Last Updated : 13 Feb, 2022 11:14 AM

 

Published : 13 Feb 2022 11:14 AM
Last Updated : 13 Feb 2022 11:14 AM

பார்வை: பெண்களே முடிவு செய்யட்டும்

கர்நாடக மாநிலம் உடுப்பியில் சிறிய அளவில் தொடங்கிய ஹிஜாப் பிரச்சினை உலக அளவில் விவாதிக்கப்படும் அளவுக்குக் கவனம் ஈர்த்துள்ளது. பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு கடலோர கர்நாடக மாவட்டங்களில் பதற்றம் நிலவுகிறது.

ஹிஜாப் (முக்காடு) அணிவது குறித்த சர்ச்சை மங்களூரு மண்டலத்துக்குப் புதிதல்ல. அங்கே ஹிஜாபை ஆதரித்தும் எதிர்த்தும் இஸ்லாமியர் மத்தியிலும் வெளியிலும் விவாதங்கள் நடந்திருக்கின்றன. கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணியத் தடை விதித்தற்கு எதிராகப் போராட்டங்கள் நடந்திருக்கின்றன. 2018-ல் சிக்கமகளூரு அரசு முதல் தரக் கல்லூரியில் ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்பு தெரிவித்துக் காவித் துண்டு அணியும் போராட்டமும் நடந்திருக்கிறது. அப்போதெல்லாம் கல்வித்துறையும் உள்ளூர் தலைவர்களும் தலையிட்டுப் பிரச்சினையை சுமுகமாகப் பேசி முடித்திருக் கின்ற‌னர். அண்மையில் கேரள மாநிலத்தில் மாணவர் காவல் படையில் மதச்சார்பின்மை பாதிக்கப்படுவதாகக் கூறி ஹிஜாபுக்குத் தடைவிதிக்கப்பட்டது. அங்கே அது பிரச்சினையாக மாறவில்லை.

ஆறு பேரின் போராட்டம்

உடுப்பி அரசு பி.யூ.கல்லூரியில் 11 மற்றும் 12 வகுப்பு இஸ்லாமிய மாணவியர் ஹிஜாப் அணிவதற்குக் கடந்த டிசம்பரில் தடை விதிக்கப்பட்டது. டிசம்பர் 31-ம் தேதி இதைக் கண்டித்து தர்ணாவில் ஈடுபட்ட ஆறு மாணவிகள், “கல்லூரியில் நிறைய ஆண் ஆசிரியர்கள் இருப்பதாலும் வெளியில் இருந்து நிறைய ஆண்கள் கல்லூரிக்கு வருவதாலும் ஹிஜாப் அணிய அனுமதிக்க வேண்டும்” எனப் போர்க்கொடி தூக்கினர்.

ஆறு மாணவிகளையும் கல்லூரி நுழைவாயிலுக்கு வெளியே நிறுத்திய கல்லூரி நிர்வாகம், “கல்லூரி சீருடை விதிகளின்படி வகுப்பறை வரை ஹிஜாப் அணியலாம். வகுப்புத் தொடங்கியதும் மாணவிகள் ஹிஜாபைக் கழற்ற வேண்டும்” எனக் கூறியது. அதை ஏற்று 70-க்கும் மேற்பட்ட இஸ்லாமிய மாணவிகள் வகுப்பறைக்குச் சென்ற நிலையில் ஆறு மாணவிகள் மட்டும் நுழைவாயிலில் நின்றவாறு, “எங்கள் கல்வி பாதிக்கப்படுகிறது. தயவுசெய்து எங்களை கல்லூரிக்குள் அனுமதியுங்கள்” என்று பேசும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஏறக்குறைய ஒன்றரை மாதங்களாகக் கழிவறையைப் பயன்படுத்தக் கூடக் கல்லூரி நிர்வாகம் அனுமதிக்கவில்லை. மேலும், மாணவிகளின் ஒளிப்படம், வீட்டு முகவரி, தொலைபேசி எண் ஆகியவை கசிய விடப்பட்டதாகவும், அவர்கள் மிரட்டப்படுவதாகவும் புகார்கள் எழுந்தன.

உடுப்பி பாஜக எம்எல்ஏவும் கல்லூரியின் மேம்பாட்டுக் குழுத் தலைவருமான ரகுபதி பட், மாவட்ட ஆட்சியர் குர்மா ராவ் தலைமையில் நடந்த பல சுற்றுப் பேச்சுவார்த்தையிலும் முடிவு எட்டப்படவில்லை. இரு தரப்பிலும் சுமுகமாகப் போக ஒப்புக்கொள்ளாததால், இந்தப் பிரச்சினை அருகிலுள்ள குந்தாப்பூர் அரசுக் கல்லூரிக்கும் பரவியது. அங்கும் ஹிஜாப் அணிந்த மாணவிகள் கல்லூரிக்கு வெளியே நிறுத்தப்பட்டனர். இதைக் கண்டித்து இஸ்லாமிய மாணவர்கள் போராட்டம் நடத்திய நிலையில், அதை எதிர்த்து இந்து மாணவர்கள் காவித் துண்டுப் போராட்டத்தைக் கையிலெடுத்தனர்.

