பார்வை: பெண்களால் ஆணுக்கு நிகராகப் பணியாற்ற முடியுமா?

பார்வை: பெண்களால் ஆணுக்கு நிகராகப் பணியாற்ற முடியுமா?
Updated on
2 min read

மற்றுமொரு சர்வதேச மகளிர் தினம் நம்மைக் கடந்து சென்றுவிட்டது. ஊடகங்கள் மகளிர் தினத்தைக் கொண்டாடித் தீர்த்தன. வணிக நிறுவனங்கள் தங்கள் வருமானத்தைப் பெருக்க ‘வாங்க, வாழ்க’ என்று எதுகை மோனையில் தள்ளுபடி அறிவிப்புகளை அறிவித்தன. நூறாண்டுகளைக் கடந்தும் இதனை மற்றுமொரு நாளாகக் கடந்து சென்றுவிடும் நிலையிலேயே பெரும்பான்மை பெண்களின் மனநிலை உள்ளது.

தனியார் நிறுவனங்களில் குறிப்பாகத் தகவல் தொழில்நுட்ப, மென்பொருள் பன்னாட்டு நிறுவனங்களில் தொடக்க நிலைப் பணியாளர்களுக்கிடையே கிட்டத்தட்ட சமநிலையில் இருக்கும் ஆண் - பெண் விகிதம் பணித்தர உயர்வுடன் எதிர்விகிதமாயிருக்கிறது என்ற கருத்து பல ஆண்டுகளாக, பல்வேறு தலைப்புகளில் விவாதிக்கபட்டுவருகிறது. பணியிடத்தில் பாலினச் சமத்துவம், பெண்கள் உயர் பதவிகளை அடைதல், இத்யாதி இத்யாதி விஷயங்கள் விவாதிக்கப்படுகின்றன. இவ்வளவு விவாதங்களுக்கும், காலங்களுக்கும் பின்னரும் இவை நிறைவேறாமலிருப்பது துரதிர்ஷ்டமே. அதன் காரணங்கள் பலவாறாக இருக்கலாம். அவற்றுள் முக்கியமானதும் முதன்மையானதுமாகப்படுவது, பெண்கள் மேல் சுமத்தப்படும் எதிர்பார்ப்பு, அவர்கள் மேல் திணிக்கப்படும் சாத்தியமற்ற பொறுப்புகள்.

எது சமத்துவம்?

ஆணுக்கு இணையான பொறுப்புகள் பெண்களுக்குத் தரப்பட வேண்டும் என்பது பாலினச் சமத்துவத்தின் அடிப்படை. ஆண்களுக்கு இணையான பணிப் பங்களிப்பைப் பெண்களும் தர வேண்டும் என்னும் எதிர்பார்ப்பு இதனுடன் இணைந்து வருவது. ஆனால், இது சாத்தியம்தானா? உடற் கூறுகளிலும் உளவியல் கூறுகளிலும் வாழ்க்கை நடைமுறைகளிலும் வேறுபட்டிருக்கும் ஆணிடமும் பெண்ணிடமும் சம பங்களிப்பை எல்லாக் காலகட்டங்களிலும் வாழ்வின் பல்வேறு படிநிலைகளிலும் எதிர்பார்ப்பது எப்படிச் சரியாகும்?

மகப்பேறு விடுப்பு முடிந்து தளர்ந்த மனதையும் உடலையும் தன் இயல்பு வாழ்க்கைக்கும் வழக்கத்துக்கும் தயார்படுத்தி வேலைக்குத் திரும்பும் பெண்ணும், ஒரு வார காலக் குழந்தைப் பேறு விடுப்பை மருத்துவமனையிலும், மனைவி வீட்டிலும் கழித்ததிலேயே களைத்துப் போய்விட்ட ஆணும் ஒன்றா?

