லை. தன்னைச் சுற்றியிருந்த மக்களையும் அவர்களின் பாடுகளையும் சேர்த்து எழுதினார். அதுதான் இளம்பிறையின் கவிதைகளை, வாசிக்கிறவர்களின் மனத்துக்கு நெருக்கமானவையாக மாற்றுகின்றன.

மரபுக் கவிதை, புதுக்கவிதை, பின்நவீனத்துவம், எதிர் கவிதை, நவீன கவிதை என்று கவிதைகளில் எத்தனையோ வகைமை இருக்கிறபோதும் இளம்பிறையின் கவிதைகளை ‘எளிமையின் பாடல்கள்’ என்கிற வகைமைக்குள் கொண்டுவந்துவிடலாம். அந்த அளவுக்கு அவை எதார்த்தத்தின் செறிவோடு இருக்கின்றன. நாகப்பட்டினம் மாவட்டம் கொத்தங்குடி கிராமத்தில் பிறந்த இளம்பிறை, சென்னைவாசியாகி 22 ஆண்டுகளாகின்றன. இப்போதும் அவரிடம், ‘பீச்சப்போயி கடற்கரங்கிறே/பேப்பர செய்தித்தாள்ங்கிறே/ஸ்கூல பள்ளிங்கிறே/ ஃப்ரெண்ட தோழிங்கிறே’ (முதல் மனுசி) என்று கேட்டுச் சிரிக்கிறார்கள் தோழிகள்.

கைகூடிய புத்தகக் கனவு

சென்னையில் உள்ள அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றிவரும் இளம்பிறை, பள்ளி நாட்களிலேயே எழுதத் தொடங்கியவர். சிறு வயதில் தஞ்சாவூர், திருவாரூர் புத்தகக் கடைகளுக்குச் சென்றாலும் வாங்கும் அளவுக்குப் பணம் இருக்காது. ஒரு புத்தகத்தை வாங்கி 50, 60 பேர் படித்துவிடுவார்களாம். ஒரு முறை அ. மார்க்ஸ் வீட்டுக்குப் போயிருந்தபோது வீடு முழுக்க இருந்த புத்தகங்களைப் பார்த்து ‘அது வீடா அல்லது புத்தகக் கடையா?’ என்று வியந்துவிட்டாராம். “வீடுதான் இது. உங்களை மாதிரி ஆட்களைப் பயமுறுத்தத்தான் இவ்வளவு புத்தகங்கள்னு சிரிச்சார் அவர்” என்று சிரிக்கிறார் இளம்பிறை. வீட்டில் புத்தகங்களைச் சேகரிக்க வேண்டும் என்கிற தன் இளம்பருவக் கனவு தற்போது கைகூடிவிட்டதாகச் சொல்லும் இளம்பிறை, எவ்வளவு வேலைகள் இருந்தாலும் தவறாமல் புத்தகக் காட்சிக்குச் சென்றுவிடுவாராம். “தமிழர் உரிமை மாநாடு, கம்யூனிஸ்ட் மாநாடு, இலக்கியக் கூட்டம் போன்ற நிகழ்ச்சிகளின்போது விற்கப்படும் புத்தகங்களை மட்டுமே பார்த்த எனக்கு, சென்னையில் நடைபெறும் புத்தகக் காட்சி பெருங்கடலெனக் கண் நிறைத்தது” என்கிறார்.

முதல் புத்தகத்தை அச்சிட்டு சைக்கிளில் கொண்டுவந்து வீட்டில் வைத்துவிட்டு என்ன செய்வதென்று அறியாத சிறுமியாக இருந்தவர், அதன் பிறகு தன் ஐந்து கவிதை நூல்களின் முழுத் தொகுப்பான ‘நீ எழுத மறுக்கும் எனதழகு’, ‘அவதூறுகளின் காலம்’ உள்ளிட்ட கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். வனாந்திரத் தனிப் பயணி (பத்தி - வாசிப்பு - நேர்காணல்), காற்றில் நடனமாடும் பூக்கள் கட்டுரைத் தொகுப்பையும் வெளியிட்டுள்ளார். தன் படைப்புகளுக்காகத் தமிழக அரசின் பரிசு, திருப்பூர் தமிழ்ச்சங்க விருது, களம் இலக்கிய விருது, யாளி அறக் கட்டளை விருது, சேலம் தமிழ்ச் சங்க விருது எனப் பல அங்கீகாரங்களையும் பெற்றுள்ளார்.

உத்வேகமும் உயிர்ப்பும் துள்ளலும் நிறைந்த பாரதியார், பாரதிதாசன் கவிதைகள், ரஷ்ய மொழிபெயர்ப்பு நூல்கள், சிங்கிஸ் ஐத்மாத்தவ்வின் ‘என் முதல் ஆசிரியர்’, அந்நியன் (ஆல்பெர் காம்யு), கிழவனும் கடலும் (எர்னெஸ்ட் ஹெமிங்வே) போன்ற நூல்களிலிருந்துதான் தன் வாசிப்புலகம் விரிவடைந்ததாகச் சொல்கிறார் இளம்பிறை. “அவற்றில் இருக்கும் உண்மைதான் கவர்ந்திழுத்தது. சுத்தலா இல்லாம பளிச்சுனு தெளிவா லகுவா இருக்கும் புத்தகங்களே என் தேர்வு. ஜெயந்தனின் சிறுகதைகள் அடங்கிய ‘அவர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள்’ புத்தகத்தை வாசித்தபோது, பெண்களின் பாடுகளை அவர்களது உளவியலை இவ்வளவு நுட்பமாக எழுதியிருக்கிறாரே என்று தோன்றியது. 80-களில் பெண்களுக் காக ஆண்கள் எழுதவந்தபோது இன்குலாப், பிரபஞ்சன் போன்றோரைக் கொண்டாடி னோமே அப்படித்தான் ஜெயந்தனையும் கொண்டாட வேண்டும் என்று தோன்றியது. ஒளி மாதிரி, காற்று மாதிரி வியாபித்திருக்கின்றன அவர்களது எழுத்துகள்” என்கிறார் இளம்பிறை.

