பெண் எழுத்து: இரண்டாம் உலகப் போரில் இந்தியக் குழந்தைகளின் வாழ்க்கை

பெண் எழுத்து: இரண்டாம் உலகப் போரில் இந்தியக் குழந்தைகளின் வாழ்க்கை
Updated on
1 min read

இந்திய விடுதலைப் போராட்டக் காலகட்டத்தில் இந்தியக் குழந்தைகளின் வாழ்க்கையைப் பதிவு செய்யும் நூல்களை ‘சாங்ஸ் ஆஃப் ஃப்ரீடம்’ (Songs of Freedom) என்னும் தலைப்பின்கீழ் ‘பெங்குயின் ரேண்டம் ஹவுஸ் இந்தியா பதிப்பகம்’ வெளியிட்டுவருகிறது. இந்த நூல் வரிசையின் புதிய வரவு ‘தட் இயர் அட் மணிக்கோயில்’ (That year at Manikoil) என்னும் நாவல். இதன் ஆசிரியர் அதிதி கிருஷ்ணகுமார் தமிழ்நாட்டில் பிறந்து தற்போது சிங்கப்பூரில் பணியாற்றிவருகிறார். 2016இல் ஆசியாவைச் சேர்ந்த சிறார் எழுத்தாளர்களுக்கான ஸ்கலாஸ்டிக் ஆசிய புத்தக விருதை (Scholastic Asian Book Award) பெற்றுள்ளார்.

நூலின் தலைப்பில் உள்ள மணிக்கோயில் என்பது ஒரு கற்பனை கிராமம். இந்த நாவலின் கதைமாந்தர்களும் கற்பனை மனிதர்களே. 1944இல் இண்டாம் உலகப் போர் நேரத்தில் ஜப்பானிய ராணுவம் வேகமாக இந்தியாவை நோக்கிப் படையெடுத்துவருகிறது. ராஜி, அவளுடைய அக்காக்கள் வசந்தா, வள்ளி ஆகியோருடன் அவர்களின் தாய் பிறந்து வளர்ந்த கிராமமான மணிக்கோயிலுக்கு இடம்பெயர்க்கப்படுகிறார்கள். அவர்களின் அண்ணன் பிரிட்டிஷ்-இந்திய ராணுவத்தில் இணைந்து போரிடுகிறான். ஜப்பானால் ஆக்கிரமிக்கப்பட்ட பர்மா (மியான்மர்), மலயா (மலேசியா) உள்ளிட்ட கிழக்காசிய நாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்ந்துவந்த இந்தியர்கள் பெரும் லட்சக்கணக்கில் இந்தியாவுக்குத் தப்பித்து வந்துகொண்டிருக்கின்றனர். இதுபோன்ற நிகழ்வுகளால் அமைதியிழந்துவிட்ட மணிக்கோயிலில் பெரும் அச்சுறுத்தலுக்கிடையே ராஜியும் அவளுடைய குடும்பத்தினரும் வாழ்ந்துவருகின்றனர். இந்தியாவுக்கு விரைவில் விடுதலை கிடைத்துவிடும் என்னும் நம்பிக்கை வலுவடைந்துகொண்டிருந்தாலும் தம்மால் சுதந்திரக் காற்றை சுவாசிக்க முடியுமா என்னும் நிச்சயமற்ற சூழலில் ராஜியும் அவளுடைய குடும்பத்தினரும் நாட்களைக் கடத்திவருகின்றனர்.

நூலாசிரியரான அதிதியின் தாத்தா, பாட்டி விடுதலைப் போராட்டக் காலத்தில் வாழ்ந்தவர்கள். அதிதியின் பாட்டி காந்தியைச் சந்திப்பதற்குத் தன்னுடைய தாத்தாவுடன் லாரியில் பயணித்தது, பர்மாவிலிருந்தும் மலயாவிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான அகதிகள் தப்பி வந்தது உள்ளிட்ட அனுபவங்களைத் தனது பேத்தியிடம் பகிர்ந்திருக்கிறார். இப்படியாகத் தன் தாத்தா, பாட்டியின் அனுபவப் பகிர்வுகளையும் 1944-45இல் இந்தியாவில் நிகழ்ந்தவற்றையும் உண்மைத் தகவல்களையும் வைத்துக்கொண்டு தன்னுடைய படைப்பூக்கத்தையும் எழுத்துத் திறனையும் பயன்படுத்தி அக்காலகட்டத்தில் வாழ்ந்த சிறுவர்களின் குழந்தைப் பருவத்தை இந்நூலின் வழியாக மீட்க முயன்றிருக்கிறார் நூலாசிரியர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in