வேறுபாட்டை உணர வேண்டும்

ஒரு பெண் பணிக்குச் செல்லும்போது, பெண்ணின் உடற்கூறு, மனக்கூறு, வாழ்வியல் கூறுகளை அங்கீகரித்து, அவற்றின் தாக்கம் பணியினைப் பாதிக்கதவாறு அவளின் பணிப் பங்களிப்பும், அவள் மீதான எதிர்பார்ப்பும் இருக்க வேண்டும். பெண்ணின் வாழ்வோட்டங்களையும், ஆணின் வாழ்வோட்டங்களையும் ஒப்பீடு செய்து, அவற்றுள் இருக்கும் வேறுபாடுகளை உணர்ந்து, அங்கீகரித்து அதன் மூலம் பாலினச் சமத்துவமும், பன்முகமும், பெண்களுக்கு அதிகாரமளித்தலும் நிகழும் என்றால், அதுவே உண்மையானதாக இருக்க முடியும். அதுவே கால ஓட்டத்தில் நிலைக்கவும் முடியும்.

அப்படி வெவ்வேறு தரத்திலான வேலைகளைச் செய்யும்போது ஆணுக்குப் பெண் சம ஊதியம் என்பது எப்படிச் சரியாகும் எனப் பலர் கேட்கலாம். சரிக்குச் சமம் கேட்பதல்ல சமத்துவம். ஏறக்குறைய இருந்த போதிலும் ஏற்றத்தாழ்வு பாராமல் இருப்பதே சமத்துவம்.

சமத்துவம், சம உரிமை ஆகிய கோஷங்களை எழுப்புவது எளிது. ஆனால், யதார்த்த நிலையைக் கணக்கில் எடுத்துக்கொண்டு பார்க்கும்போது நடைமுறைச் சிக்கல்கள் புரியவரும். இந்தச் சிக்கல்களைக் கணக்கில் எடுத்துக்கொண்டு பெண்களுக்கான பணியிடப் பதவிகளையும் பொறுப்புகளையும் நிர்ணயிக்க வேண்டும். பணிக்குச் செல்லும் பெண்கள், நிறுவனத்தின் உரிமையாளர்கள், உயர் மட்ட நிர்வாகம், ஆண் பணியாளர்கள் என அனைத்துத் தரப்புகளும் சிந்திக்க வேண்டிய விஷயம் இது.

நீங்க என்ன சொல்றீங்க?

ஆணும் பெண்ணும் சரிநிகர் சமானம் என்றாலும் எல்லாச் சூழ்நிலையிலும் ஆணுக்கு நிகராகப் பெண்ணால் பணியாற்ற முடியுமா? மகப்பேறு, குழந்தை வளர்ப்பு போன்ற தவிர்க்க முடியாத சூழ்நிலைகளிலும் பெண்களிடம் ஆணுக்கு நிகரான பணிப் பங்களிப்பை எதிர்பார்ப்பது சரியா? ஆனால் அதுபோன்ற நேரங்களில் பெண்களால் ஆணுக்கு நிகராகப் பங்களிக்க முடியாததைக் காரணம் காட்டி அவர்களின் ஊதிய உயர்வு, பதவி உயர்வு போன்றவை புறந்தள்ளப்படுவது நியாயமா? பெண்ணுக்கு வழங்கப்பட வேண்டிய அடிப்படை பணித் தளர்வைக்கூட அவர்களுக்கு வழங்கப்படுகிற சலுகை போலச் சித்தரிப்பதை என்ன செய்வது? ஆணுக்கு நிகராக எல்லா நேரங்களிலும் பணிப் பங்களிப்பைச் செய்ய முடியவில்லை என்றால் பெண்ணை வேலைக்குப் போகாமல் வீட்டுக்குள்ளேயே இருக்கும் படி சொல்கிறவர்களின் பேச்சை எப்படிப் புரிந்துகொள்வது? ஆண்களும் பெண்களும் இந்த நிலையைக் கடந்து வருவது எப்படி?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in