மனத்தை அறுக்கும் பாடல்

தன்னுடைய எளிமையான எழுத்துப் பாணியைச் சிலர் எள்ளலோடு குறிப்பிட்ட போதும் இளம்பிறை தன் பாதையை மாற்றிக்கொள்ளவில்லை. “உணர்வையும் அனுபவத்தையும் கடத்தாத எழுத்தால் என்ன பயன்? விரலிலா இருக்கிறது கவிதை, உணர்வில் தானே உறைந்திருக்கிறது? என் கிராமத்தில் டீ குடிக்க கடைக்கு வரும் ஆண்களும் பெண்களும் நான் எழுதிய ‘அறுவடைக்காலம்’ கவிதையை வாசிக்கச் சொல்லிக் கேட்பார்கள். ‘அல்லுபகல் உழைப்பவள/அடிக்கக் கைய நீட்டாதய்யா... சீக்கிரமா சமச்சித்தாரேன்/ சிடுசிடுனு பேசாதயா...’ன்னு தொடங்கி ‘பச்சவெறகு பத்த நேரமாகுதய்யா/கண்ணு கலங்குதய்யா/ கைநீட்ட நியாயமுண்டா/ உழச்சதால உனக்கு மட்டும்/ உடம்புவலி தாங்கலேன்னு/ஊத்திக்கிட்டு சாராயத்தை..’ன்னு முடிக்கும் முன்னே அவர்களது கண்கள் கலங்கிவிடும். எழுதப் படிக்கத் தெரியாத இந்த மக்களுக்குப் புரிவதைவிடவா வேறு யாருக்கு நம் எழுத்து விளங்க வேண்டும்?” என்று புன்னகைக்கிறார்.

விட்டுப்போன பாத்திரங்களை

வீடு வீடாய்க் கேட்டுப்

பத்த வைக்கும்

நாங்கள் மட்டும்

ஊருக்கொரு பாத்திரமாகச்

சிதறிக் கிடக்கிறோம்

வயிற்றுக்காக

- என்கிற வரிகள் புலம்பெயர் தொழிலாளர் களின் துயரத்தைத் துல்லியமாகச் சொல்லும். பெண்ணின் அழகு குறித்த நம் சமூகத்தின் கற்பிதங்களை ‘சேறு அரித்து/சிவந்திருக்கும் கருங்கால்கள்/சோற்றுப் பஞ்சத்தால்/சுருங்கிவிட்ட வயிறு எனத் தொடங்கும் கவிதை (நீ எழுத மறுக்கும் எனதழகு) தோலுரிக்கிறது.

பெண்களின் துணிவெழுத்து

தற்போது எழுதவரும் பெண்கள் நம்பிக்கையளிப்பதாகக் குறிப்பிடும் இவர், துணிவும் ஆற்றலும் நிறைந்த அவர்கள் எதையும் பூசிமெழுகாமல் உண்மையை உடைத்து எழுதுகிறார்கள் என்கிறார். முகநூலில் எழுதும் பெண்கள் தேர்ந்த சொல்லாடலைக் கையாள்வதுடன் நுட்பமாகவும் எழுதுகிறார்கள் என்கிறார். “சொல்லப்போனால் ஆண்கள் பொறாமைப்படும் அளவுக்குப் பெண்கள் எழுதுகிறார்கள். புதிய தலைமுறைப் பெண்களிடம் தேடல் இருக்கிறது. நேரம் ஒதுக்கி வாசிக்கிறார்கள். பெரியாரையும் பாரதியையும் அவர்கள் வாசித்திருப்பார்கள். இல்லையென்றால் பழைய நியாயங்களை எதிர்த்து இப்படி வாதிட முடியாது” என்று சொல்லும் இளம்பிறை, “பலருக்கு இன்னும் குடும்பம் பெரும் கட்டுப்பாடுகளை விதித்தபடிதான் இருக்கிறது” என்கிறார்.

‘ஆயிரம்

ஆண்டுகள்

வண்டி

இழுக்கிறது...

கொம்பை

மறந்த

மாடு’

என்கிற கவிஞர் காசி ஆனந்தனின் கவிதை வரிகளைக் குறிப்பிடும் இளம்பிறை, சிலர் கொம்பு இருப்பது தெரிந்தும் அடிமைப்பட்டுக் கிடக்க வேண்டிய சூழல் நிலவுவதை வருத்தத்துடன் குறிப்பிடுகிறார்.

பெண்ணை, அவர்களது எழுத்தை மட்டமாக நினைக்கும் போக்கைக் கண்டிக்கும் அவர், பெண்கள் எழுதுவது இழிவானதாகவும் வீணான வேலையாகவும் கருதப்படுவதைத் தாண்டி தொடர்ந்து எழுதத்தான் வேண்டும் என்கிறார்.

துயரத்தால் நமதுள்ளம்

வெடிக்காமலிருக்கட்டும்

இறுக்கத்தால் நம் மூச்சு

நிற்காதிருக்கட்டும்

அலர் தூற்றும் உலகிற்கு

அஞ்சாதே தோழி

கட்டுரையாளர், தொடர்புக்கு: brindha.s@hindutamil.co.in

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x