இந்நிலையில் கர்நாடகக் கல்வித்துறை கல்லூரிகளில் 1984-ம் ஆண்டு கொண்டுவந்த‌ சீருடை விதிமுறைகளைக் கட்டாயமாக‌க் கடைப்பிடிக்குமாறு உத்தரவிட்டது. ஆனாலும் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத், இந்து ஜாகர்ன வேதிகே, எஸ்டிபிஐ உள்ளிட்ட மாணவ அமைப்புகளின் தலையீட்டால் மங்களூரு, சிக்கமகளூரு, ஷிமோகா, பத்ராவதி எனப் பல இடங்களிலும் கல்லூரி மாணவர்களிடையே பிளவு ஏற்பட்டது. அதுவரை ஒரே வகுப்பறையில் ஒற்றுமையாக இருந்த மாணவர்கள் சிலர் காவிக் கொடி பிடித்து ‘ஜெய் ஸ்ரீராம்’ என முழங்கினர்.

வகுப்பறையில் வகுப்புவாதம்

இந்தப் போராட்டம் ஷிமோகாவில் இரு தரப்பினரிடையே கல்வீசும் அளவுக்கு மாறியது. நூற்றுக்கணக்கான இந்து மாணவர்கள் ‘ஜெய் ஸ்ரீராம்’ எனக் கோஷமிட்டுத் தேசியக் கொடி ஏற்றும் கம்பத்தில் காவிக் கொடியை ஏற்றினர். பலரும் இதைக் கண்டித்த நிலையில் கர்நாடக அமைச்சர் ஈஸ்வரப்பா, “இங்கே மட்டும் இல்லை. செங்கோட்டையிலும் காவிக் கொடி ஏற்றப்படும் நாள் விரைவில் வரும்” எனப் பேசியது சர்ச்சைக்குள்ளானது.

மண்டியாவில் கல்லூரிக்குச் சென்ற இஸ்லாமிய மாணவி பீவி முஸ்கான் கானைக் காவிக் கொடி ஏந்தியவர்கள் முற்றுகையிட்டு ‘ஜெய் ஸ்ரீராம்’ என முழங்கினர். அதற்கு அஞ்சாமல் முஸ்கான் தைரியமாக ‘அல்லாஹு அக்பர்’ என முழங்கினார். இதை சர்வதேச அளவில் கவனத்துக்குள்ளாக்கும் முயற்சியில் ஒரு தரப்பினர் தீவிரமாக ஈடுபட்டனர்.

அப்போது முஸ்கான், “ஹிஜாப் எங்களின் உரிமை. அரசமைப்பு எங்களுக்கு இந்த உரிமையை வழங்கி இருக்கிறது. ஒரு சிறிய துண்டு துணிக்காக அவர்கள் எங்களது கல்வியைக் கெடுக்கப் பார்க்கின்றனர்” எனக் கூறியதோடு, ‘எனக்கு எதிராகக் கோஷம் எழுப்பியவர்களில் பெரும்பாலானோர் வெளி ஆட்கள்’ என்றார். இந்நிலையில் மாணவர் களுக்குச் சிலர் காவிக் கொடி, துண்டு, குல்லா ஆகியவற்றை விநியோகிப்பது போன்ற வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கல்வியே முதன்மையானது

கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் கல்வி கற்கும் வாய்ப்புகளே கேள்விக்குறியாகி உள்ள நிலையில், கல்லூரிகளே அண்மையில்தான் திறக்கப்பட்டன. பொதுதேர்வுக்கு ஒரு மாதமே இருக்கும் நிலையில் ஹிஜாப், சீருடையைக் காரணம் காட்டி மாணவிகளைக் கல்லூரிக்குள் நுழைய விடாமல் தடுப்பது நியாயமற்றது. 1983 கர்நாடக கல்விச் சட்டப்படி பி.யூ., கல்லூரி களுக்கு ஒரே சீருடை தொடர்பான விதிகள் இல்லை என மாணவிகளின் வழக்கறிஞர் தேவதத் காமத் சுட்டிகாட்டுகிறார்.

எனினும், 18 வயதுக்கும் குறைவான‌ மாணவி களை வகுப்பறைக்குள் நுழையவிடாமல் தடுத்த‌து இந்திய அரசமைப்பு (பிரிவு 21‍ ஏ) வழங்கியுள்ள கல்வி உரிமையைப் பறிப்ப‌தாகும் என்றும், அரசமைப்புப் பிரிவு 19 (1) (ஏ) தனிநபர் தனது உடையைத் தேர்வு செய்யும் உரிமை என்றும், பிரிவு 25 மத நம்பிக்கைகளைப் பின்பற்றும் உரிமை என்றும் ஒரு தரப்பினர் வாதித்து வருகின்றனர்.

