என் பாதையில்: வாழத் தெரிந்தவர்கள்!

என் பாதையில்: வாழத் தெரிந்தவர்கள்!
Updated on
1 min read

பாரததேவி எழுதியிருந்த ‘வாயில்லா ஜீவன்களின் பேரன்பு’ கட்டுரை, என்னைத் தரதரவெனப் பல வருடங்கள் பின்னோக்கி இழுத்துச் சென்றுவிட்டது. சிறுமியான நான் ஒவ்வொரு கோடை விடுமுறையின்போதும் என் அத்தை வீட்டுக்குச் சென்றுவிடுவேன். அத்தை வீட்டில்தான் பழுப்பு நிற லட்சுமி இருந்தாள். வீட்டின் பின்பக்கத்தில் அவளைக் கட்டி வைத்திருந்ததால் அந்தப் பக்கம் செல்ல பயப்படுவேன். அதனால் அத்தை துணைக்கு வருவார். “இவளைப் பாரு, உன்னப் பார்த்து பயப்படுறா. நீ என்ன புலியா சிங்கமா?” இப்படி அத்தை என்னைப் பற்றி புகார் சொல்லும்போதெல்லாம் லட்சுமியும் உன்னிப்பாக கவனிப்பது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கும். வீட்டுக்குள் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கும்போது, ‘ம்மே...’ என்று லட்சுமியின் குரல் கேட்டுவிட்டால் போதும். போட்டது போட்டபடி பாய்ந்து செல்வார் அத்தை.

“என்ன தண்ணி தீந்துடுச்சா?” என்று சொல்லிகொண்டு அத்தை ஓட, பின்னாலேயே நானும் ஓடுவேன். அங்கு நிஜமாகவே தண்ணீர் தீர்ந்து போயிருக்கும். லட்சுமியின் விஷயத்தில் அத்தையின் கணிப்பு எப்போதும் சரியாகவே இருக்கும். லட்சுமிக்கு தண்ணீர் வைத்து அவள் குடிக்கும்வரை அவள் முதுகைத் தடவி விட்டு, குடித்தபின் அவளை உச்சி முகர்ந்துவிட்டு அத்தை வருவதைப் பார்க்கும்போது எனக்கு ரொம்ப வேடிக்கையாக இருக்கும்.

அத்தைக்கு வயதானதால் லட்சுமியைப் பராமரிக்க முடியாத நிலை வந்து, லட்சுமியைத் தெரிந்தவரிடம் கொடுத்துவிட்டு அத்தை பட்ட அவஸ்தையைச் சொல்ல முடியாது. தூக்கமும் இல்லாமல் சாப்பாடும் இல்லாமல் பல நாட்கள் பித்துப்பிடித்தது போல இருந்ததைப் பார்க்கவே முடியவில்லை. லட்சுமி தன்னுடன் எடுத்துச் சென்ற அத்தையின் குதூகலம் மனிதனுக்கும் மாட்டுக்கும் இடையேகூட இவ்வளவு ஆழமான பந்தம் இருக்க முடியுமா என்று பிரமிக்கவைத்தது.

அந்தக் காலத்து மக்கள் ஆடு, மாடு,கோழி, வாத்து கூடவே மரம்,செடி கொடிகள் போன்ற உயிருள்ள விஷயங்களை வளர்த்துத் தங்கள் சூழலை உயிர்ப்புடன் வைத்திருந்தார்கள். அவர்களுக்குத்தான் வாழ்க்கையை ‘வாழ’த் தெரிந்திருக்கிறது.

- ஜே .லூர்து, மதுரை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in