சீருடை தொடர்பான சர்ச்சை என்பது கல்வி நிறுவனத்துக்கும் மாணவர்களுக்கும் இடையிலான பிரச்சினை. அதை இந்து - முஸ்லிம் பிரச்சினையாக மாற்றி இந்த விவகாரத்தை ஏதோவொரு கட்டத்தில் அணைய விடாமல் மேலும் மேலும் எண்ணெய் வார்த்து அமைதிக்குக் குந்தகம் விளைவிப்பவர்கள் யார் என்பது குறித்தும் தீவிர விசாரணை வேண்டியிருக்கிறது. இந்த நிலையில்தான் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, ‘ஹிஜாப் குறித்து யாரும் பேச வேண்டாம்’ எனத் தன் அமைச்சர்களுக்குக் கடிவாளம் போட்டிருக்கிறார்.

“கல்வி நிலையங்களில் அனைவரும் ஒன்றே என்பதை வலியுறுத்தும் விதமாகச் சீருடைகள் அமல்படுத்தப்பட்டிருக்கின்றன. ஆனால், இந்துக்கள் திருநீறு வைத்தும், பொட்டு வைத்தும் வருகிறார்கள். கிறிஸ்தவர்கள் சிலுவை அணிந்தும், சீக்கியர்கள் தலைப்பாகை அணிந்தும் வருகிறார்கள். சாதிக்கேற்றவாறு குறிப்பிட்ட நிறங்களில் கயிறு கட்டிக்கொண்டும் வருகிறார்கள். அதையெல்லாம் அனுமதிக்கும் போது இஸ்லாமியர்களின் ஹிஜாபுக்கு மட்டும் தடை விதிக்கலாமா?” என்கிற மாணவிகளின் கேள்வியில் இருக்கும் நியாயத்தைப் புறந்தள்ள முடியாது.

யார் தீர்மானிப்பது?

அடிப்படையில் ஹிஜாபை அணிவதும் அணியாமல் இருப்பதும் அவரவர் தனிப்பட்ட‌ விருப்பம் சார்ந்தது. பொருளாதார அளவில் முன்னேறிய இஸ்லாமியப் பெண்களுக்கு ஹிஜாப் அணிவதும், அணியாமல் இருப்பதும் பெரிய விஷயமாக இருப்பதில்லை. இறுக்கமான சூழலில் எளிய பின்னணியில் இருந்து முதல் தலைமுறையாகக் கல்லூரி வாசலை மிதிக்கச் செல்வோருக்கு ஹிஜாப் ஒரு அனுமதிச் சீட்டாக இருக்கிறது. அதை அணிந்தால் மட்டுமே வீட்டை விட்டு வெளியே வர முடியும் என்பதே பலருக்கு யதார்த்தம். இந்தச் சூழலில் ஹிஜாபை அனுமதித்தாவது, கல்வியை வழங்குவதே அரசு மற்றும் சமூகத்தின் தார்மிகக் கடமை. பின்னர் அவர்கள் கற்ற கல்வியே ஹிஜாப் தேவையா, தேவை இல்லையா என்பதைத் தீர்மானிக்க வழிகாட்டும்.

கல்வி கற்பதற்கு ஒரு இஸ்லாமியக் குடும்பத்து பெண் என்கிற முறையில் குடும்பத்தால் தனக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் குறித்து கவிஞர் சல்மா தன் முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஒருபக்கம் ஹிஜாப் அணியாவிட்டால் ஃபத்வா சொல்வதும், மறுபக்கம் ஹிஜாப் அணிந்தால் பாகிஸ்தானுக்குப் போ என மிரட்டுவதையுமே அடிப்படைவாதிகள் வழக்கமாகக் கொண்டிருக்கி றார்கள். ஆனால், உண்மையில் ஹிஜாபை அணியுமாறு கட்டாயப்படுத்துவதும், அதை அணிய எதிர்ப்பு தெரிவிப்பதும் பெண்கள் மீது திணிக்கப்படுகிற அப்பட்டமான‌ வன்முறையே.

சமகால அரசியல், பண்பாட்டு மாற்றங்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு எதை ஏற்பது என்பதை சம்பந்தப்பட்ட பெண்களே தேர்வு செய்யட்டுமே. ஹிஜாப் தேவையா, தேவையற்றதா, அது பெண்ணடிமைத்தனத்தின் சின்னமா, மத அடையாளமா என்பது குறித்து அரசும் ஆணாதிக்க அடிப்படைவாதிகளும் விவாதித்து முடிவெடுப்பதுகூட, ஒருவகையில் பெண்கள் மீதான ஆதிக்கம்தானே?

கட்டுரையாளர் தொடர்புக்கு: vinoth.r@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x